நாடுதழுவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் ஒன்றுபடுத்தி கடந்த அரசாங்கம் முன்னெடுத்த தேசிய பொங்கல் தின விழா இம்முறை இரத்து செய்யப்பட்டுள்ளது. தேவையற்ற
செலவுகளை
குறைக்கும் பட்சத்தில் மூன்று மாவட்டங்களில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை உள்ளடக்கிய விதத்தில் பொங்கல் தின நிகழ்வினை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர்
குறிப்பிடும் போது;
தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதாக குறிப்பிட்டு கடந்த அரசாங்கம் மூன்று இனத்தவர்களின் பிரதான பண்டிகைகளுக்கு 25 மாவட்டங்களிலும் உள்ள இளைஞர், யுவதிகளை ஒன்றிணைத்து தேசிய நிகழ்வாக அந்த பண்டிகையினை கொண்டாடியது. இதனால் எவ்வித
பயனும், மாற்றங்களும் ஏற்படவில்லை மாறாக
வீண் செலவுகள் மாத்திரமே மிகுதியாகின. உலகவாழ் இந்துக்கள் நாளை மறுதினம் தைப்பொங்கல் பண்டிகையினை கொண்டாடவுள்ளார்கள். இதனை தேசிய நிகழ்வாக கடந்த அரசாங்கம் மேற்கொண்ட விதத்தில் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளதா
என்ற கேள்வி எழுகின்றது.
25 மாவட்ட இளைஞர்களையும் ஒன்றிணைத்து தைப்பொங்கல் பண்டிகையினை கொண்டாட தீர்மானிக்கவில்லை. இதனால் பாரிய செலவுகள் ஏற்படுகின்றன. அதனால், வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள
இளைஞர்களை
ஒன்றுபடுத்தி பொங்கல் தின நிகழ்வினை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்விற்கு செலவாகும் நிதியினை ஒவ்வொரு இளைஞர் கழக அபிவிருத்திக்கும் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இனி
இடம்பெறவுள்ள அனைத்து பண்டிகைகளிலும் இம்முறைமையினைக் கையாள்வோம் எனவும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார் .