குமாரபுரம் படுகொலைகள் தொடர்பான 4 சாட்சிகளை விசாரிக்க இருப்பதாகக் கூறி, சென்ற வாரம் அவர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தது - இலங்கையின் அனுராதபுரம் உயர்நீதிமன்றம். குமாரபுரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் 1996ல் நடந்த படுகொலைகளுக்கு, 2013 வரை விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.
குமாரபுரம் கிராமம் தான் என்றாலும், மூதூர் - கிளிவெட்டி பிரதான சாலை அதன் வழியாகச் செல்கிறது. அனேகமாக விவசாயிகள் அல்லது விவசாயத் தொழிலாளர்கள் வசிக்கும் கிராமம். பெரும்பாலும் ஓலைக் குடிசைகள், ஒரு சில கல் வீடுகள். சற்றுத் தொலைவில், கிளிவெட்டித் துறைமுகம். மிக அருகிலேயே அல்லைக்குளம். குளத்தைச் சுற்றிலும் அடர்த்தியான மரங்கள். அனைத்து இனமக்களும் சமாதானமாகவும் அமைதியாகவும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்த ஊர். அப்படி வாழ விடுமா சிங்கள ராணுவம்?
1996 பிப்ரவரி 11ம் தேதி மாலை, கிளிவெட்டி ராணுவ முகாமைச் சேர்ந்த சிங்கள மிருகங்கள் குமாரபுரத்துக்குள் நுழைந்தன. முதல் துப்பாக்கிச் சத்தம், மாலை 4 மணிக்குக் கேட்டது. வெடிச்சத்தம் கேட்டதும், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊரே ஓடி ஒளிந்தது. பலரும் ஊரின் பின்பக்கமாக ஓடிப் போய், அல்லைக்குளத்தை ஒட்டியுள்ள அடர்ந்த மரங்களின் கீழ் ஒளிந்துகொண்டனர். வீட்டிலிருந்து வெளியேறாதிருந்த கிராமவாசிகள்தான் ஆபத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் பலரும், ஏன் எதற்கு என்கிற கேள்விமுறையெல்லாம் இல்லாமல் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுமார் 2 மணி நேரம் தொடர்ந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 3 பேர். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 3 பேர். 11 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் 8 பேர். படுகொலைகள் மட்டும் செய்தால் போதுமா... பாலியல் வன்முறையில் ஈடுபடாமல், சாந்தி... சாந்தி... சாந்தி... என்று 'புத்தம் சரணம் கச்சாமி'க்கு முடிவுரை எழுத முடியுமா பௌத்த மிருகங்களால்? 2 சிறுமிகளை 'கேங் ரேப்' செய்து சிறுகச் சிறுகச் சிதைத்தபிறகுதான் சாந்தி அடைந்தார்கள், புத்தனின் புத்திரர்கள்.
இரு சிறுமிகளில் ஒரு சிறுமிக்கு நடந்த கொடுமை, நினைக்கும்போதே ஈரக்குலையை உலுக்குவது. அந்தக் குழந்தையின் பெயர் அருமைத்துரை தனலட்சுமி. 16 வயது நிரம்பாத பள்ளி மாணவி. 8 வயது தம்பி அன்ரனி ஜோசப்புடன் சைக்கிளில் வந்துகொண்டிருந்த தனலட்சுமி, துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போய் அருகிலிருந்த கடை ஒன்றுக்குள் ஒளிந்துகொண்டாள். கடைக்குள்ளிருந்து அவளை இழுத்துவந்த ராணுவ மிருகங்கள், எதிரிலிருந்த பால் சேகரிப்பு மையத்தின் கட்டடத்துக்குள் அவளைக் கொண்டு சென்றன. அடுத்த 2 மணிநேரம் அந்தக் குழந்தையின் அழுகுரலும் கதறலும் குமாரபுரத்தின் காற்றுவெளிகளைக் கலங்க வைத்தன.
அந்தச் சின்னஞ்சிறு மலரின் ஒவ்வொரு இதழையும் பிய்த்து எறிந்தது அந்தக் காட்டுமிராண்டிகளின் கூட்டம். கடைசியாக அந்தக் குழந்தையைச் சுட்டுக் கொன்றவன் குமார என்கிற சிப்பாய். நீதிமன்றத்தில், 'அவளை ஏன் கொன்றேன்' என்பதை அந்த மிருகம் சிங்கள மொழியில் விவரித்தது. "என்னுடைய முறை வந்தபோது தான் அவளைப் பார்த்தேன். அவளது நிலை பரிதாபகரமாக இருந்தது. அணிந்திருந்த உடை துண்டுதுண்டாகக் கிழிக்கப்பட்டிருந்தது. உடல் முழுக்க பல்லால் கடித்த காயங்கள், நகத்தால் கிழித்த காயங்கள். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள். அதைப் பார்க்கச் சகிக்கவில்லை எனக்கு. பரிதாபப்பட்டுத்தான் அவளைச் சுட்டேன்" என்றது அந்த மிருகம்.
ச்சீ... இவர்களெல்லாம் மனித ஜாதியில்தான் பிறந்தார்களா... அல்லது மகாவம்சக் கதைமாதிரி மிருகத்துக்கே பிறந்தார்களா? அந்த பதினாறு வயதுக் குழந்தை என்ன தவறிழைத்தது? இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு அந்தக் குழந்தையால் என்ன ஆபத்து வந்து தொலைத்தது? காட்டு மிருகங்களைக் காட்டிலும் கேவலமான அந்தச் சிங்கள மிருகங்களுக்கு, மகள் வயதிலான அந்தக் குழந்தையைச் சிதைக்கும் வக்கிரபுத்தி எப்படி வந்தது? தாய், மகள் என்றெல்லாம் பாராமல் புணரும் காட்டுமிருகங்களா அவை!
எங்கள் குழந்தை தனலட்சுமி - பாதிக்கப்பட்ட பல்லாயிரம் குழந்தைகளின் அடையாளம். அவளுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. வீடு கட்டிக் கொடுப்பதாக விளம்பரம் செய்துகொண்டிருக்கும் கூச்ச நாச்சமில்லாத நாச்சிகள், முதலில் - அந்தக் குழந்தையைச் சிதைத்த மிருகங்களுக்கு ஏன் தண்டனை கொடுக்கவில்லை - என்று நண்பன் மகிந்தனிடம் கேட்கட்டும். அப்படிக் கேட்க முடியாவிட்டால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு மகிந்த மிருகத்தைக் கூப்பிட்டு பரிவட்டம் கட்டியதைப் போல், குமாரபுரம் மிருகங்களை அழைத்துவந்து - எந்த இடத்தில் பரிவட்டம் கட்டினால் பொருத்தமாக இருக்குமோ அந்த இடத்தில் கட்டட்டும்.
என்னுடைய வாசக நண்பர்களுக்காக இதை எழுதவில்லை... நாசமாய்ப் போன இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றியே தீர்வது என்கிற வெறியோடு திரியும் நாச்சியப்பன்களுக்காகவும் ரங்கராஜன்களுக்காகவும் சுஷ்மா ஸ்வராஜ்களுக்காகவும் எழுதுகிறேன்..!
17 ஆண்டுகள் ஆகிறது குமாரபுரம் சம்பவம் நடந்து. 24 பேர் கொல்லப்பட்டு, 2 குழந்தைகள் கற்பழிக்கப்பட்ட ஒரு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 20 மிருகங்களும் ஜாமீனில் வெளிவந்து சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கின்றன. கிருஷாந்தி முதல் புனிதவதி வரை, ஆயிரக்கணக்கான குழந்தைகளைச் சிதைத்த மிருகங்கள் சுதந்திரமாக உலவுகின்றன. ருசி பார்த்த அந்த மிருகங்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு மூலையில் முடங்கிவிடும் என்றா நினைக்கிறீர்கள்?
நாச்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர்களும், ரங்கராஜன்களுக்கு கம்யூனிஸ்டு தலைவர்களும், சுஷ்மாக்களுக்கு பாரதீய ஜனதா தலைவர்களும் தான் எஜமானர்கள் என்று நம்பும் நாம் ஏமாந்த சோணகிரிகள். அந்த ரத்த பூமியில் சுற்றுலா நடத்தியபோது, இப்படியெல்லாம் கொடுமைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவரைக் கூட சந்திக்க முடியாத அவர்களால், 'எங்களுக்கு சோறும் தண்ணியும் கிடைத்தால் போதும்' என்று சொன்னவர்களை மட்டும் சந்திக்க முடிந்ததென்றால், அவர்களது நிஜமான எஜமானர்கள் யார்?
அங்கே மறுசீரமைப்புப் பணிகளும் மேம்பாட்டுப் பணிகளும் வேகவேகமாக நடப்பதாகத் தானே விளம்பரம் செய்கிறது நாச்சி வகையறா! வீடு, ரோடு, தண்ணீர் - என்றெல்லாம் இவர்கள் காட்டும் கேரட்டைப் பார்த்தும், இங்கிருந்து யாரும் அசைவதாகத் தெரியவில்லையே! இந்த ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் ஏறக்குறைய 300 அகதிகள்தானே தமிழகத்திலிருந்து தாயகத்துக்குத் திரும்பியிருக்கிறார்கள்... ஏன்? இவ்வளவுதூரம் விளம்பரம் செய்தும் - தாயகத்துக்குத் திரும்ப இலங்கை உறவுகள் ஏன் விரும்பவில்லை என்று இவர்கள் யோசிக்கிறார்களா இல்லையா?
தமிழ்நாடே சொர்க்கம் - என்று அகதிகள் நினைக்கிறார்கள், அதனால்தான் தாய்மண்ணுக்குத் திரும்பாமல் இங்கேயே இருந்துவிட நினைக்கிறார்கள் - என்பது உண்மைக்கு நேர்மாறான வாதம். சொர்க்கமாகவா இருக்கிறது தமிழ்நாடு அவர்களுக்கு!
ஒரு ஓட்டைப்படகில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு 8000 மைல் கடந்து சென்று ஆஸ்திரேலியா போய்விட முயல்கிற அந்த உறவுகள், இருபத்தாறாவது மைலில் இருக்கிற தாய்மண்ணுக்குப் போக முயலவில்லையே, ஏன்? இனப்படுகொலை செய்த மிருகங்களும் கற்பழிப்புக் குற்றங்களில் ஈடுபட்ட காமக் கொடூரர்களும் சுதந்திரமாக நடமாடும் ஒரு மண்ணில், சுயகௌரவத்துடன் எப்படி வாழ முடியும் - என்கிற அச்சம்தான் அவர்கள் தாய்மண்ணுக்குத் திரும்புவதைத் தடுக்கிறது.
குமாரபுரம் சம்பவத்தில், இவ்வளவு ஆண்டுகள் கழித்து 4 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதே கூட, 'நாங்களே விசாரிக்கிறோமாக்கும்' என்று சர்வதேசத்திடம் காட்டிக்கொள்வதற்கான கண்துடைப்பு நடவடிக்கையாகத்தான் இருக்கும். சம்மனை வெளிப்படையாக அனுப்பிவிட்டு, 'கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்லிப்பாரு' என்று மறைமுகமாக மிரட்டுவதெல்லாம் சிங்கள இனவெறியர்களுக்கும், கோதபாயவின் கூலிப்படைகளுக்கும் கைவந்த கலை. ஒன்றரை லட்சம் பேரை சாட்சியமேயில்லாமல் கொன்றிருக்கும் சிங்களக் கொடூரர்களைப் பற்றியெல்லாம் பயப்படாமல், யாராவது வந்து சாட்சி சொல்லிவிடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்!
குமாரபுரம் இருக்கிற திருகோணமலை நீதிமன்றத்துக்கு சாட்சிகளை அழைக்காமல், சிங்கள மாவட்டமான அனுராதபுரம் உயர்நீதி மன்றத்துக்கு சாட்சிகளை வரச் சொல்வதே ஒரு மறைமுக அச்சுறுத்தல்தான்!
போர்க்களத்தில் இதுமாதிரி பாலியல் வன்முறைகள் சகஜம் - என்று மனசாட்சியே இல்லாமல் பேசியவர்கள், பேசுபவர்கள் ஆயிரமாயிரம் தனலட்சுமிகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால், தமிழீழ நீதிமன்றத்தால் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் நாளில், இப்படியெல்லாம் திசை திருப்பப் பார்த்தவர்களும் சேர்த்துத் தண்டிக்கப்படுவார்கள்.
தமிழீழம் அமையாது, தமிழீழ நீதிமன்றம் மீண்டும் நடைமுறைக்கு வராது - என்றெல்லாம் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்களா அவர்கள்? தமிழீழம் நிச்சயமாக அமையும், தமிழீழ நீதிமன்றம் மீண்டும் முறைப்படி இயங்கும். இதுபோன்ற கொடிய குற்றவாளிகளை சிங்களப் பகுதியிலிருந்து எப்படி வெளியே கொண்டுவந்து கூண்டில் நிறுத்துவது - என்பதை அறிந்தவர்கள் தான் தமிழீழ காவல்துறையில் பொறுப்பில் இருப்பார்கள். அது என்ன, சிங்களக் காவல் படையைப் போன்றோ, பாதுகாப்புப் படைகள் போன்றோ பொறுக்கிகளைக் கொண்ட படையாகவா இருக்கும்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் மட்டுமல்ல எங்கள் இனத்தின் அடையாளம். தங்கள் இனச் சகோதரிகளுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்த அவர்களது அர்ப்பணிப்பு உணர்வு, எதிர்த்த இனத்தின் பெண்களைக் கூட சகோதரிகளாகக் கருதிய பேராண்மை, அவர்களது நேர்மை, அப்பழுக்கற்ற ஒழுக்கம் - அனைத்தையும் அறிந்திருக்கிறது அகிலம். அவர்கள், அடுத்தவன் வீட்டில் கன்னம் வைக்கவும் மாட்டார்கள், தன் வீட்டுக்குக் கன்னம் வைத்தவனைத் தண்டிக்காமல் விடவும் மாட்டார்கள். அந்த நாள் நிச்சயம் வரும். அன்றுதான், சிங்கள மிருகங்களை டெட்டால் போட்டுக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் இந்திய நயவஞ்சகர்களுக்குப் புத்திவரும்.
இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான், தன்மானத்தோடும் தம் இனம் குறித்த பெருமிதத்தோடும் வாழ்ந்த எங்கள் ஈழத் தமிழ் உறவுகளை, இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்காகக் கொத்தடிமையாக வாழச் சொல்வீர்கள்? வானிலிருந்து குண்டு வீசிக் கொன்றாலும், கற்பழித்தே கொன்றாலும் அட்ஜஸ்ட் செய்துகொண்டு போ - என்று போதிப்பீர்கள்? கொலைகாரர்களையும் காமக் கொடூரர்களையும் தண்டிக்காமல், 'நல்லிணக்கத்துடன் வாழுங்கள்' என்று புத்தி சொல்வீர்கள்? சிங்களக் காம வெறியர்களுக்கு நீங்கள் செய்கிற வேலைக்கு என்ன 'பெயர்' என்பதை உணர்ந்துதான் செய்கிறீர்களா?
கொன்றுகுவித்துவிட்டு, கற்பழித்துவிட்டு, ஒரு ஓட்டை வீட்டைக் காட்டி ஏமாற்றி - 'குற்றவாளிகளை விட்டுவிடுங்கள், பிழைத்துவிட்டுப் போகட்டும்' என்று பேரம் பேசுவீர்கள் என்றால் உங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்? கோதபாயவால் கொல்லப்படுவோம் என்பது தெரிந்தும் மனசாட்சியுடன் பேசினானே - லசந்த விக்கிரமதுங்க என்கிற சிங்களப் பத்திரிகையாளன்.... அவன் என்ன பேசினான் என்பது தெரியுமா உங்களுக்கு?
"இலங்கையின் வடகிழக்கில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தின் காரணமாக தமிழ்மக்கள் தங்களது சுயமரியாதையை இழந்து நிரந்தரமாக இரண்டாம் தர குடிமக்களாகவே வாழவேண்டிய நிலை நீடிக்கிறது. போர் முடிந்தபிறகு, மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதன்மூலம் அந்த மக்களின் சீற்றத்தைத் தணித்துவிடமுடியும் என்று யாரும் கனவு காணக்கூடாது. போரின் ரணங்கள் நிரந்தர வடுக்களை ஏற்படுத்திவிடும். அதன் விளைவாக தமிழ் மக்களிடம் கசப்புணர்வும் வெறுப்புணர்வும் மேலும் அதிகரித்திருக்கும். அதைச் சமாளிப்பது எளிதல்ல! அரசியல் ரீதியாக தீர்வு காணக்கூடிய ஒரு பிரச்சினை, அனைத்துத் தரப்பு மக்களையும் துன்புறுத்தக்கூடிய சீழ்பிடித்த கொடுங்காயமாக மாறிவிடும். எனது நாட்டின் பெரும்பான்மை சமூகமும் அரசும் இந்த பகிரங்கமான உண்மையை உணரவில்லையே என்கிற கோபமும் சலிப்பும் எனக்கு இருக்கிறது"........
2009 ஜனவரி 8ம் தேதி கொழும்பு வீதியில் கோதபாயவின் கூலிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட லசந்த, ஒருநாள் முன்னதாக, ஏழாம் தேதியன்று எழுதிய மரண சாசனத்தின் ஒரு பகுதி இது. எந்த நேரத்திலும் தான் கொல்லப்படலாம் என்று எதிர்பார்த்து, மரணத்தை வரவேற்கக் காத்திருந்தவன் அந்த மனிதன். அந்த எதிர்பார்ப்புடன் தான் இந்த மரணசாசனத்தை எழுதினான். இந்த மரணசாசனம் மட்டும் இல்லையெனில், லசந்தவைப் புலிகள்தான் சுட்டுக்கொன்றார்கள் - என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்திருக்க மாட்டார்களா, இங்கேயிருக்கிற சிங்களத் தூதரகத்தின் எடுபிடிகளும் ஏஜென்டுகளும்!
(2009 ஜனவரி 16ம் தேதி, சென்னையில் நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சிக்காக, லசந்தவின் மரணசாசனத்தை ஒரே இரவில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுந்தரராஜன். அஞ்சலி நிகழ்ச்சியில் இந்தத் தமிழாக்கத்தைத் துல்லியமான தமிழ் உச்சரிப்போடு தெளிவாகப் படித்தவர், சத்யராஜ்.)
லசந்த 4 விஷயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
1. இரண்டாம்தர குடிமக்களாகத் தமிழர்களை ஆக்குவதற்காகவே வடகிழக்கில் ராணுவக் குவிப்பு.
2. போர் ஏற்படுத்திய ரணங்களால், அவை ஏற்படுத்திய வடுக்களால் தமிழர்களின் வெறுப்பு பலமடங்கு அதிகரிக்கும்.
3. வீடு கட்டிக் கொடுத்து அந்த மக்களின் சீற்றத்தைத் தணித்துவிட முடியவே முடியாது.
4. மிக எளிதான அரசியல்தீர்வை எட்டியிருக்க வேண்டியவர்கள், சீழ்பிடித்த கொடுங் காயமாக அதை மாற்றிவிட்டனர்.
குவியல் குவியலாகக் கொல்லப்பட்டு, கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டபின், சீழ்பிடித்த அந்த ரணத்துக்கு 'அறுவை சிகிச்சை' தான் ஒரே வழி என்பதைத்தான் லசந்தவின் தொலைநோக்குப் பார்வை சுட்டிக்காட்டுகிறது. அதனாலேயே, கோதபாயவின் கொலைநோக்குப் பார்வைக்கு அவர் இலக்காக நேர்ந்தது. நிலைமையை இப்படியெல்லாம் சிக்கலாக்கியதை சிங்கள அரசும், சிங்கள மக்களும் புரிந்துகொள்ளவில்லையே - என்று கவலைப்படுகிறார் லசந்த. இந்தியா மட்டும் இதைப் புரிந்துகொண்டதா என்ன?
4 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது லசந்த இதை எழுதி. இன்றைக்கும் அவர் சொன்னதைப்போல், வடகிழக்கில் ராணுவம் குவிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது, தமிழர்கள் சுயமரியாதையை இழந்து கொண்டே இருக்கின்றனர். மறுசீரமைப்பு, மேம்பாட்டுப்பணி - என்கிற வெற்று வார்த்தையை லசந்தவும் நம்பவில்லை, வடகிழக்கு தமிழர்களும் நம்பவில்லை, தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கிற தமிழ்ச் சொந்தங்களும் நம்பவில்லை.
திட்டமிட்டு நடந்த இனப்படுகொலையின் ஒரு பகுதிதான், வடகிழக்கில் நடந்த கற்பழிப்புகள். பாலியல் வன்முறைக்குப் பின், எங்கள் சகோதரிகளின் உடல்களை நடுவீதியிலேயே வீசிவிட்டுச் சென்றதுகூட, சிப்பாய்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடமாகத்தான் இருக்கவேண்டும். இதற்கெல்லாம் பதில் சொல்வதிலிருந்து சிங்கள அரசைக் காப்பாற்றுவதற்காகவே, பத்து பதிமூன்று என்று புதிய புதிய விவாதங்களை இலங்கையுடன் சேர்ந்து கிளப்பிவிடும் இந்தியா. கவனம் சிதைந்துவிடாமல், இனப்படுகொலைக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தும் வேலையை மட்டுமே நாம் தொடர்ந்து செய்தால் போதும். கற்பழிப்பு உள்ளிட்ட கொடிய ஆயுதங்களால் நிகழ்த்தப்பட்ட ஒரு இனப்படுகொலையையே, தமிழீழம் அடைவதற்கான ஆயுதமாக மாற்றிவிட முடியும். ஒன்றரை லட்சம் உறவுகள் தங்கள் உயிரைக் கொடுத்து உருவாக்கிய ஆயுதம் அது. அதற்கு நிகரான ஆயுதம் வேறு எது?
'அப்பாவித் தமிழர்களின் உரிமைகளை நசுக்குவதையும் ஈவிரக்கமின்றி அவர்களைக் கொன்றுகுவிப்பதையும் வெறும் குற்றச் செயலாக மட்டுமே கருதமுடியாது, அது ஒட்டுமொத்த சிங்களச் சமூகத்துக்கும் பெருத்த அவமானம்' - என்றான் லசந்த. ஈழத் தமிழ் உறவுகளின் உரிமைகள் நசுக்கப்படுவதையும், ஈவிரக்கமின்றி அவர்கள் கொன்று குவிக்கப்படுவதையும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கே அவமானம் என்பதை நாம் உணரவேண்டும்.
வடகிழக்கில் மட்டுமே 90 ஆயிரம் விதவைகள்... அவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளம் விதவைகள்.... என்கிற செய்தியைப் பார்க்கிற போதெல்லாம், மனசு பதைபதைக்கிறது. அவர்களுக்குப் பாதுகாப்பாய் இருப்பதற்காகவாவது, நடந்த கற்பழிப்புகளுக்கு நியாயம் கேட்டாகவேண்டும். அவர்களைக் கூண்டில் நிறுத்த வேண்டும். (அவர்களைத் தூக்கில் போட வேண்டும் - என்றா நாம் கேட்கிறோம்... சட்டத்தின் முன்தானே நிறுத்தச் சொல்கிறோம்!)
நடந்த கொடுமைகளுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப் பட்டால்தான், அடுத்தடுத்து கொடுமைகள் நடப்பதைத் தடுக்க முடியும். கொலையிலும் கற்பழிப்பிலும் தொடர்ந்து ஈடுபடுகிற ஒரு தெருப்பொறுக்கியைக் கைது செய்து கூண்டிலேற்றச் சொல்வதுதானே நியாயம்... அவனுக்குப் பயந்து, 'நடந்தது நடந்துவிட்டது, எங்கள் உயிரையாவது காப்பாற்றுங்கள்' என்றா மகஜர் கொடுப்பீர்கள்? தனலட்சுமியைப் போல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நியாயம் வழங்கக்கூட முடியாதென்றால், மற்றவர்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்கிவிட முடியும்?