18

siruppiddy

மே 31, 2015

ஊடகவியலாளரைக் கைதுசெய்த பொலிசாருக்கு நீதிமன்றம் கண்டனம்!

யாழ்ப்பாண பத்திரிகை ஒன்றில் பிரசுரமான செய்தி தொடர்பில் கைது செய்யப்பட்ட பிராந்திய ஊடகவியலாளர் லோகதயாளன், பருத்தித்துறை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார். போதுமான குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக இல்லை என்றும், செய்தி
 ஒன்றுக்காக ஊடகவியலாளர் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டா? இல்லையா? என்பது தொடர்பில் கேள்வி எழுவதாகவும் தெரிவித்து பருத்தித்துறை நீதவான் மா.கணேசராஜா அவரை விடுதலை செய்தார்.
எவ்வாறாயினும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் பத்திரிகை ஒன்று தனது செய்திகளைப் பிரசுரிக்கின்ற பொழுது அவற்றின் உண்மைத் தன்மையை தீர ஆராய்ந்து பொறுப்புடன் பிரசுரிக்க வேண்டும் என்றும் தமது தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளார். நீதவான் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளதாவது,
சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள், ஆவணங்களை உற்று நோக்குகின்ற பொழுது குற்றம் என்ன என்பது குறித்து மன்றில் அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கம் அல்லது அறிக்கை தாக்கல் செய்வதற்கு போதுமான கால அவகாசத்தை மன்று பொலிஸாருக்கு வழங்கியிருந்தது.
இந்த வழக்கில் எந்தவிதமான குற்றச்சாட்டும் மன்றில் குறித்த ஊடகவியலாளருக்கு எதிராக முன்வைக்கப்படாத நிலையிலும் மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் பிரிவுகள் உரிய முறையில் பின்பற்றப்படாத நிலையிலும் இவ்வழக்கில் இவ் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டிருப்பது சட்டத்திற்கு விரோதமானதென்று மன்று தீர்மானிக்கின்றது.
மேலும் செய்தி ஒன்றுக்காக ஊடகவியலாளரை கைது செய்வதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் கேள்வியெழுகின்றது. ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டு இருப்பதானது உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்ட வரையறைகளை மீறுவதாகவே மன்று கருதுகின்றது.
மேலும் இவ்வாறான கைதுகள் சட்ட ஆட்சியை கேள்விக்குட்படுத்தும் என்ற காரணத்தினாலும் குறித்த எதிரிக்கெதிராக குற்றச்சாட்டு எதுவும் சுமத்தப்படாத காரணத்தினாலும் மன்று எதிரியை விடுதலை செய்கின்றது என்று நீதிவான் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக