வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரிய இடமாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து.
சுகவீன விடுமுறையை அறிவித்து இன்று திங்கட்கிழமை(18) முற்பகல்-10 மணி முதல் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தனர்.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஆசிரியர்கள் அங்கிருந்து பேரணியாகச் சென்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதுடன் ஆளுநரைச் சந்தித்து மகஜர் கையளிக்கவும் முயற்சித்தனர்.
எனினும், வடமாகாண ஆளுநர் தற்போது யாழ்.இந்தியத் துணைத் தூதுவரைச் சந்தித்துக் கலந்துரையாடிக் கொண்டிருப்பதால் குறித்த சந்திப்பு முடிவடைந்த பின்னர் ஆளுநரை ஆசிரியர் பிரதிநிதிகள் சந்திக்க முடியும் எனப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த
ஆசிரியர்களுக்கு ஆளுநர் அலுவலக உத்தியோகத்தர்களால் பதில் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் ஆசிரியர்கள் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக வெயிலுக்கு மத்தியில் காக்க வைக்கப்பட்ட பின்னரும் வடமாகாண
ஆளுநரைச் சந்திப்பதற்கு ஆசிரியர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
இதனால்,ஆசிரியர்கள் பொறுமையிழந்தனர். சில ஆசிரியர் பிரதிநிதிகள் ஆளுநர் அலுவலகத்தின் பிரதான நுழைவாயிலின்
கதவினைத் தட்டினர்.
இதன்போதும் வடமாகாண ஆளுநரைச் சந்திக்க அனுமதி வழங்கப்படாமல் நீண்டநேரம் காக்க வைக்கப்பட்ட நிலையில் பொறுமையிழந்த ஆசிரியர்கள் அங்கிருந்து வெளியேறி.
வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஏ-9 வீதியைத் திடீரென இடைமறித்து இன்று நண்பகல்-12 மணி முதல் வீதி மறியல் போராட்டம் முன்னெடுத்தனர்.
ஆசிரியர்களின் இந்த திடீர் நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு அண்மையில் நின்றிருந்த பொலிஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
எனினும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அதற்கு சம்மதிக்காமையால் பொலிஸ் அதிகாரிகள் வாகனங்களை வீதியின் கரையால் செல்வதற்கு அனுமதிக்க முயற்சித்தனர்.
இதனால், கோபமடைந்த போராட்டத்தை முன்னின்று நடாத்திய ஆசிரியர்கள் பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களில் ஒருவர் திடீரென வாகனமொன்றிற்கு முன்னாள் படுத்து முடிந்தால் என் மேல் ஏத்துங்கள் எனக் கூறினார்.
இதனால்,அப்பகுதியில் பரபரப்பு அதிகமானது.
இதன்பின்னரும் பல நிமிடங்கள் பொலிஸாருக்கும், மேற்படி போராட்டத்தை முன்னின்று நடாத்திய ஆசிரியர்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
இதனையடுத்துப் பெண் ஆசிரியர்கள் மற்றும் ஆண் ஆசிரியர்கள் தமது கைகளைக் கோர்த்து வீதியைச் சுற்றி நின்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். இதனால், வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டமையால் ஏ- 9 பிரதான வீதியின் இரு பக்கங்களிலும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள்
தரித்து நின்றன.
இதன்பின்னர் வடமாகாண ஆளுநரைச் சந்திப்பதற்குப் பத்து ஆசிரியர் பிரதிநிதிகளைத் தம்முடன் வருகை தருமாறு பொலிஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கமைய ஆசிரியர்களின் வீதிமறியல் போராட்டம்
கைவிடப்பட்டது.
இந்தநிலையில் பின்னர் ஐந்து ஆசிரியர் பிரதிநிதிகளுக்கு மாத்திரம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
எனினும்,ஆளுநருடன் சந்திப்பு இடம்பெறவில்லை.
இதன்போது வடமாகாண ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட
அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களின் பிரதிநிதிகளுக்குமிடையில் சுமார் அரை மணித்தியாலங்கள் வரை பேச்சுவார்த்தை
இடம்பெற்றது.
குறித்த பேச்சுவார்த்தையில் எழுத்துமூலமான சாதகமான பதில் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் பெ. சிறீகந்தநேசன் தெரிவித்தார்.