18

siruppiddy

மே 28, 2014

இலங்கைமீது தீவிர அவதானம்

நவிப்பிள்ளையின் அலுவலகம்
இலங்கையின் கடந்தகால, தற்கால மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான தண்டனை, பொறுப்புக்கூறல், மீள் நல்லிணக்கப்பாடு ஆகியவை குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது ஐ.நா. மனித உரிமைகள் சபை.   கடந்த ஏழு வருடங்களாக இலங்கையின் போர் விவகாரம் தொடர்பான விடயங்களை ஆய்வுக்கு உட்படுத்திவரும் ஐ.நா. செயலகம், சர்வதேச சமூகத்தோடும் ஐ.நா. மனித உரிமைகள் சபையோடும் இணைந்து தொடர்ந்தும் இக்கண்காணிப்பை மேற்கொள்ளும் என்றும் இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் ஐ.நா.சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.   தற்போது ஐ.நா. உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தலைமையில் இயங்கும் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலய செயலகம், ஜெனிவாவிலுள்ள ஐ.நா. செயலகத்தில் திங்கட்கிழமை 2013 ஆம் ஆண்டுக்கான புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.   ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2012 ஆம் வருட அமர்விலும், 2013 ஆம் வருட அமர்விலும், இலங்கை விவகாரம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பலாபலன்கள் குறித்தும் இலங்கையின் நிலைவரம் குறித்தும் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் அவதானிப்பை மேற்கொள்ளும் என்றும் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   இலங்கையில் 2002 முதல் 2009 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற போரின்போது இழைக்கப்பட்ட பெரும் மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை மேற்கொள்ளுமாறு இவ்வருட மார்ச் அமர்வில் அமெரிக்கா தீர்மானமொன்றின் மூலம் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு ஆணை வழங்கியுள்ளது. இன்னும் இரு வாரங்களில் நவநீதம்பிள்ளையின் அலுவலகம் இந்த விசாரணையை ஆரம்பிக்கவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.   மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலக அறிக்கையில், ஆணையாளர் நவநீதம்பிள்ளை பல விடயங்களில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.   அநேக விவகாரங்களில் இலங்கை அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகளை மேற் கொள்ளவில்லை. பொறுப்புக்கூறல் கடப்பாடு, வடபகுதியில் அதிகளவில் இராணுவக் குவிப்பு, இடம் பெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள், மதரீதியான வன்முறைகளை முடுக்கிவிடுதல், சுயாதீன நீதித்துறைக்கு குந்தகமான நடவடிக்கை ஆகியவற்றை நவநீதம்பிள்ளை முன்வைத்துள்ளார்.   மனித உரிமைகள் பேரவையின் 2013 ஆம் வருட அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட பல அம்சங்கள், 2014 மார்ச் அமர்வுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டும். எனினும் எதுவும் நடக்கவில்லை என்றும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மே 26, 2014

காவல்துறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் கைது

த.தே.ம.முன்னணி அமைப்பாளரும் புலிகளுக்காக தகவல் சேகரித்தவராம்!?
கிளிநொச்சியில் சிறிலங்கா காவல்துறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர், தங்கவேல் ஜெகதீஸ்வரன் சிறிலங்காப் படையினருடன் உறவாடி அவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டியதாக சிறிலங்கா காவல்துறை கூறியுள்ளது. கிளிநொச்சி மருத்துவமனையில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றும் இவர், சிறிலங்கா படையினருடன் நட்புறவு கொண்டு பாதுகாப்பு கட்டமைப்புகளுக்குள் ஊடுருவி, தகவல்களைத் திரட்டி விடுதலைப் புலிகளுக்கு வழங்கத் திட்டமிட்டிருந்தார் என்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளிடம் இருந்து சிறிலங்கா படையினர் கைப்பற்றிய ஆவணம் ஒன்றில் இவரது பெயரும் உள்ளடங்கியிருந்ததாகவும், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

மே 25, 2014

சர்வதேச விசாரணையில் சிக்க வைக்க அமெரிக்கா புதிய தந்திரோபாயம்?

இலங்கையை சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் சிக்க வைக்கும் நோக்கில் அமெரிக்கா புதிய தந்திரோபாயம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையியின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட உள்ள விசாரணைக் குழுவின் தலைமை அதிகாரியாக முன்னாள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கொபி அனானை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
உலகின் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு இராஜதந்திரியை விசாரணைக் குழுவின் தலைவராக நியமித்து அதன் மூலம் இலங்கையை விசாரணைப் பொறியில் சிக்க வைப்பதே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் திட்டமாக அமைந்துள்ளது.
நோபள் பரிசு வென்ற கொபி அனானை விசாரணைக் குழுவின் தலைவராக நியமித்தால், அவருக்கு வீசா வழங்க இலங்கையினால் மறுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்த இந்த இடங்களுக்கு மட்டுமே விஜயம் செய்ய முடியும் என தடைகளை விதிக்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொபி அனானுக்கு எதிராக அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அது ராஜதந்திர ரீதியில் முறுகல் நிலைமையை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நட்பு நாடுகள் கூட இலங்கையுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொபி அனான் 1997ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளராக கடமையாற்றியுள்ளார்.
தென் ஆபிரிக்காவின் நிற வெறிக்கு எதிராகவும் மத்திய கிழக்கு நாடுகளின் சமாதானத்தை நிலைநாட்டவும் கொபி அனான் ஆற்றிய பங்களிப்பு இன்னமும் உலக அளவில் புகழப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரை தலைவராக நியமித்து அதன் மூலம் இலங்கை அரசாங்கத்தை நெருக்கடியில் ஆழ்த்தும் திட்டத்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

மே 18, 2014

பாலச்சந்திரனை கொல்லாமல் விட்டிருக்கலாம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை படுகொலை செய்யாமல் விட்டிருக்கலாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப் போரின் பின்னர் உயிருடன் பிடிபட்ட மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை இராணுவத்தினர் கொடூரமான முறையில் கொன்றொழித்தனர்.

இதே போன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனும் மனம் பதைபதைக்கும் வண்ணம் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருந்தான்.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் போர் முனையுடன் நேரடித் தொடர்பில் இருந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவே இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்.

அது மாத்திரமன்றி உயிருடன் பிடிபட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் தொடர்பில் பிடிபட்டது முதல் கொல்லப்பட்டது வரை ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தனக்கு அனுப்பும்படியாகவும் அவர் ராணுவத்தினருக்கு கட்டளையிட்டிருந்தார்.

எந்தவொரு விடுதலைப் புலி உறுப்பினர் மீதும் இராணுவத்தினர் பரிதாபம் கொண்டு அவர்களை உயிருடன் விட்டு வைத்து விடக் கூடாது என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இப்படியான நிலையில் முக்கியமான விடுதலைப் புலி உறுப்பினர்களின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. தங்களது எதிரிகள் அழிந்த மகிழ்ச்சியில் அவரும் அதனை ஆர்வத்துடன் செவிமடுத்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் யுத்த வெற்றியை அடுத்து புத்தரின் ஆசீர்வாதம் தேடி அவர் பெல்லன்வில ரஜமஹா விகாரைக்குச் சென்றிருந்த சமயத்தில் பாலச்சந்திரன் படுகொலை குறித்து அவருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவல் கல்நெஞ்சம் கொண்ட அவரையும் சிறிது கலங்க வைத்தது.

“பாவம், சின்னப் பையன்..உயிருடன் விட்டிருக்கலாம்” அவர் தன் பக்கத்தில் நின்றிருந்த ஜனாதிபதி செயலக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரிடம் முணுமுணுத்தார்.

இந்தத் தகவல் கிடைத்தவுடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்தி சேகரிப்பிற்காக அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்களை ஜனாதிபதியை விட்டு தூரப்படுத்தியிருந்த காரணத்தால் ஜனாதிபதியின் முணுமுணுப்பு அவர்களின் காதில் விழவில்லை.

எனினும் பச்சிளம் பாலகன் படுகொலை விடயத்தில் கொடூர அரக்க குணத்துடன் செயற்பட்ட தனது தம்பியை (பாதுகாப்புச் செயலாளரை) அவர் கண்டிக்கவில்லை. அதற்கான துணிவு இன்றளவும் அவருக்கு இல்லை. பாதுகாப்பு செயலாளர் முன்னின்று பெற்றுக் கொடுத்த யுத்த வெற்றிதான் மஹிந்த ராஜபக்ஷவை இரண்டாம் முறையாகவும் ஜனாதிபதி அதிகாரத்தில் அமர்த்தியுள்ளதே அதற்கான காரணம்.

இவ்வாறான வெளிவராத எத்தனையோ ரகசியங்கள் காரணமாகவே யுத்த களத்தில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு ஜனாதிபதி தயக்கம் காட்டுகின்றார். அந்த விசாரணைகள் தனது தம்பியின் கழுத்தில் கயிற்றை இறுக்கி விடும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

ஆனாலும் காலம் என்றைக்கும் ஒரே மாதிரியாக இருக்காதல்லவா?

மே 16, 2014

சிறிலங்கா கடும் பாய்ச்சல் பிரித்தானியாவுக்கு எதிராக : நாடுகடந்த தமிழீழ அரசாங்க மாநாட்டின் எதிரொலி !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வரும் மே-17ம் நாள் சனிக்கிழமை மத்திய லண்டனில் இடம்பெறவுள்ள சிறிலங்கா புறக்கணிப்பு மாநாடு தொடர்பில் பிரித்தானியாவுக்கு எதிராக சிறிலங்கா கடும் கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அரச தமிழ் “பத்திரிகையில் பிரிவினை வாதத்துக்கும் புலிகளுக்கும் புத்துயிரளிக்க பிரிட்டிஷ் அரசு முயற்சி” என தனது தலைப்பிட்டு தனது கோபத்தினை திட்டித்தீர்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இடம்பெறவுள்ள லண்டன் மாநாடானது பி’சிறிலங்காவைப் புறக்கணிப்போம் ‘ எனும் இச்செயல்முனைப்பினை, பல்வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்தும் முயற்சியாகவும், இத் திட்டத்தை சிறப்புறச் செயற்படுத்துவதற்காகவும், இதற்குத் தேவையான தரவுகளைச் சேகரித்து இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான புதுமையான அரசியல், சட்டவியல் ரீதியான தந்திரோபாயங்களைக் கண்டறிவதற்காகவும் இடம்பெறுகின்றது.

இந்த மாநாட்டில் கிரிக்கெட் புறக்கணிப்பு செயல்வீரர் Trevor Grant, பலஸ்தீனத்தினை மையப்படுத்திய இஸ்றேல் புறக்கணிப்பு BDS அமைப்பின் பிரதிநிதி Omar Barghouti, தென்ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் பிரதிநிதிகள் Krish Govender, Roy Chetty, முன்னாள் ஐரோப்பிய பாராளுமன்ற பிரித்தானிய உறுப்பினர் Robert Evans உட்பட பல்வேறு அனைத்துலக பிரமுகர்கள் பங்கெடுக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த இந்த மாநாட்டினை மையப்படுத்தி சிறிலங்கா தனது ஊடகத்தில் வெளிப்படுத்தியுள்ள செய்தி :
எல்.ரி.ரி.ஈ ஆதரவு அமைப்புக்களின் செயற்பாடுகளை தமது நாட்டில் முன்கொண்டு செல்வதற்கு அனுமதிப் பதன் மூலம் எல்.ரி.ரி.ஈக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதற்கு பிரிட்டன் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் சரத்துக்கு அமைய முன்னணி எல்.ரி.ரி.ஈ ஆதரவு அமைப்புக்களைத் தடைசெய்ய இலங்கை நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில், நாடுகடந்த தமிbழம் அமைப்பு மே மாதம் 17ஆம் திகதி லண்டனில் மாநாடொன்று நடத்தவுள்ளமை தொடர்பாகக் கேட்டபோதே அருண் தம்பிமுத்து இவ்வாறு கூறினார்.

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக பிரிட்டிஷ் அரசியல் தலைவர்கள் அநாவசியமாக குரல் கொடுக்கும் நிலையில், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையொன்றைக் கொண்டுவரும் இலக்கில் உருத்திரகுமார் மாநாடொன்றை நடத்துவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதித்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. இவ்வாறு அனுமதி வழங்குவதானது பிரிட்டனின் இரட்டை நிலைப்பாட்டையே வெளிக்காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

உருத்திரகுமாரன் எல்.ரி.ரி.ஈயின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவர். இலங்கையில் பிரிவினையொன்றை உருவாக்குவதற்கு முயற்சிக்கும் எல்.ரி.ரி.ஈ ஆதரவு குழுக்களில் முக்கியஸ்தர் என்றும் அருண் தம்பிமுத்து சுட்டிக்காட்டினார். ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமியரை பயங்கரவாத அமைப்பில் இணைத்துக் கொள்வதற்கு பொறுப்பாகவிருந்த அடேல் பாலசிங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரிட்டன் தவறிவிட்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, எல்.ரி.ரி.ஈ மற்றும் எல்.ரி.ரி.ஈ ஆதரவு அமைப்புக்களுக்கு எதிராக மேலைத்தேய நாடுகளான பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் விதித்திருக்கும் தடையானது காகிதங்களில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்காததாலேயே எல்.ரி.ரி.ஈயை புத்துயிரளிப்பதற்கு அந்த நாடுகளிலேயே சில அமைப்புக்கள் முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சின் பொது தொடர்பாடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜே.சாதிக் தெரிவித்தார்.

இந்த அமைப்புக்களால் தமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்வரை இந்த நாடுகள் பயங்கரவாதத்தின் ஆபத்தை உணர்ந்துகொள்ளாது, வெறுமனே தடையை மட்டும் அறிவிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மே 10, 2014

ஆயுதங்கள் மீட்பு 5 ஆண்டுகளின் பின்பு ...

முல்லைத்தீவு, வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான கைத்துப்பாக்கித் தோட்டாக்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

புதைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் தோட்டாக்களை கிழக்கு கடற்படை முகாம் அதிகாரிகள் நேற்று மாலை கண்டுபிடித்ததாக கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இதில் 98 தர 19 மி.மீ. அளவுடைய ரவைகள் – 120000, எஸ்.ஜி. 12  போரா ரவைகள் – 2750 மற்றும் 357 ரக ரவைகள் – 5600  என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

இதன் போது இராணுவத்தினரும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பை வழங்கியிருந்தாக கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்..



மே 08, 2014

இராணுவ ஆட்சேர்ப்பு குறித்து எனக்கு எதுவும் தெரியாது :அதிபர்

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் இராணுவ ஆட்சேர்ப்பு குறித்து தான் இதுவரை அறிந்து கொள்ளவில்லையென்று தெரிவித்த அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், அரசாங்க வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மோசடி செய்து விட்டனர் என்று இதுவரை யாரும் முறையிடவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அவ்வாறு யாரும் முறைப்பாடுகளைச்செய்தால் அது குறித்து விரிவாக ஆராய்ந்து தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் 12 பேர் யாழ்ப்பாணத்தில்நேற்று காலை வருகைதந்தனர். இவர்களுடனான சந்திப்பினையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அரச அதிபரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்க வேலைவாய்ப்பை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் மாவட்ட செயலகங்களோ, அல்லது மாகாணசபைகள் ஊடாகவோ வழங்கப்படமுடியும் ஆனால் அநாமதேய துண்டுப்பிரசுரம் வெளியிட்டோ, ஒலிபெருக்கிகளில் அறிவித்தோ அரசாங்க வேலைவாய்ப்புக்களை வழங்க முடியாது.
யாழ்.மாவட்டத்தில் அவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது. ஆனால் இதுவரை யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை அதேவேளை இந்த விடையம் குறித்து எவரும் எம்மை அணுகவுமில்லை.

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டது தொடர்பாக முறைப்பாடுகள் எதுவும் கிடைக்காத நிலையில் அது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையினையும் நாம் எடுக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மே 04, 2014

புலிக்கொடிக்கு தடை விதித்துள்ள பாடசாலை?

கனேடிய பாடசாலையொன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை தடை செய்துள்ளது. குறித்த கனேடிய உயர் பள்ளி வளாகத்திற்குள் மாணவர் புலிக் கொடியை கொண்டு வரக்கூடாது என அறிவித்துள்ளது. தரம் 12 மாணவர் ஒருவர் பாடசாலைக்கு புலிக்கொடியை எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு தடவைகள் நடைபெற்ற ஆண்டு நிகழ்வுகளின் போது அவர் இவ்வாறு புலிக்கொடியை ஏந்திச்சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் கிழக்கு ஒன்டாரியோவில் இந்த பாடசாலை அமைந்துள்ளது. இம்முறை நடைபெற்ற ஆண்டு நிகழ்வில் புலிக்கொடியை ஏந்திச் செல்லக் கூடாது என பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த கொடிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு n;தாடர்பு கிடையாது என அவரது தந்தை  தெரிவித்துள்ளார். கொடி ஒன்றைக் கூட பாடசாலைக்கு கொண்டு செல்ல முடியாவிட்டால் எவ்வாறு எனது கலாச்சாரத்தை பிரதிபலிப்பது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த கொடியை ஏந்துவது சக மாணவர்களுக்கு பிரச்சினையாக இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா போன்ற பல் கலாச்சார நாட்டில் தமது கலாச்சாரத்தை பிரதிபலிக்க கிட்டாமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.