18

siruppiddy

ஆகஸ்ட் 31, 2015

இதுதான் நீங்களும் உங்கள் காதலும்.


இன்று காதலுக்காக உயிரை மாய்ப்பவர்களும், ஏங்கித்தவிப்பவர்களும், ஒருத்தனுக்கு பல பெண்களும், ஒருத்திக்கு பல ஆண்களும் போட்டு போடும் நிலையாக காதல் போய்க்கிடக்கு…சினிமாவை நிஜவாழ்க்கையில் காண துடித்து தம் வாழ்க்கையின் பெரும் பகுதியை இழக்கிறார்கள்.. சிலருக்கு பொழுதுபோக்கு…ஆடை மாற்றுவது போல் 
மாற்றுகிறார்கள் ..
எல்லாம் கல்யாணத்தின் பின் காணாமல் போயிடும்.. கண்ணே என்றவன் அடியே எனவும், அன்பே என கொஞ்சியவனை ஏண்டா உன்னை கட்டினேன் என அலுத்து காலம் ஓட்டுபவர்கள் பலர்.. ஆசை அறுபது நாள் 
மோகம் முப்பது நாள் … இது தான் உலகம்… ஒரு நிறுவனம்  இரு நிர்வாகிகள் நடாத்துவது போல் குடும்பத்தை சுவையின்றி நடத்தும் 
நிர்வாகிகளும் உண்டு.. காதல் அங்கு இருக்காது .. இந்த காதல் எல்லாம். வெறும் சப்பை மாற்றர்.. கதையிலும் கவிதையிலும்தான் 
சுவைக்கும்… மற்றும்படி எதுவும் இல்லை.. சந்நியாசி போல் சொல்லலை..உள்ளதை சொன்னேன்.. இது தான் 
இன்றையநிலை காதலும் வாழ்க்கையும்….அக்கம்பக்கம் கேட்டது பார்த்தது… நல்லதை மட்டும் எடுத்துங்கோங்க.., சொல்லிப்புட்டன் ….
அதனால்உங்க அனுபவமா என கேட்காதிங்கோ….எனது எழுதுகோல் காலத்தின் கண்ணாடியாக பயணிக்கிறது… உங்கடை காதலும் நீங்களும் போங்க…
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஆகஸ்ட் 27, 2015

இராணுவ முகாமில் சித்திரவதைக் கூடங்கள் இரகசியங்கள் அம்பலம் !!!

கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தடுத்து வைக்கப்பட்ட கிரித்தலை முகாமில், இரகசிய சித்திரவதைக் கூடங்கள் இயங்கி வந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டி மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கொன்றினூடாகவும், எக்னெலிகொட 
தொடர்பில் கைதாகியுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 7 பேரிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட விசாரணைகள் ஊடாகவும் இந்த சித்திரவதை கூடம் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஊடகவியலாளர் எக்னெலிகொட தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசாரணைகள் மேலும் விரிவுபடுத்தப்படலாம் எனவும் எதிர்வரும் நாட்களில் குறித்த கிரித்தலை முகாமுக்கு விஷேட புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று சென்று நேரடியாக விசாரணைகளை முன்னெடுக்கலாம் என பொலிஸ் தலைமையக தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் தற்போது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வரும் 7 சந்தேக நபர்கள் வெளியிடும் தகவல்களுக்கு அமைய நீதிமன்றம் ஊடாக விசேட அனுமதியொன்று பெறப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் எனவும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கருத்து வெளியிடுகையில், எக்னெலிகொட விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் கிரித்தலை முகாமை சோதனைக்கு உட்படுத்துவதோ அல்லது அங்கு சென்று விசாரணை செய்வது குறித்தோ தற்போதைக்கு எந்த முடிவும் இல்லை எனவும் இது தொடர்பில் விசாரணைகளின் நிறைவில் முழுமையான 
தகவல்களை தன்னால் வெளியிட முடியுமாக இருக்கும் என தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இதுவரை குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்துள்ள விசாரணைகளில், பிரகீத் எக்னெலிகொட ராஜகிரியவிலிருந்து 
கடத்தப்பட்டு கிரித்தலை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதும் அங்கு அவர் சித்திரவதை செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் 
தெரியவந்துள்ளது. கடத்தப்பட்டு நான்கு நாட்களில் அப்போது கிரித்தலை முகாமுக்கு பொறுப்பாக இருந்த தற்போது புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள அதிகாரிகளினால் அவர் அந்த முகாமில் இருந்து அழைத்துச் சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந் நிலையிலேயே எக்னெலிகொட கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் புலனாய்வுப் பிரிவு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 7 பேரையும் தொடர்ந்தும் விசாரணைக்கு 
உட்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஆகஸ்ட் 24, 2015

ஊழல் மோசடி கோட்டாபய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாரியளவிலான ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் இவ்விசாரணையானது, தற்போது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.
குறித்த விசாரணைகளின் நிமித்தம், கோட்டா காலை 10 மணியளவில் அங்கு சென்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ரக்ன லங்கா நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான வாக்குமூலத்தை பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று விசாரணை
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம், இன்று (திங்கட்கிழமை) விசாரணை நடத்தப்படவுள்ளது.
பாரியளவிலான ஊழல் மோசடி ஆணைக்குழுவால் கோட்டாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரணைகள், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் ஆயுதக் களஞ்சியசாலைகளை நடத்தியமை, லங்கா ஹொஸ்பிடல் பங்கு மோசடி, மிக் விமானக் கொள்வனவு உள்ளிட்ட பல ஊழல் மோசடிகள் குறித்து கோட்டா மீது ஏற்கனவே லஞ்ச ஊழல் ஆணைக்குழு, நிதி மோசடி விசாரணைப் பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு என்பன விசாரணை நடத்தியிருந்தன.
எனினும், தமது கைதினை தடுக்கும் வகையில் கோட்டா நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்து, நீதிமன்றமும் அதற்கான அனுமதியை கொடுத்திருந்தது. எனினும், குறிப்பிட்ட சில விடயங்களை தவிர்த்து ஏனைய குற்றச்சாட்டுக்களுக்காக அவரை கைதுசெய்யலாமென நீதிமன்றம் தெரிவித்தது.
தொடர்ந்து, பிரபல ரகர் வீரர் தாஜூதீனின் கொலைச் சம்பவத்திலும் கோட்டா பேசப்பட்டார்.
இந்நிலையில், இன்றைய விசாரணைகளின் பின்னர் கோட்டா அநேகமாக கைதுசெய்யப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஆகஸ்ட் 23, 2015

பல உயர் அரசியல்வாதிகள் கைது செய்யப்படக் கூடிய சாத்தியம்???


லங்கையில்  அடுத்து வரும் நாட்களில் உயர் அரசியல்வாதிகள் பலர் கைது செய்யப்படவுள்ளனர்.
நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.
ஏற்கனவே பொதுத்தேர்தல் நடைபெற்றமை காரணமாக தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
நிதிக்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்காக ஏற்கனவே மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன.
இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோரும் விரைவில் விசாரணைக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன துஸ்பிரயோகம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தொடர்பான விசாரணைகளும் நிறைவுக்கு வந்துள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஆகஸ்ட் 22, 2015

கடற்படைவசமிருந்த 40 ஏக்கர் காணிகள் ஒப்படைப்பு!

திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 40 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஒப்புதல் கடற்படையினரால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கப்பட்டுள்ளது. சம்பூரில் 
உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கியதன் பின்னர், மூதூர் பிரதேசத்திற்கு பொறுப்பான கடற்படை தளபதி விசன்க புஷ்பகுமார, கடற்படையினரிடமிருந்த காணிகளில் 40 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான ஒப்புதலை ஜனாதிபதியிடம் கையளித்தார். 
அண்மைக்காலமாக சம்பூரில் கடற்படையினரிடமுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை மீண்டும் அவர்களிடமிருந்து மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையிலேயே இன்று இந்த நடவடிக்கை 
மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த பகுதிகளிலும் மக்கள் குடியமர்த்தப்படலாம் என்று நம்பப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஆகஸ்ட் 20, 2015

நாளை ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம்

ரணில் விக்கிரமசிங்க நாளை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
இந்த நிகழ்வு நாளை காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஆகஸ்ட் 17, 2015

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இலங்கையில் பரபரப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறும் புத்தகம் ஒன்று, இலங்கையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபாகரன் இலங்கையில் தனி ஈழம் கேட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போராடி வந்தனர்.
கடந்த 2009–ம் ஆண்டு, சிங்கள ராணுவத்துடனான விடுதலைப்புலிகளின் போர் உச்சக்கட்டம் அடைந்தது. அப்போது (2009–ம் ஆண்டு, மே மாதம் 18–ந் தேதி) விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்று விட்டதாக அறிவித்தது. இது தொடர்பாக புகைப்படங்களும் வெளியாகின.
அத்துடன் இலங்கை உள்நாட்டு போரும் முடிவுக்கு வந்து விட்டது.
ஏற்காத தமிழ் ஆர்வலர்கள்
ஆனால் பிரபாகரன் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டார் என்ற இலங்கை அரசின் அறிவிப்பை இன்னும் பல தமிழ் அமைப்புகளும், தமிழ் ஆர்வலர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
‘‘பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், மீண்டும் வருவார், தனி ஈழ விடுதலைப்போரை மீண்டும் முன்னெடுத்துச்செல்வார், தமிழ் ஈழம் மலரும்’’ என்று பலரும் கூறி வருகிறார்கள். பிரபாகரன் கொல்லப்பட்டதாக படங்கள் வெளியிடப்பட்டபோது, அவரைப் போன்ற தோற்றம் கொண்டவரைத்தான் சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்று விட்டது என்றும் தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது.
உயிருடன் பிரபாகரன்?
இந்த நிலையில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், சிங்கள ராணுவத்துக்கு லஞ்சம் வழங்கி அவர் தப்பிச்சென்று விட்டதாகவும், இந்தியாவுக்கு வந்த அவர் டெல்லியில் திரிலோக்புரி என்ற இடத்தில் உள்ள ஓட்டலில் ஒன்றரை வருடம் தங்கி இருந்ததாகவும்
 அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த புத்தகத்தின் பெயரையோ, அதை எழுதியது யார் என்றோ எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
பரபரப்பு
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என புத்தகம் வெளியாகி இருப்பது குறித்து வெளியான தகவலால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசும், அந்த நாட்டின் அரசியல்வாதிகளும் கலக்கம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும், இலங்கை ராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர், பிரபாகரன் தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என மறுத்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஆகஸ்ட் 16, 2015

பொலிசாருக்கு அதிகாரம் வாக்களிப்பை சீர்குலைக்க முயன்றால் துப்பாக்கிச் சூடு!

அமைதியான- நீதியான தேர்தலை சீர்குலைக்க முயற்சிக்கும் நபர்களை துப்பாக்கியால் சுடும் அளவிற்கு, பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
அமைதியாக தேர்தல் நடத்தப்படுவதனை தடுக்க முயற்சிக்கும் எந்தவொருவரையும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எவ்விதமான அச்சமும் சந்தேகமும் இன்றி தைரியமாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கத் தேவையான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் அமைதியான முறையில் வாக்களிப்பதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் 
ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் நாச வேலைகளில் ஈடுபட எவருக்கும் அனுமதியளிக்கப்படமாட்டாது.சட்டவிரோதமான செயற்பாடுகள் 
இடம்பெற்றால் குறித்த வாக்குச் சாவடியின் வாக்களிப்பினை சூன்யமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் திட்டவட்டமாக ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஆகஸ்ட் 14, 2015

சிறைகளில் இன்னும் சித்திரவதைகள் தொடர்கின்றனவா?

இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக வெளியாகியுள்ள அறிக்கை குறித்து தமக்கு தெரியாது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இந்த தகவலை செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் பின்னரும் இலங்கை சிறைகளில் படையினரின் சித்திரவதைகள் தொடர்வதாக லண்டனை தளமாகக்கொண்ட FED என்ற அமைப்பை கோடிட்டு தெ காடியன் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவோரே இந்த சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக அமைப்பு தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டில் இருந்து மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது 148 சம்பவங்கள் இவ்வாறான வகையில் இடம்பெற்றுள்ளன.
அந்த சித்திரவதைகள், 2015ஆம் ஆண்டிலும் தொடர்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவோர் பெரும்பாலும் தமிழர்களாக உள்ளனர்.
இதற்கான காரணம் அவர்களில் பெரும்பாலானோரின் உறவுகள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருப்பதாகும் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புலிகளை பணத்தைக் கொடுத்தேனும் அழித்தோம்???


பிரபாகரனுக்கு பணம் கொடுத்தேனும் இந்த நாட்டில் முழுமையாக புலிகளை அழித்து விட்டோம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியினர் புலிகளுக்கு பணத்தையும் கொடுத்துவிட்டு நாட்டையும் கொடுக்கவே முயற்சித்தனர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம்ஜெயந்த தெரிவித்தார்.
தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசாங்கம் அமையுமானால் சம்பந்தனின் கோரிக்கை நிறைவேற்றப்படும். தனிநாடு உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான தருணத்தில் நாம் இருக்கின்றோம். நல்லாட்சி என்ற பெயரில் கடந்த எட்டு மாதகாலம் மிகவும் மோசமான சூழலுக்குள் நாடு தள்ளப்பட்டுள்ளது.
ஜனநாயகம் முழுமையாக வீழ்த்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில் இதுவரை காலம் இடம்பெறாத வகையில் மிகப்பெரிய நிதி மோசடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
மத்திய வங்கி விடயத்தில் அரசாங்கத்தினால் தன்னை நியாயப்படுத்த முடியாமல் போயுள்ளது. இலங்கையின் பிரஜை இல்லாத ஒருவரை எவ்வாறு மத்தியவங்கி ஆளுநராக நியமிப்பது என்ற கேள்வியை நாம் ஆரம்பத்தில் இருந்தே கேள்வி எழுப்பியிருந்தோம்.
அதேபோல் மத்தியவங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நியமனம் பெற்று இந்தப் பொறுப்பினை ஏற்கவில்லை. ஆகவே இவர்களின் சூழ்ச்சி திட்டம் தொடர்பில் நாம் முன்வைத்த சந்தேகக் கேள்விகள் அனைத்தும் இன்று உண்மை என்று நிரூபனமாகி வருகின்றன.
அதேபோல் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் சிங்கப்பூர் பிரஜையாவர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கட்சி மாறிய உறுப்பினர்கள் அனைவரும் தாம் வெளியேறி இரண்டு தினங்களில் சிங்கப்பூர் சென்று திரும்பி வந்தார்கள்.
இன்று இவர்கள் செலவழிக்கும் பணம் இவர்களது பூர்வீக சொத்தும் அல்ல. அப்படியாயின் இவர்களுக்கு எவ்வாறு இந்தத் தொகை பணம் கிடைத்தது. இவை அனைத்தும் ஒரு கூட்டு வேலையாக இடம்பெற்றுள்ளது.
அதாவது இந்த சம்பவத்தின் பின்னணியில் பண பரிமாற்றல் மோசடிகள் நடைபெற்றுள்ளன. கறுப்புப்பண வியாபாரம் பாரிய அளவில் நடைபெற்றுள்ளது.
ஆரம்பத்தில் இந்த நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்தும் வகையில் பிரபாகரன் அன்று மத்திய வங்கி மீது தாக்குதல் நடத்தினார். அந்த தாக்குதல் சம்பவம் இந்த நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் இப்போது ஐக்கிய தேசியக் கட்சி அர்ஜுன் மஹேந்திரனை பயன்படுத்தி இந்த நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக வீழ்த்த பாரிய திட்டத்தை வகுத்து வருகின்றது.
எமது மக்களின் பணத்தை இன்னொரு நாட்டின் பிரஜையும் அவரது குடும்பமும் அனுபவிக்க பிரதமர் ரணிலும் ஐக்கிய தேசியக் கட்சியும் உதவி செய்து வருகின்றனர்.
ஆனால் பிரபாகரனுக்கு நாம் பணம் கொடுத்ததாகவும் பயங்கரவாதத்தை நாம் வளர்த்ததாகவும் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். இவர்கள் கூறுவதைப்போல் வைத்துக்கொண்டால் நாம் புலிகளுக்கு பணம் கொடுத்தேனும் இந்த நாட்டில் முழுமையாக புலிகளை அழித்துவிட்டோம்.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியினர் புலிகளுக்கு பணத்தை கொடுத்துவிட்டு நாட்டையும் கொடுக்கவே முயற்சித்தனர். இன்றும் அந்த முயற்சி கைவிடப்படவில்லை.
நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவுடன் வடக்கின் பிரிவினைவாதிகளின் நாட்டை பிரிக்கும் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். எமது ஆட்சியில் வாய்மூடி செயற்பட்ட கூட்டமைப்பு பிரிவினைவாதிகள் இப்போது மீண்டும் தமது கொள்கையினை முன்னெடுக்க ஆரம்பித்து விட்டனர்.
மீண்டும் தனி நாடு என்ற கொள்கையில் இயங்க ஆரம்பித்து விட்டனர். இந்தத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசாங்கம் அமையுமானால் இந்த நாட்டில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
அதேபோல் ரிஷாட், ஹக்கீம் ஆகியோர் கேட்கும் கரையோர மாவட்டக் கொள்கையும் நிறைவேற்றப்படும். இவர்களது இரகசிய ஒப்பந்தங்கள் அனைத்தும் மீண்டும் இயங்க ஆரம்பித்துவிடும்.
ஆகவே இவை அனைத்தையும் தடுக்கும் நோக்கத்தில் நாட்டை காப்பாற்றவே நாம் மக்களின் ஆதரவை கேட்கின்றோம்.
மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரிவினைவாத ஆட்சியை தோற்கடித்து ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த தலைமையில் பலமான ஆட்சியை அமைக்க அனைத்து மக்களும் இன மத பேதமின்றி ஒன்றிணைய அழைக்கின்றோம் என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஆகஸ்ட் 09, 2015

புலிகளின் தலைவர் பதில் தமிழீழம் கைகூடிவிட்டால்!


ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ்வகையான நாடாக அமையும் என பிரபாகரனிடம் இந்திய ஊடகம் ஒன்று 1986 இல் கேள்வி கேட்டபோது அதற்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் பதிலளிக்கையில் தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப்பெறும். சோசலிசம் என்பதன் மூலம் சமத்துவமான சமூக அமைப்பை நான் கருதுகின்றேன். இதில் மனித சுததிரத்திற்கும் தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதமுண்டு.

எல்லாவித ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயகமாக அது திகழும். தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து தமது கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புக்கள்  கிடைக்கின்ற ஒரு சுதந்திர சமூகமாக  தமிழீழம் அமையும்.

இந்தச் சுதந்திரத் தமிழீழம் நடுநிலை நாடாக இருப்பதுடன் அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் அத்தோடு இந்தியாவோடு நேச உறவு கொண்டு அதன் பிராந்தியக் கொள்கைகளை குறிப்பாக இந்துமகா சமுத்திரத்தை ஒரு சமாதானப் பிராந்தியமாக்கும் வெளிநாட்டுக்கொள்கையைக் கெளாரவிக்கும் தமிழீழ மண்ணுக்கேற்ற கோட்பாட்டிலேயே கடைப்பிடிப்போம் என்பதை பிரபாகரன் திட்டவட்டமாக தெளிவாக்கி இருந்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஆகஸ்ட் 05, 2015

மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்குஆதராவாக பாதயாத்திரை!

மிருசுவிலில் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு நியாயம் வேண்டி கடற்படை வீரர் ஒருவர் பாதயாத்திரையொன்றை ஆரம்பித்துள்ளார். மிருசுவிலில் வீடகளைப் பார்க்கச் சென்ற பொதுமக்கள் 
எட்டுப்பேரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தி குறித்த இராணுவ அதிகாரிக்கு அண்மையில் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இந்த இராணுவ அதிகாரிக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி,
 ஊனமுற்ற கடற்படை வீரர் ஒருவர் பாத யாத்திரை ஒன்றை ஆரம்பித்துள்ளார். அனுராதபுரத்தைச் சேர்ந்த என்.டி. வசந்த குமார என்ற நபரே இவ்வாறு பாத
 யாத்திரையை ஆரம்பித்துள்ளார். கடந்த மூன்றாம் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதியின் முன்னிலையிலிருந்து இந்த பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. விதிக்கப்பட்ட மரண தண்டனை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி இந்த குறித்த கடற்படைவீரர் பாத யாத்திரை மேற்கொள்கின்றார்.
இந்த கடற்படை வீரர் அனுராதபுரத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரையில் பாத யாத்திரையாக சென்று மகஜர் ஒன்றை ஒப்படைக்கவுள்ளார். இந்த மகஜரில் தனது எட்டு சுய கோரிக்கைகளையும்
 உள்ளடக்கியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஆகஸ்ட் 02, 2015

தேர்தல் குறித்த புலனாய்வுப்பிரிவின் கருத்துக் கணிப்பு!

தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பான கருத்துக் கணிப்பு அறிக்கை ஒன்றை அரச புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர். அவ்வறிக்கையின் பிரகாரம் மகிந்த ராஜபக்ச அணியினரை விடவும் ரணில் விக்ரமசிங்க அணியினர் பலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு, மற்றும் மாத்தளை, கேககாலை ஆகிய மாவட்டங்களின் முடிவுகள் நிச்சயமற்றிருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சி 90 ஆசனங்களைக் கைப்பற்றும் எனவும், 12 முதல் 14 தேசியப் பட்டியல் 
ஆசனங்களைப் பெறும் வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 81 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை, 10 முதல் 12 தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெறும் நிலை இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜே.வி.பி 12 ஆசனங்களைப் பெறும் அதேவேளை, 2 முதல் 3 தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெறும் நிலை இருக்கிறது.
வடகிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களைக் கைப்பற்றுவதுடன் 2 - 3 தேசியப் பட்டியல் ஆசனங்களைப் 
பெறும் என்றும், ஐக்கிய தேசியக் கட்சி 9 மாவட்டங்களிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 9 மாவட்டங்களிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு மாவட்டங்களிலும் வெற்றிபெறும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், வெளிநாட்டு தூதரகப் பிரிவினரால் தயாரிக்கப்பட்டுள்ள கணிப்பீட்டு ஆய்வறிக்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11 மாவட்டங்களிலும், ஐக்கிய தேசியக் கட்சி 8 மாவட்டங்களிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று மாவட்டங்களிலும் வெற்றிபெறும் நிலை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிக்கு நெருக்கமான தரப்பினர் மேற்கொண்ட கணிப்பீட்டு அறிக்கையும் தூதரகப் பிரிவின் அறிக்கைக்கு ஒத்ததாகவே இருக்கிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட கணிப்பீட்டு அறிக்கையின்படி 14 மாவட்டங்களிலும் அந்தக் கட்சி வெற்றிபெறும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
யார் என்ன சொன்னாலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 18 மாவட்டங்களில் வெற்றிபெறும் என அண்மையில் மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளியான கணிப்பீடுகளின் நோக்கின் எந்தவொரு கட்சியும் 113 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அதிகாரத்தைப் பெறாது என்பது தெளிவாகியுள்ளது.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகிய கட்சிகளுடனான உடன்படிக்கையின் மூலம் தேவையான 30 ஆசனங்கள் பகிரப்படும் அதேவேளை, பிரதான கட்சிகளிடையே 195 ஆசனங்கள் 
அல்லது அதற்கு கிட்டிய ஆசனங்கள் பகிரப்படும் நிலை உருவாகலாம்.
எதுவாயினும் எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மையை பெறப்போவதில்லை என்பது இப்பொழுதே தெளிவாகியுள்ளமையினால் அடுத்த நாடாளுமன்றம் தேசிய அரசாங்கமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

எமக்கான நீதி இன்றே கிடைத்தாக வேண்டும்! ஈழத்தமிழர் மக்களவை!

தமிழர் தாயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புப் போரின்போது தமிழ்மக்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரனையை உலக்த்தமிழர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கையில் சிறிலங்கா அரசுடன் இணைந்து உள்ளக விசாரனை பொறிமுறை ஒன்றினை உருவாக்க ஐ.நா. சபை திட்டமிட்டுள்ளமை அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்பதை ஐ.நாவில் இருந்து கிடைத்துள்ள ஆவணம் ஒன்று ஏற்படுத்தியுள்ளதாக சனல்-4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சிங்கள தேசத்தில் ஏற்பட்டிருந்த ஆட்சி மாற்றத்தினை காரணம்காட்டி அமையப்பெற்றுள்ள நல்லாட்சி அரசாங்கத்திற்கு
 ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டிய விசாரனை அறிக்கையினை வரும் செப்டெம்பரிற்கு ஒத்திவைத்திருந்தது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை.
ஏற்கனவே ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் என்றோ கிடைத்திருக்க வேண்டிய நீதிக்காக தமிழர்களாகிய நாம் காத்திருக்கையில் ஆறு மாதங்கள் ஒத்திவைப்பும் எம்மீது வலிந்து திணிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் செப்டெம்பரில் வெளிவரவுள்ள விசாரனை அறிக்கை குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ஏமாற்றத்தினையும் தந்துள்ளது. தொடர்ந்தும், பாதிக்கப்பட்ட தரப்பான எமது அபிலாசைகளைப் புறக்கணித்து பாதிப்பினை 
ஏற்படுத்திவரும் சிங்கள அரசிற்கு சார்புடையதான போக்கில் ஐ.நா.மன்றம் செயற்படுவதானது நீதியின் மாண்பினை கேள்விக்குள்ளாக்குவதாகவே அமைகின்றது.
நீதிக்குப் புறம்பாக சிறிலங்கா அரசுடன் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிக்கு ஆதரவு வழங்குமாறு தமிழர்களின் முதல்வரான பெருமதிப்பிற்குரிய நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் மீது ஐ.நா.மன்றத்தில் இருந்து அழுத்தம் பிரயோகிக்கப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அறவழி, ஆயுதவழி, அரசியல்வழிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான போராட்டம் முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின்னர் ஐ.நா.மன்றத்தின் நீதி விசாரனையில் நிலைகுத்தி நிறுத்தப்பட்டுள்ளதென்றால் சர்வதேச சமூகத்தின் மீது நாம் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடேயாகும்.
எம்மை அழித்தொழித்து அடிமைப்படுத்தி அடக்கியாள நினைக்கும் சிங்களத் தரப்பின் நலன்களை முன்னிறுத்தி எமக்கான நீதி தொடர்ந்தும் திட்டமிட்டு மறுக்கப்பட்டு வருவதனை எக்காரணம் கொண்டும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
நேற்றே எமக்கு கிடைத்திருக்க வேண்டிய நீதியானது இன்றே கிடைத்தாக வேண்டும். இதுவே எமது இறுதியானதும் உறுதியானதுமான நிலைப்பாடாகும்.
நீங்கள் எமக்கான நீதியை தரமறுத்தாலும் நாம் தொடர்ந்தும் நீதிக்கான கதவை தட்டிக்கொண்டே இருப்போம். ஏன் என்றால் கேட்கும் இடத்தில் நாங்கள்(தமிழர்கள்) இருக்கின்றோம். கொடுக்கும் இடத்தில் நீங்கள்(சர்வதேச சமூகம்) இருக்கின்றீர்கள்.அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை....
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>