நாட்டைக் காப்பாற்றுவதற்கு, சிறிலங்கா அதிபர் விரைவாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
“மைத்திரிபால சிறிசேன அதிபராக ஆறு ஆண்டுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் அதனைத் தொடர வேண்டும்.
ஆனால், அவர் விரைவாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, மகிந்த ராஜபக்சவை பி்ரதமராக நியமிக்க முடியும்.
அவர்கள் ஒன்றாக இணைந்து செயற்படுவதன் மூலம், இலக்குகளை வெல்லும் உறுதி கொண்ட ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியும்.
மகிந்த ராஜபக்சவை இலங்கையர்கள்
விரும்புகின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் அவருக்கு 5.8 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர்.
ஒரு பக்கத்தில் பிரதமராக இருந்து ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை நடத்துகிறார். இன்னொரு பக்கத்தில், சந்திரிகா குமாரதங்க, சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோர் அரசாங்கத்துக்குள் அதிகாரம் செலுத்துகின்றனர்.
எனினும், அரசாங்கம் செயற்படு நிலையில் இல்லை என்று மக்கள் உணர்கின்றனர்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட எல்லா அபிவிருத்தித் திட்டங்களும் முடங்கிப் போயுள்ளன.
அபிவிருத்தித் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், கட்டுமானத்துறையில் பணியாற்றிய ஒரு இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து போயுள்ளனர்.
இதேநிலையை நீடிக்க அனுமதித்தால், ஒட்டுமொத்த பொருளாதாரமுமே சரிந்துவிடும். அது மிகவும் நெருக்கடியான நிலையை ஏற்படுத்தும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நான் மட்டும் வெற்றி கொள்ளவில்லை. முந்தைய ஆட்சிக்காலங்களில் செய்யாதவாறு கொழும்புக்கு ஒரு புதிய முகத்தைக் கொடுத்தேன்.
தானே போரை வெற்றி கொண்டதாக சரத் பொன்சேகா இந்தியாவில் தெரிவித்தார். ஆனால், அவர் இராணுவத்தில் 30 ஆண்டுகள் இருந்தார். ஆனால் அப்போது போரை வெற்றிகொள்ளத் தவறியிருந்தார்.
நாங்கள் (ராஜபக்ச சகோதரர்கள்) பதவிக்கு வந்த பின்னரே, போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதற்கும் கூட 3 ஆண்டுகள் தேவைப்பட்டது.
சந்திரிகா குமாரதுங்க தானே 75 வீதமான போரை வெற்றி கொண்டதாக கூறியிருந்தார். ஆனால் அவரது பதவிக் காலத்தில், எந்த பிரதான வெற்றிகளும் அடையப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.