18

siruppiddy

ஏப்ரல் 30, 2014

சிரேஷ்ட அமைச்சர்களுக்கு 90 சாரதிகள் நியமனம்

 அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிரேஷ் அமைச்சர்கள் 10 பேருக்காக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அமைச்சர் செயலகத்திற்கு இணைக்கப்பட்டுள்ள 127 ஊழியர்களில் 90 பேர் சாரதிகள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் சாரதிகள் என்பதனால்  செயலகங்களின் ஏனைய செயற்பாட்டுகளுக்கு 37 ஊழியர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

இந்நிலையில், மனிதவள அபிவிருத்திக்கு தேவையான நடவடிக்கையினை ஒரு சிறு பிரிவினரால் மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள மனித வள சிரேஷ்ட அமைச்சர் டியூ  குணசேகர  அறிவு மற்றும் அனுபவமிக்க அதிகாரிகள் அடங்கிய இணைப்பு பிரிவு ஒன்றை அமைக்குமாறு  இந்த காரியாலயத்தை பராமரிப்பதற்கு வருடத்துக்கு 10 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

ஏப்ரல் 16, 2014

நாட்டை பிரிக்கும் தேவை தமிழ் மக்களுக்கு இல்லை:

நாட்டிற்குள் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்றை ஏற்படுத்தும் எந்த தேவையும் தமிழ் மக்களுக்கு இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டை பிரிக்கும் எந்த தேவையும் தமிழ் மக்களுக்கு கிடையாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்காக கூட்டமைப்பு தொடர்ந்தும் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 12, 2014

சன்மானம் ருத்திரகுமாரனின் தலையை கொண்டு வரும் நபருக்கு ஒரு கோடி

 சர்வதேச நாடுகளில் இருக்கும் விடுதலைப் புலித் தலைவர்களை உயிருடனோ பிணமாகவே இலங்கைக்கு கொண்டு வர வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண சபையின் உறுப்பினரும் அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப்புலிகளின் சர்வதேச தலைவர்களில் ஒருவரான நெடியவன் என்பவருக்கு அடுத்த தலைவர் எனக் கூறப்படும் கபிலன் என்ற நந்தகோபன் என்பவர் இலங்கை இராணுவத்தின் புலனாய்வு நடவடிக்கை மூலம் மலேசியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வந்தது போல் உலக நாடுகளில் இருக்குத் ஏனைய புலித் தலைவர்கள் உயிருடனோ அல்லது பிணமாகவோ இலங்கைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி புலிகளை தோற்கடித்து பெற்ற வெற்றியை அடுத்து கிடைத்துள்ள இரண்டாவது வெற்றி இதுவாகும்.

பிரபாகரன் கொலை செய்யப்பட்ட பின்னர், புலிகள் அமைப்புக்கு தலைவராகவிருந்த கே.பி. என்ற குமாரன் பத்மநாதன் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டார்.

அவரது கைதை தொடர்ந்து புலிகளின் சர்வதேச வலையமைப்பு சீர்குலைந்தது. இந்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்திருக்க வேண்டும்.

மேற்குலக நாடுகளின் உதவியோடு புலிகளின் சர்வதேச வலையமைப்பு மீண்டும் உயிர்பெற்றது. புலிகளின் சர்வதேச முன்னணி இதன் மூலம் பலம்பெற்றது.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் மூலம் சர்வதேச புலிகள் எம்மை மயிர்க்கூச்செறிய செய்தனர். அது ராஜதந்திர தாக்குதலாகும்.

மீதமுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர்களை தேடி நாம் நடவடிக்கைகளை தொடர்ந்திருக்க வேண்டும். நெடியவன், விநாயகம், ருத்திரகுமாரன், சுரேன் சுரேந்திரன், அருட் தந்தை இம்மானுவேல், அடேல் பாலசிங்கம், போன்ற விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவே இலங்கைக்கு கொண்டு வரும் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேணடும்.

ருத்திரகுமாரனின் தலையை கொண்டு வரும் நபருக்கு ஒரு கோடி ரூபா சன்மானம் வழங்கப்படும் என அறிவித்திருக்கலாம்.

இவர்களை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கையின் ராஜதந்திரத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்தியிருக்கலாம்.

விடுதலைப் புலிகள் செய்த போர் குற்றங்களை விசாரணை செய்த தனியான நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்தி சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்கியிருக்கலாம்.

எமது கருணை, அன்பு மற்றும் மறதி போன்றவற்றை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் தடை செய்திருக்க வேண்டும். அத்துடன் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்.

தாமதித்தேனும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கும் 16 அமைப்புகள் தடைசெய்யப்பட்டன.

அத்துடன் அனந்தி சசிதரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் போன்ற தமிழ்ப் பிரிவினைவாதிகளை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும்.

அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்.யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் உருவாகியுள்ள புலிகளின் செயற்பாட்டாளர்கள் அதன் தலைவர் கோபி ஆகியோருக்கு வலை விரிக்க வேண்டும்.

ஜனநாயகம், மனித உரிமை, நல்லிணக்கம் என்ற பெயரில் வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ பிரசன்னத்தை குறைக்கக் கூடாது.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ள 424 புலிகளின் உறுப்பினர்களை கைது செய்ய வலைவரிக்க வேண்டும்.

பயங்கரவாதத்தின் இருள் நிழல்கள் பயமுறுத்த ஆரம்பித்துள்ளதால், கட்சி என்ற வகையில் பயங்கரவாததிற்கு எதிராக மக்கள் நிலைப்பாடுகளை கட்டியெழுப்ப மீண்டும் வீதியில் இறங்க போகிறோம்.

விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக உதவி வருவோரை கவனமாக இருக்குமாறு நாங்கள் எச்சரிக்கை விடுக்கின்றோம். எமது பொறுமை எல்லை மீறிவிட்டது எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கூறியுள்ளார்.

ஏப்ரல் 11, 2014

சமகால அரசியல் நிலைவரம் குறித்தான நிகழ்வு

 பிரான்சில் புலம்பெயர் தமிழர்கள் அமைப்புக்கள் தொடர்பில் தனது வர்த்தகமானி அறிவித்தல் ஊடாக புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தி வரும் சிறிலங்கா அரசாங்கம், மீண்டும் புலிகள் என்ற கட்டுக்கதைகளுடன் தாயக மக்களையும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றது.

இந்நிலையில் தாயகத்தினையும் புலத்தினையும் மையப்படுத்தி சமகால அரசியல் நிலைவரம் குறித்தான கருத்தாடல் நிகழ்வொன்று, பிரான்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சு அறிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானமும் தமிழர் தரப்பின் நிலைப்பாடு, சிறிலங்காவின் வர்த்தகமானி அறிவித்தலும் அதறக்கு எதிரான தமிழர்களின் முன்னகர்வு, உட்பட இலங்கைத்தீவினை மையப்படுத்திய சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

வரும் 13/04/2014 ஞாயிற்றுக்கிழமை 4-6 Place de le Rapublique,93100 Montreuil ( Metro : Robespierre – Ligne 9) எனும் இடத்தில் மாலை 18:00 மணிக்கு இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் செயற்பாட்டாளர்கள் ஆர்வலர்கள் என அனைவரையும் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஏப்ரல் 08, 2014

காட்டுப் பகுதியில் அழுகிய சடலமாக மீட்பு:

 மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூரில், தனது வீட்டிலிருந்து சென்று கடந்த மூன்று தினங்களாக காணாமல்போனவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் வேற்றுச்சேனையில் உள்ள காட்டுப்பகுதியில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர் மண்டூரினை சேர்ந்த வைரமுத்து சந்திரசேகரம் (65வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீட்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான விசாரணையை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏப்ரல் 03, 2014

ஆதரவு அமைப்புக்களினால் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்க முடியாது!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களினால் எதிர்காலத்தில் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்க முடியாது என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட ஆறு புலிகளுக்கு ஆதரவான வெளிநாட்டு தமிழ் அமைப்புக்களினால் மாநாட்டில் பங்கேற்க முடியாது.

பிரிட்டன் தமிழர் பேரவை,  உலகத் தமிழர் பேரவை, கனேடிய தமிழர் காங்கிரஸ் உள்ளிட்ட வெளிநாட்டு தமிழ் அமைப்புக்கள் மனித உரிமைப் பேரவை மாநாடுகளில் பங்கேற்று வந்தன.

எனினும், இலங்கையில் குறித்த அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்ட காரணத்தினால் மனித உரிமை பேரவை மாநாடுகளில் எதிர்காலத்தில் இந்த அமைப்புக்களினால் பங்கேற்க முடியாது என அந்த சிங்களப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அமைப்புக்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தொடர்புகளை பேணச் சந்தர்ப்பம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.