18

siruppiddy

அக்டோபர் 21, 2014

பாகம்-1 யுத்தத்தின் கடைசிகட்ட நாட்களில்தலைவர் பிரபாகரன், தளபதி ஜெயத்துடன் நடந்த சந்திப்பு பற்றி கசிந்த ஓர் சுவாரசியமான தகல்

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் தரப்பில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றிய தகவல்கள் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகின்றன. 2009-ம் ஆண்டு மே மாதம் ஆரம்பத்தில் இருந்து சிறிய பகுதியான முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் இயக்கம் முடங்கிய நிலையில், இலங்கை ராணுவம் அவர்களை முற்றுகையிட்டிருந்தது. மே 2-வது வாரத்தில், அந்த முற்றுகையை உடைத்துக் கொண்டு பிரபாகரனை வெளியே கொண்டுசெல்ல சில முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகளில், மே மாதம் 11-ம் தேதி இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு குழு வெற்றிகரமாக ராணுவ முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியே சென்றது. ஆனால், அந்தக் குழுவில் பிரபாகரன் இல்லை. அந்த வழியில் பிரபாகரனை அழைத்துச் செல்வது சாத்தியமா என்பதை பார்க்க அனுப்பி வைக்கப்பட்ட முன்னோடி குழு அது. சுமார் 30 பேரடிங்கிய அந்தக் குழு முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியே சென்றபின், அதில் இருந்த சிலர் மீண்டும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு திரும்பி வந்தனர் –
 அதே பாதையில் பிரபாகரனையும், வேறு சிலரையும் அழைத்துச் செல்வதற்காக. ஆனால், 11-ம் தேதி இரவு நடந்த இந்த ஊடுருவலை தெரிந்து கொண்ட இலங்கை ராணுவம், அந்த லூப்-ஹோலை சரிசெய்து பாதுகாப்பை பலப்படுத்தி விட்டது. இலங்கை ராணுவத்தின் 59-வது படைப்பிரிவு நிறுத்தப்பட்டு இருந்த இடத்திலேயே இந்த சம்பவம் நடந்தது. முதல் குழுவில் சென்று திரும்பிய ஆட்கள், மீண்டும் 12-ம் தேதி இரவு பிரபாகரனையும் வேறு சிலரையும் அழைத்துக் கொண்டு 59-வது படைப்பிரிவு முற்றுகையிட்டிருந்த இடத்தை அடைந்த போது, இவர்களால் தப்பிச் செல்ல
 முடியவில்லை. சுமார் ஒன்றரை மணி நேர முயற்சியின் பின் மீண்டும் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பிரபாகரனின் மறைவிடத்துக்கு திரும்பினர். அப்போது அந்தக் குழுவில் சென்றிருந்த புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், அதன்பின் ராணுவத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, சமீபத்தில் விடுவிக்கப்பட்டார்.
 அவருடன் பேசிய போது, இறுதி யுத்தத்தின் இறுதி நாள் ஒன்றில், பிரபாகரனை மீண்டும் அவர் சந்தித்தது பற்றி அறிய முடிந்தது. ‘இறுதி நாள் ஒன்றில்’ என்று நாம் குறிப்பிடுவதன் காரணம், மீண்டும் பிரபாகரனை சந்தித்த தேதியை அவரால் சரியாக ஞாபகப்படுத்தி கூற முடியவில்லை. மிகவும் பதட்டமும் பரபரப்புமாக இருந்த அந்த இறுதி நாட்களில் சூரியன் உதிக்கும்போது அன்று என்ன தேதி என்பது பலருக்கு தெரியாமல் இருந்தது என்றார்
அவர். அவர் கூறிய தகவல்களில் நடந்த சம்பவங்களை வைத்து பார்த்தால், இவர் மே மாதம் 14-ம் தேதி, அல்லது 15-ம் தேதி பிரபாகரனை சந்தித்து இருக்கலாம். எமக்கு தகவல் தெரிவித்தவர், விடுதலைப் புலிகளின் தளபதி ஜெயம் (உயிரிழந்து விட்டார்) தலைமையில் இருந்த குழுவினருடன் இருந்தார். இவர்கள் இருந்த பகுதிக்கு மதியம் 3 மணியளவில் திடீரென நாலைந்து பேருடன் பிரபாகரன் வந்தார். மிகவும் சோர்வடைந்த முகத்துடன் வந்த பிரபாகரன், ஜெயத்துடன் சுமார் 5 நிமிடங்கள் பேசினார். அப்போது ஜெயம், “நீங்கள் இங்கே நிற்காதீர்கள். இங்கிருந்து போய் விடுங்கள் ராணுவத்தின் ஸ்னைப்பர் அணியினர் உங்கள்மீது குறி வைக்கலாம்” என்று சொன்னார். அதன்பின் மேலும் ஓரிரு நிமிடங்கள் அங்கே நின்றிருந்த பிரபாகரன், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதன்பின், இரவு 7 மணிக்கு பிரபாகரனிடம் இருந்து ஒரு ஆள் வந்தார். ஜெயத்தையும், எமக்கு தற்போது தகவல் தெரிவித்தவரையும்
 பிரபாகரன் அழைத்துவர சொன்னதாக சொன்னார். இருவரும் சென்றனர். முள்ளிவாய்க்கால் பகுதியில் பிரபாகரனுக்காக தற்காலிகமாக ஒரு இருப்பிடம் தயார் செய்யப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் பாதுகாப்பு பலமாகவே இருந்தது. உள்ளே பிரபாகரன் இருந்த நிலை இவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு ஒரு மருத்துவர் செலைன் (Saline) ஏற்றிக் கொண்டு இருந்தார். மருத்துவ ரீதியாக சில காம்பிளிகேஷன்கள் இருந்த பிரபாகரனுக்கு இரவு பகல் ஓயாத சிந்தனை காரணமாக லேசாக மயக்கம் ஏற்பட்டதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்தார். செலைன் மூலம் ஏற்றப்பட்டு கொண்டிருந்த நிலையில், படுத்திருந்தபடியே இவர்களுடன் சுமார் 15 நிமிடங்கள் பேசினார் பிரபாகரன். வெளியே என்ன நடக்கிறது என விசாரித்தார். அப்போது ஒருவர் வந்து பிரபாகரனை சந்திக்க ஜவான் (விடுதலைப் புலிகளின்
‘புலிகளின் குரல்’ பெறுப்பாளராக இருந்தவர்) வந்திருப்பதாக சொன்னார். “இப்போது வேண்டாம்” என சைகையாலேயே பதில் கூறினார் பிரபாகரன். “அமெரிக்க அதிகாரிகளுடன் நடேசன் (விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்) தொடர்பில் இருக்கிறார். அமெரிக்கா தலையிடும் போல இருக்கிறது. நடேசனிடம் இருந்து நல்ல தகவலை எதிர்பார்க்கிறேன்” என்றார் பிரபாகரன். அதன்பின் ஜெயத்திடம் ஆயுதங்கள் பற்றி விசாரித்தார். கையிருப்பில் அதிகளவு ஆயுதங்கள் இல்லை என தெரிவித்த ஜெயம், இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்றார். இதைக் கேட்டவுடன் பிரபாகரன் ஆச்சரியப்படும் விதமாக சிரித்தார். “கழுதையிடம் ஆயுதங்களுக்கு சொல்லுவோமா?” என சிரிப்புடன் கேட்டார். அவர் ‘கழுதை’ என்று சொன்னது,
ஒருவரின் பட்டப்பெயர். விடுதலைப் புலிகளின் ஆயுத சப்ளைக்கு ஒருகாலத்தில் பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதனை (கே.பி.) சில சமயங்களில் ‘கழுதை’ என்று குறிப்பிடுவார் பிரபாகரன். (கழுதை சுமை ஏற்றி வருவது போல, ஆயுதங்களை கொண்டு வருவார் என்பதற்காக) இதைக் கேட்டு மற்றவர்களும் சிரித்தார்கள். ஆனாலும், அங்கே ஒரு கனமான இறுக்கம் நிலவியது. எப்போதும் துடிதுடிப்புடன் காணப்படும் பிரபாகரன், மிகவும் சோர்ந்த நிலையிலேயே காணப்பட்டார். அவரது குரல்கூட மிக பலவீனமான விதத்திலேயே இருந்தது. இந்த நிலையில் எமக்கு தற்போது தகவல் தெரிவித்தவர் தயங்கியபடி, “இங்குள்ள மக்கள் மத்தியில் சலசலப்பு இருக்கிறது. ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்ல பலரும் முயற்சிக்கிறார்கள். அதை தடுப்பது சரி. ஆனால், தப்பிச் செல்ல முயல்பவர்களுக்கு தண்டனை கொடுக்கிறோம். அது சரியல்ல. மக்கள் எம்மை வெறுக்க தொடங்குவார்கள்” என்றார். இவரை தொடர்ந்து பேச விடாதபடி கையால் பிடித்து தடுத்தார் ஜெயம்…. (அடுத்த பாகம்-2 இல் நிறைவுபெறும்).

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக