வவுனியாவிலிருந்து பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம் சென்ற இ.போ.ச பேருந்தில் பாடசாலைச்சீருடையுடன் சென்ற பாடசாலை மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவச்சிப்பாயை
பொலிஸ் நிலையத்தில் மறைத்து வைத்துள்ளதாகத் தெரிவித்து பொதுமக்களும் பேருந்தில் சென்ற பயணிகளும் பொலிஸ் நிலையத்தைச்சுற்றிவளைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று பிற்பகல் 4மணியளவில் பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம் சென்ற இ.போ.ச பேருந்தில் பாடசாலைச்சீருடையுடன் மாணவி ஒருவர் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது பேருந்தில்
பயணம் மேற்கொண்ட இராணுவ வீரர் ஒருவர் குறித்த மாணவியை அணுகி தொலைபேசி இலக்கத்தினை கேட்டதுடன் தொல்லைகளும் கொடுத்துள்ளார். இதை அவதானித்த பயணி ஒருவர் குருமன்காட்டிலுள்ள
பொலிஸ் காவல் அரணில் பேருந்தை நிறுத்துமாறு சாரதியிடம் தெரிவித்துள்ளார். பேருந்தை நிறுத்தியதும் இராணுவச்சிப்பாய் பேருந்திலிருந்து
இறங்கி தப்பி ஓடியபோது பேருந்தின் நடத்துனர் துரத்திச் சென்று பிடித்து காவலரணிலுள்ள பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் அவரை பொலிசார் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்களால்
அப்பகுதி சற்று பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது 30 நிமிடங்கள் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வவுனியா
பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று போக்குவரத்து நெரிசலை சரிப்படுத்தியதுடன் பயணிகளுடன் குறித்த பேருந்தை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
பொலிஸ் நிலையத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் பாடசாலைச்சீருடையுடன் சென்ற மாணவிக்கு தொல்லை கொடுத்த
இராணுவச்சிப்பாயை கைது செய்யுமாறு பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்துள்ளனர். இதனால் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் தலைமை பொலிஸ்
நிலையப் பொறுப்பதிகாரி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதுடன் குறித்த இராணுவ வீரரைக் கைது செய்துள்ளதாகவும் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார். பேருந்து விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.