18

siruppiddy

ஆகஸ்ட் 31, 2021

நாட்டில் சீனிக்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடு நீண்ட வரிசையில் மக்கள்

இலங்கையில் சீனிக்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.இந்நிலையில் சதொசயில் விற்பனை செய்யப்படும் சீனியை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் லசந்த அழகியவண்ண வெளியிட்ட தகவலை அடுத்து சதொசயில் சீனியின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி, தற்போது 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அதற்கமைய நேற்றைய தினம் முதல் 10 ரூபாவினால் சீனியின் விலையை அதிகரிக்க சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் ஒரு குடுபத்திற்கு ஒரு கிலோ சீனி மாத்திரமே விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனை பெற்றுக் கொள்வதற்கு சதொச நிறுவனங்களுக்க முன்னால் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதாக சில சதொச நிறுவனங்களில் சீனி நிறைவடைந்துள்ளமையினால் மக்களால் கொள்வனவு செய்ய முடியாமல் வீடு திரும்ப நேரிட்டுள்ளதாக தகவல்கள்
 வெளியாகியுள்ளன.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




மே 25, 2021

கடைகளை கிளிநொச்சியில் மூடிய சிறிலங்கா காவல் துறை

 

கிளிநொச்சி நகரில், 25-05-2021.இன்றைய தினம் திறக்கப்பட்ட வியாபார நிலையங்களில், அத்தியாவசிய வியாபார நிலையங்களை தவிர ஏனையவற்றை காவல் துறை  உடனடியாக 
மூடியுள்ளனர்.
இன்றைய தினம் அதிகாலை, பயண கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில், கிளிநொச்சி நகரில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன.
பொதுமக்களும் வழமை போன்று நகருக்கு வருகை தந்திருந்தனர். ஆனால், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களைத் தவிர ஏனையவற்றை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்மைக்கு அமைவாக கிளிநொச்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

சர்வதேச அரங்கில் தமிழர்களின் உரிமை தொடர்பாக குரல் கொடுத்தால் அது பயங்கரவாதமாம்

 தமிழ் மக்களின் நீதி மறுப்பு, தமிழர்களின் உரிமை தொடர்பாக சர்வதேச அரங்கில் குரல் கொடுத்தால் அது பயங்கரவாதம், ஆனால் முதலீடு என்ற பெயரில் சர்வதேச நாடுகள் இலங்கையை 
துண்டாடுவது தேசியவாதம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் 
தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய துறைமுகங்கள் சட்டமூலம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் தற்போது சீனாவின் ஆதிக்கத்தில் கொடுக்கப்படவுள்ள துறைமுக அபிவிருத்தி என்பது இலங்கையின் ஆட்சியாளர்களுடைய விருப்பம் அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் அப்படி சீனாவுக்கு வழங்குவது முறையான செயல் இல்லை என்பதால் அந்த சட்டமூலத்தை பகிரங்கமாக எதிர்த்தோம்.
இன்னொரு நாட்டினால் இலங்கைக்கு பாதிப்புகள் ஏற்படலாம் அது இப்போது புரியாது காலம் கடந்தபின் இலங்கை மக்கள் ஒட்டுமொத்தமாக இதனை எதிர்க்கும் காலம் உருவாகும்.
பொல்லை கொடுத்து அடி வாங்கும் நிலைக்கு இந்த செயல் மாறலாம். அப்போது இதனை ஆதரித்து வாக்களித்தவர்களும் இரட்டை வேடம் போட்ட கட்சி உறுப்பினர்களும் புரிந்து கொள்வார்கள்.
வடக்கு, கிழக்கு தமிழ் தேசிய அரசியல் பிரச்சினை இன்று சர்வதேச அரசியலுடன் கலந்துள்ளது. எமது ஒருமித்த நாட்டுக்குள் 
சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்ற 
கோட்பாட்டு தத்துவத்துடன்
 இலங்கையை ஆட்சி செய்த சிங்கள தலைவர்களுடன் நடந்த பேச்சுக்கள் ஒப்பந்தங்கள் போராட்டங்கள் எல்லாம் மௌனிக்கபலபட்ட நிலையில் தேசிய ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை இன்று சர்வதேச அரங்கிற்கு சென்றுள்ளது.
சர்வதேசம் தலையிட வேண்டும் என தமிழ் தலைமைகள் சர்வதேசத்தை நோக்கி கேட்பது தவறு என கூறும் ஆட்சியாளர்கள் சர்வதேசத்திற்கு நாட்டில் ஒரு பகுதியை கையளிப்பது சரி என எந்த வகையில் நியாயம் 
கற்பிக்க முடியும்.
உங்களுக்கு அது பொருளாதார பிரச்சினை என்றால் எங்களுக்கு அது உரிமை பிரச்சனை என்பதை அனைவரும் புரிந்து
 கொள்ள வேண்டும்.
சிலர் கேட்கலாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்தை நோக்கி தமது அரசியல் செயல்பாடுகளை முன் எடுக்கும் போது ஒரு சர்வதேச நாடான சீனாவுக்கு இலங்கை அரசு தமது ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியை கையளிப்பதை ஏன் எதிர்க்க வேண்டும்.
எமது உரிமை பிரச்சினை என்பது சீனாவுடன் சம்பந்தப்பட்ட விடயமில்லை.
இன்னும் சொல்வதானால் ஈழவிடுதலை ஆயுதப் போரை இலங்கையில் ஆரம்பித்து அதேபோரை முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற வைத்த நாடுகளில் இந்தியாவின் பெரும் பங்கு உண்டு.
ஆனால் வடக்கு, கிழக்கில் சர்வதேச அழுத்தங்கள் மூலம் ஒரு நிரந்தர தீர்வு வருமானால் அதில் இந்தியாவை வெறுத்தோ ஒதுக்கியோ இந்தியாவுக்கு தெரியாமலோ நிச்சயம் வராது வருவதற்கு இந்தியா 
விடவும் மாட்டாது.
எனவே இந்தியாவின் ஆதரவு தமிழ் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்று இந்தியாவிற்கு பகைமை நாடாக உள்ள சீனாவுக்கு இலங்கையில் முதலீட்டு வாய்ப்பளிப்பது தமிழ்தேசிய அரசியல் தலைமை எதிர்ப்பதே சரியான அரசியல் ராஜதந்திரம் அதனால்தான் எதிர்த்து வாக்களிக்க வேண்டிய முடிவு எடுக்கப்பட்டது.
சிலவேளை துறைமுகங்கள் அபிவிருத்தி இந்தியாவிற்கு கையளிப்பது தொடர்பாக இலங்கை முடிவுகளை எடுத்திருப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவுகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

ஏப்ரல் 24, 2021

முன்னாள் அமைச்சர் ரிஷாத் எம்.பி.யின் கைது குறித்து மனோ

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.24-04-2021. இன்று கைதானமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநூலில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
‘நாடாளுமன்ற உறுப்பினர், கட்சித் தலைவர் நண்பர் ரிஷாத் பதியுதீனை இந்த ரமழான் மாதத்தில் ‘அதிகாலை 3 மணி’ க்கு
 வீடு புகுந்து, தலைமறைவாக வாழும் பாதாள உலகக் கேடியை இழுத்துச் செல்வதைப் போல் கைது செய்ததன் பின்னுள்ள ‘ஆவேசம்’ என்ன? ராஜபக்ஷ அரசின் கொடூர ராணுவ முகம் வெளிப்படுகிறதா?’ 
எனப் பதிவிட்டுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்தும் சகோதரரும் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் சிஐடியினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரது சகோதரரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பவுத்தலோக மாவத்தை வெள்ளவத்தையில் உள்ள வீடுகளி;ல் வைத்து இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைகுண்டுதாரிகளிற்கு உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை பேச்சாளர் 
தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்களிற்கு எதிராக உறுதியான ஆதாரங்களை சிஐடியினர் பெற்றுக்ககொண்டுள்ளனர் அதனடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர்
 தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஏப்ரல் 19, 2021

யாழில் இலங்கை படைகளில் கூலியாட்களாக தமிழர்கள்

இலங்கை இராணுவத்தில் கூலி வேலைகளிற்கு ஆட்சேர்ப்பதில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தது 1,600 தமிழ் இளைஞர்கள் மூன்று மாத காலத்திற்குள் இணைந்துள்ளனர்.
இலங்கை இராணுவத்தில் அவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி சவேந்திர சில்வா
 தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத் தலைமையகத்தில் பாதுகாப்புப் படை அதிகாரிகளை உரையாற்றும் போது அவர் இதை வெளிப்படுத்தினார்.
"பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக மக்கள் கருத்துக்களை
 வெளிப்படுத்துவதை நாங்கள் இன்னும் காண்கிறோம். இத்தகைய சூழ்நிலையில், தமிழ் இளைஞர்கள் ராணுவத்தில் சேர முன்வந்திருப்பது மிகப்பெரிய வெற்றியாகும் எனவும் அவர்
 தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டில் அதே போன்று இலங்கை இராணுவத்தில் மேசன்,வெல்டர் மற்றும் கூலி தொழிலாளர்களாக தமிழ் இளைஞர்கள் படையினரால் இணைத்துக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஏப்ரல் 18, 2021

யாழ்.தெல்லிப்பழை புற்றுநோய் கதிரியக்க நிபுணர்கள் கூட்டாக சேர்ந்து மோசடி


வவுனியா வடக்கு கல்வி வலய மோசடியை தொடர்ந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நடந்தேறிய மோசடியை மூடி மறைக்க சுகாதார துறை மும்முரமாகியுள்ளது.
புற்றுநோயுடன் உயிருக்காக போராடும் நோயாளிகளிற்கான கதிர்வீச்சு சிகிச்சையினை உரிய காலத்தில் வழங்காது அவ்வாறு வழங்கியதாக பொய் கணக்கு காண்பித்து மில்லியன் கணக்கில் மோசடி
 அரங்கேறியுள்ளது.
உரிய சிகிச்சையின்றி நோயாளிகள் தொடர்ச்சியாக உயிரிழந்த போதும் அதனை கண்டு கொள்ளாது கதிரியக்க நிபுணர்கள் கூட்டாக சேர்ந்து மோசடி செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நேரகாலமின்றி விடுமுறை நாளிலும் பணியாற்றியதாக கணக்கு காண்பித்து மில்லியன்களில் சுருட்டிக்கொண்டமை கணக்காய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
எனினும் அப்பட்டமாக மோசடி கண்டுபிடிக்கப்பட்டபோதும் அதனை கண்டுகொள்ளாது சுருட்டிய பணத்தை மீள செலுத்துமாறு கதிரியக்க அதிகாரிகளிடம் சுகாதாரத்திணைக்கள அதிகாரிகள் கெஞ்சிவருவதாக சொல்லப்படுகின்றது.
இதனிடையே அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஒத்துழைப்பு கிடைப்பதாக வடமாகாண அளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ்
 தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் நாம் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களோடும் திணைக்களங்களுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து 
வருகின்றோம்.
அந்தவகையில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர்களின் ஒத்துழைப்பு நன்றாகவே கிடைக்கின்றது என்பதை 
குறிப்பிட முடியும்.
உண்மையில் வடக்கில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் புரிந்துணர்வுடன் 
செயற்படுகின்றனர்.
மக்களுக்கான செயற்திட்டங்களில் அவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றனர் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
கிழக்கில் அவ்வாறான நிலை காணப்படவில்லயென்றும் அவர் தெரிவித்துள்ளார்;.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>

 




 

ஏப்ரல் 11, 2021

வாழைச்சேனையில் மணல் ஏற்றி வந்த 25 சந்தேக நபர்கள் கைது

வாழைச்சேனை காவற்துறை பிரிவில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த இருபத்தைந்து (25) சந்தேக நபர்களும், இருபத்தைந்து (25); வாகனங்களும்.11-04-2021. இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை காவற்துறை பிரிவிற்குட்பட்ட வாகனேரி, பொத்தானை, புலிபாய்ந்தகல், ஒமடியாமடு, ஊத்துச்சேனை, வெள்ளாமைச்சேனை, மற்றும் புணாணை ஆகிய பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வருவதாக வாழைச்சேனை காவற்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து வாழைச்சேனை காவற்துறையினர் மற்றும் வாழைச்சேனை அதிரடிப்படையினருடன் இணைந்து இரண்டு நாட்கள் விஷேட 
நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன்போது உழவு இயந்திரம் பதினாறு (16), டிப்பர் வாகனம் ஏழு (07) லொறி இரண்டு (02) ஆகிய இருபத்தைந்து வாகனங்களும் கைப்பற்றப்பட்டதுடன் அதனுடன் இருபத்தைந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை காவற்துறை பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு வாழைச்சேனை காவல்நிலையத்தில் விஷேட குழு ஒன்று செயற்பட்டு வருவதாகவும் காவல்நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன
 மேலும் தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



மார்ச் 27, 2021

சர்வதேச விசாரணையில் இருந்து சிறிலங்காவை காப்பாற்றியது யார்


இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் போன்ற ஈழத்தமிழர் முன்வைத்த பிரதான கோரிக்கைகளை நீக்கம் செய்து சிறிலங்காவை  காப்பாற்றியது ஐ.நா மனித உரிமைகள் பேரவை-என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , “இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான இந்த பிரேரணை, பிரித்தானியா தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டது கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் சார்பாகவே அந்தப் பிரேரணை 
சமர்ப்பிக்கப்பட்டது.
அதனடிப்படையில், பிரேரணைக்கு ஆதரவாக22 நாடுகள் வாக்களித்தன,எதிராக11 நாடுகள் வாக்களித்தன, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டன.
உண்மையில் பொறுப்புக் கூறலை சிறிலங்கா  அரசிடமே கொடுக்கின்ற ஓர் வலுவற்ற தீர்மானமே இது
13 ஆம் திருத்தச் சட்டமே தமிழருக்கு நிரந்தர அரசியல் தீர்வுக்கான ஒரே வழியென இந்தியா பல ஆண்டுகளாக கூறிவந்தது பிரித்தானியா தலைமையில் உறுப்பு நாடுகளினால் தயாரிக்கப்பட்ட தீர்மானத்திற்குள் இந்தியா புகுத்திவிட்டு பங்கேற்காமல் வெளிநடப்பு செய்திருக்கிறது.
13 ஆம் திருத்தச்சட்டம் என்பது ஈழத்தமிழர் அரசியல் விடுதலைக்குரிய ஏற்பாடுகளுக்கான ஆரம்பப் புள்ளியாகக்கூட அமையாதென்பது தமிழர் தரப்பால் சுட்டிக்காட்டி வந்த போதும் தமது அரசியல் முகவர்களை பயன்படுத்தி கடந்த பல ஆண்டுகளாக இந்தியா வாய்ப்பேச்சாக கூறி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.
இன்றைய கால கட்டத்தில் பன்னாட்டு அரங்கில் இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வியாக இது இருந்தாலும், முன்னைய தீர்மானங்களை விட வலுவற்று வெறுமனே நீர்த்துப்போன ஓர் தீர்மானமாக இது வெளிப்படையாக சுட்டிக்காட்டி நிக்கின்றது, இந்த தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை மீண்டும்
 நசுக்கும் செயலாகும்.
இலங்கை அரசாங்கத்தின் உயர்நிலையில் இருப்பவர்கள் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டும் வகையில் ஐ.நாவின் மூன்று அறிக்கைகள் உள்ளன.
ஐ.நா வல்லுநர் குழு அறிக்கை, உள்ளக ஆய்வறிக்கை, பெட்ரிஅறிக்கை எனப்படுவது) இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையாளர் அலுவலக OISLஅறிக்கை) இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவும், உலகளாவிய மேலுரிமையினை இலங்கை தொடர்பில் அனைத்துலக சமூகம் செலுத்த வேண்டும் என ஐ.நா உயர்ஸ்தானிகர் மிசேல் பசலேட் விடுத்த அழைப்பில் 
தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவையில் 4 முன்னாள் ஆணையாளர்களும், இலங்கைக்குச் சென்றுவந்த 13 முன்னாள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களும், இலங்கை தொடர்பான ஐ.நா பொதுச் செயலரின் வல்லுநர் குழுவில் இடம்பெற்ற 3 உறுப்பினர்களும் இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பக்கோரியிருந்தார்கள்.
பாதிக்கப்பட்ட தமிழ் சமூகமும் கடநத பல ஆண்டுகளாக இதைத்தான் கோரிவருகின்றனர்.
பெரும் அர்ப்பணிப்புகளால் நிறைந்த.தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளுக்கான போராட்டக் களத்தின் வரலாறு மிக நீண்டது ஆனால், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான கடந்த 12 ஆண்டுகளில், தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளுக்கான களம் என்பது, அதிக தருணங்களில் தூரநோக்கற்ற, குறுகிய சிந்தனைகளால் நிறைக்கப்படுகின்றது.
மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்ற ஈழத் தமிழர்கள்,
 அதிலிருந்து மீழ்வது தொடர்பில், ஆக்கபூர்வமான ஒருங்கிணைந்த செயற்பாடுகளைப் பெரும்பாலும் முன்னெடுக்கவில்லை. மாறாக, 
தங்களுக்கு இடையிலான போட்டி, 
பொறாமை, தனிப்பட்ட 
அரசியல் நலன், சுய தம்பட்டப் பேருவகை, போன்ற மனநிலையால் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த யதார்த்தம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் அரங்கேறி சிங்கள தேசத்தை தப்பிக்க செய்கின்றது.
கொழும்பில் பிரித்தானிய உயர்மட்ட பிரதிநிதிகளை இரகசியமாக சந்தித்த கூட்டமைப்பு உள்ளிட்ட சுமந்திரன் பிரித்தானியா தலைமையில் வெளியிட இருந்ந பூச்சிய வரைவுக்கு களம் அமைத்து கொடுத்துவிட்டு”எந்த பயனும் இல்லாத கடிதத்தை எழுதிவிட்டு பிரித்தானியா தலைமையில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு வாழ்த்து தெரிவித்தது யாபெரும் 
அறிந்ததே.
முன்னணியும் முந்தி அடித்து எழுதிய கடிதம் ,சிவில் சமூக எழுதிய கடிதம் ,விக்னேஸ்வரன் எழுதிய கடிதம்,பத்து கட்சி சேர்ந்து எழுதிய கடிதம், பொது அமைப்புகள் எழுதிய கடிதங்கள் எல்லாமே தாயகத்திலுள்ள மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்ககாது சிதைத்தமையால் ஒரு கருத்துப்பட தீர்மானத்தை சர்வதேச சமூகம் எடுக்க
 முடியாமல் தள்ளி இருக்கலாம் என நம்பப்படுகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது

நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிப்ரவரி 25, 2021

சிறிலங்கா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தந்திரோபாயமொன்றை முன்வைக்கவேண்டும்

 ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தந்திரோபாயத்தினை இலங்கை முன்வைக்கவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் 
விடுத்துள்ளது.

ஜெனீவாவிற்கான அமெரிக்க தூதரகத்தின் டானியல் குரென்பீல்ட் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தந்திரோபாயத்தினை இலங்கை முன்வைக்கவேண்டும் அதற்கான கால அட்டவனையொன்றை முன்வைக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது அமர்வில் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான கலந்துரையாடலின் போது அவர் இதi தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிறுபான்மை சமூகத்தவர்கள் ஓரங்கட்டப்படுவது அதிகளவிற்கு இடம்பெறுவது குறித்தும் சிவில்சமூகம் செயற்படுவதற்கான தளம் குறைவடைவது குறித்தும் அமெரிக்கா ஜெனீவாவில் கவலை வெளியிட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் இன்மை மோதல்கால துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் உயர் பதவிகளிற்கு நியமிக்கப்படுவது குறித்தும் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி நியமித்துள்ள புதிய ஆணைக்கு பொறுப்புக்கூறல் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆணையை கொண்டிராததை நாங்கள் அவதானித்துள்ளோம்,என 
தெரிவித்துள்ள 
அமெரிக்காகாணாமல் போனவர்கள் குறித்த அலுவலகமும் இழப்பீட்டிற்கான அலுவலகமும் அரசியல் தலையீடுகள் இன்றி செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இறுதி அறிக்கை சட்டமா அதிபருக்கு


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் முதல் பிரதி சட்டமா அதிபருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளரால் குறித்த அறிக்கை,25-02-2021. இன்று சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகச் சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதி காரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜெயரத்ன
 தெரிவித்தார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் மற்றும் ஆணைக்குழுவின் அறிக்கையின் ஏனைய (2-5) பிரதிகளையும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஒப் படைக்குமாறு சட்டமா அதிபர் ஜனாதிபதி செயலாளருக்கு 
அறிவித் துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

ஜனவரி 28, 2021

கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு - கிழக்கில்

சிறீலங்காவின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கடைப்பிடித்து கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் அடையாள உணவு 
தவிர்ப்பு மற்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை எதிர்வரும் 2ஆம் திகதி ஆரம்பித்து 6ஆம் திகதிவரை நடத்த போவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் 
அறிவித்துள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>


சிறீலங்காக்கு காத்திருக்கும் ஆபத்து மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஜெனிவாவில் 
ஆரம்பமாகவுள்ளது
இதன்போது  சிறீலங்கா தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை 27-012021.நேற்று ஐக்கிய நாடுகள் சபையினால் பகிரங்கப்படுத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் புதிய
 அறிக்கையில்
 முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு  சிறீலங்கா தவறும் பட்சத்தில், ஏனைய உறுப்பு நாடுகளுடன் இணைந்து மிச்சேல் பச்லெட்டினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்று யோசனைகளை நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்கா
 எச்சரித்துள்ளது.
.இந்நிலையில்,  ஐ.நாவின் அறிக்கையை மேற்கோள்காட்டி, வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான ஐக்கிய 
அமெரிக்காவின் பிரதிநிதிகள் குழுவின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதாகக் கூறியிருக்கும் 
அந்தக் குழு,
குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு  சிறீலங்கா அரசாங்கம் தவறும் பட்சத்தில், ஐக்கிய அமெரிக்காவும் ஏனைய உறுப்பு நாடுகளும் இணைந்து ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் ஏனைய மாற்றுவழிகளை நடைமுறைப்படுத்த முற்படவேண்டும் என்றும் 
வலியுறுத்தியிருக்கிறது,

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>><<



ஜனவரி 24, 2021

தமிழ்த் தலைமைகள் வடக்கில் ஒன்றுக்கூடினார்கள்

தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று.24.01-2021. இன்றையதினம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.
 மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இந்தக் கலந்துரையாடிலின் நோக்கமாகும்.
 வடக்கு - கிழக்கில் தமிழரின் பாரம்பரிய
 இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 
 நாட்டின் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை
  குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஜனவரி 18, 2021

இலங்கை நாடாளுமன்ற பீதி தீர்ந்தபாடாகவில்லை?

இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் பிரகாரம், நாடாளுமன்ற பணியாள் தொகுதி, பாதுகாப்புப் பிரிவு, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே 
இருக்குமு் பாதுகாப்பு வலயம், இணைந்த சேவையில் இருப்போர் என 
ஒன்பது கொவிட்-19 நோய் தொற்றியிருப்பது உறுதியானது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் அடங்கலாக 943 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன
 

நிலாவரை.கொம் செய்திகள் >>>



மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக

வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரிய இடமாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து.
சுகவீன விடுமுறையை அறிவித்து இன்று திங்கட்கிழமை(18) முற்பகல்-10 மணி முதல் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தனர்.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற  மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஆசிரியர்கள் அங்கிருந்து  பேரணியாகச் சென்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதுடன் ஆளுநரைச் சந்தித்து மகஜர் கையளிக்கவும் முயற்சித்தனர்.
எனினும், வடமாகாண ஆளுநர் தற்போது யாழ்.இந்தியத் துணைத் தூதுவரைச்  சந்தித்துக்  கலந்துரையாடிக் கொண்டிருப்பதால் குறித்த சந்திப்பு முடிவடைந்த பின்னர் ஆளுநரை ஆசிரியர் பிரதிநிதிகள் சந்திக்க முடியும் எனப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த 
ஆசிரியர்களுக்கு  ஆளுநர் அலுவலக உத்தியோகத்தர்களால் பதில் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் ஆசிரியர்கள் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக வெயிலுக்கு மத்தியில் காக்க வைக்கப்பட்ட பின்னரும் வடமாகாண 
ஆளுநரைச் சந்திப்பதற்கு ஆசிரியர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
இதனால்,ஆசிரியர்கள் பொறுமையிழந்தனர். சில ஆசிரியர் பிரதிநிதிகள் ஆளுநர் அலுவலகத்தின் பிரதான நுழைவாயிலின் 
கதவினைத் தட்டினர்.
இதன்போதும் வடமாகாண ஆளுநரைச் சந்திக்க அனுமதி வழங்கப்படாமல் நீண்டநேரம் காக்க வைக்கப்பட்ட நிலையில் பொறுமையிழந்த ஆசிரியர்கள் அங்கிருந்து வெளியேறி.
வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஏ-9 வீதியைத் திடீரென இடைமறித்து இன்று நண்பகல்-12 மணி முதல் வீதி மறியல் போராட்டம் முன்னெடுத்தனர்.
ஆசிரியர்களின் இந்த திடீர் நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது.    
வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு அண்மையில் நின்றிருந்த பொலிஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

எனினும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அதற்கு சம்மதிக்காமையால் பொலிஸ் அதிகாரிகள் வாகனங்களை வீதியின் கரையால் செல்வதற்கு அனுமதிக்க முயற்சித்தனர்.
இதனால், கோபமடைந்த போராட்டத்தை முன்னின்று நடாத்திய ஆசிரியர்கள் பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களில் ஒருவர் திடீரென வாகனமொன்றிற்கு முன்னாள் படுத்து முடிந்தால் என் மேல் ஏத்துங்கள் எனக் கூறினார்.
இதனால்,அப்பகுதியில் பரபரப்பு அதிகமானது.
இதன்பின்னரும் பல நிமிடங்கள் பொலிஸாருக்கும், மேற்படி போராட்டத்தை முன்னின்று நடாத்திய ஆசிரியர்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
இதனையடுத்துப் பெண் ஆசிரியர்கள் மற்றும் ஆண் ஆசிரியர்கள் தமது கைகளைக் கோர்த்து வீதியைச் சுற்றி நின்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். இதனால், வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டமையால் ஏ- 9 பிரதான வீதியின் இரு பக்கங்களிலும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள்
 தரித்து நின்றன.  
இதன்பின்னர் வடமாகாண ஆளுநரைச் சந்திப்பதற்குப் பத்து ஆசிரியர் பிரதிநிதிகளைத் தம்முடன் வருகை தருமாறு பொலிஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கமைய ஆசிரியர்களின் வீதிமறியல் போராட்டம் 
கைவிடப்பட்டது.
இந்தநிலையில் பின்னர் ஐந்து ஆசிரியர் பிரதிநிதிகளுக்கு மாத்திரம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
எனினும்,ஆளுநருடன் சந்திப்பு இடம்பெறவில்லை.
இதன்போது வடமாகாண ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட 
அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களின்  பிரதிநிதிகளுக்குமிடையில் சுமார் அரை மணித்தியாலங்கள் வரை பேச்சுவார்த்தை 
இடம்பெற்றது.
குறித்த பேச்சுவார்த்தையில் எழுத்துமூலமான சாதகமான பதில் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் பெ. சிறீகந்தநேசன் தெரிவித்தார். 

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>