18

siruppiddy

ஜூன் 28, 2016

முதல்வர் சீ.வியின் அதிரடி உத்தரவு வடக்கு ஆசிரியர்களுக்கு?

ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர வகுப்புக்கள், விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் ஆகியன பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடாத்தப்படக்கூடாது.
அவ்வாறு நடாத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
 தெரிவித்துள்ளார்.
வடமராட்சி புலோலி புற்றளை மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவும் , பரிசளிப்பு விழாவும் இன்று காலை நடைபெற்றது அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
ஊக்கம் அற்ற மாணவர்கள் தாம் நிற்கின்ற இடத்திலேயே ஒரு கோட்டைக் கீறிவிட்டு அதன் மீது ஏறி நின்று கொண்டு தமது இலக்கைத் தாம் அடைந்துவிட்டதாகத் தம்மையும் ஏமாற்றி தமது குடும்பத்தவரையும் ஏமாற்றுகின்ற ஒரு நிலையை நாம் அவதானிக்கலாம். அந்த நிலை மாற வேண்டும்.
தமிழ்ச் சமூகம் பொதுவாகக் கல்வியில் உயர்ந்தவர்களாக, ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களாக, நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக, கடும் உழைப்பாளிகளாக இனம் காணப்பட்ட சமூகம்.
இன்றோ அவர்கள் கல்வி கேள்வி அறிவின்றி, ஒழுக்க நெறியில் நின்றும் பிறழ்வடைந்து, ஒழுக்கச் சீர்கேடுகளுடன் எதுவித தொழில் முயற்சியோ, வருமானம் ஈட்டும் நோக்கமோ, குடும்ப கௌரவத்தைப் பாதுகாக்கும் எண்ணமோ அற்றவர்களாகக் காட்டுமிராண்டித் தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் கொலை, களவு போன்ற தீய செயல்களில் ஈடுபடுவதும் எம்மை மிகவும் வேதனைக்கு உள்ளாக்குகின்றன.
உலகலாவிய ரீதியில் இலங்கைத் தமிழர்கள் பொதுவாகக் கற்றவர்கள், பண்பட்டவர்கள், பண்புடையவர்கள் என்ற நற்பெயரை இதுவரை நிலைநாட்டி வந்துள்ளனர்.
எனினும் எவ்வளவு தீய பழக்கங்களையும் செயல்களையும் புரிய முடியுமோ அவற்றையெல்லாம் புரிந்து கொண்டு பூமிக்கு பாரமாக இருக்கக் கூடிய இளைஞர்களை நாம் இன்று எம்மிடையே பார்க்கின்றோம். இவர்களைத் திருத்தி சரியான பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய தலையாய பணி இப்போது புதிதாக உருப் பெற்றிருக்கின்றது.
போரால் பாதிக்கப்பட்ட மக்கள், உறவுகளை இழந்தவர்கள், உடல் அங்கங்களை இழந்தவர்கள், சொத்து சுகங்களை இழந்தவர்கள், வீடு வாசல்களை இழந்தவர்கள், பிள்ளைகளை இழந்தவர்கள் எனப் பல்லாயிரக் கணக்கானவர்கள் வறுமையால் வாடிக் கொண்டிருக்கும் போது 
அவர்களை 
எவ்வாறு கரையேற்றுவது என்று திக்குத் தெரியாமல் நாம் தடுமாறிக் கொண்டிருக்கும் இவ் வேளையில் மாணவ மாணவியரைக் கரை சேர்க்கும் பிரச்சனை எம்மை மேலும் திணர வைத்துக்
 கொண்டிருக்கின்றது.
எளிமையிலும் செழிப்புடனும் வாழ்ந்த எம்மவர்கள் இன்று வெட்கித் தலைகுனிகின்றார்கள். பிரச்சனைகள் மாணவ மட்டத்தில் மட்டுமே என்று கூறமுடியாது. நாம் சிறுவர்களாக பாடசாலைகளில் 
கல்வி கற்ற 
காலத்தில் எமது ஆசான்களாக எமக்குக் கல்வி புகட்டிய ஆசிரியப் பெருந்தகைகளை ஒரு கணம் எண்ணிப் பார்த்தோமானால் அவர்கள் ஆசார சீலர்களாக, ஒழுக்கம் நிறைந்தவர்களாக, கண்ணியம் மிக்கவர்களாக, எமது முன்னேற்றத்தின் முன்னோடிகளாக வாழ்ந்ததை நாங்கள் அடையாளம் காணுவோம்
அவர்களின் தோற்றங்கள் இப்போதும் எமது மனக் கண்ணில் பசுமரத்தாணியாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இன்றைய தினசரிப் பத்திரிகைகளில் வருகின்ற செய்திகள் எம்மை கதி கலங்க வைக்கின்றன.
பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் குறிப்பாகப் பத்துப் பன்னிரண்டு வயது பெண் பிள்ளைகளுடைய பெற்றோர்கள் தமது பிள்ளைகளை எவ்வாறு பாடசாலைக்கு அனுப்புவது என ஏங்குகின்றார்கள்.
ஆரம்பத்தில் இச் செய்திகள் பொய்யானவையா அல்லது புனையப்பட்டவையா என்ற ஒரு சந்தேகம் எழுந்தது. ஆனால் தினமும் வரக்கூடிய செய்திகளைப் பார்க்கின்ற போது ஆண் பெண் என்ற வேறுபாடின்றி ஆசிரியர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ துர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும் என எனக்குத் தெரியவில்லை. ஆசிரிய குலத்திற்கே அபகீர்த்தி வந்துள்ளதை நாம் உணர வேண்டும்.
குருவைக் கண்ட இடமெல்லாம் வணங்கு என்ற ஒளவைப் பிராட்டியின் கூற்றுக்கு இன்று என்னாகி விட்டது? தகுதியற்றவர்கள் தகைமையற்றவர்கள் தரங்குறைந்தவர்கள் புனிதமான ஆசிரியத் தொழிலினுள் உள்ளிட நாம் இடமளித்து விட்டோம். இதற்குக் காரணம் அரசியல் என்பதிலும் பார்க்கச் சுயநலமே என்பது எனது கருத்து.
தூர நோக்கின்றி தருணத்திற்குப் பொருத்தமாக தன்நல காரணங்களுக்காக நாங்கள் தவறான பாதையில் சென்று விட்டோம் என்பதை இனியாவது நாம் உணர வேண்டும். எனவே கல்வி நடவடிக்கைகளில் ஆசிரியர்களின் செயற்பாடுகள் பற்றி இறுக்கமான சில தீர்மானங்களை கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகள் மூலம் அனுப்ப வேண்டிய கால கட்டாயத்திற்கு நாம் உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம் என்று நான் 
நம்புகின்றேன்.
உதாரணத்திற்குத் தனி ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர வகுப்புக்கள், விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் ஆகியன பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடாத்தப்படக்கூடாது. அவ்வாறு நடாத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல்
 வேண்டும்.
மேலும் ஒரு ஆசிரியர் ஒழுக்க நெறி பிறழ்வில் ஈடுபட்டிருப்பது தெரிந்தும் அதனை உடனடியாக உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தாமல் மறைப்பதுங் கூட தண்டனைக்குரிய குற்றமாகும். இவற்றை நடைமுறைப்படுத்த நாம் முன்வர வேண்டும்.
ஓர் இரு ஆசிரியர்களின் தவறான பழக்க வழக்கங்கள் ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தையும் தலைகுனிய வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. நண்பர்கள், பழகியவர்கள் எனப் பிழை செய்பவர்களுக்கு உதவப் போய் நீங்களும் சேர்ந்து பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் 
கொள்ளுங்கள்
பெரும்பான்மை ஆசிரியர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள முடிவெடுத்தால் குற்றமிழைக்கும் ஆசிரியர்களை எளிதில் திருத்தி விடலாம். உங்கள் பெரும்பான்மையினரின் அழுத்தம் தவறு செய்பவரைக் கட்டுப்படுத்திவிடும். ஆனால் அதற்கென்ன என்று பெரும்பான்மையோர் சிந்திக்கத் தொடங்கினால் ஆசிரிய சமூகத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்படும்
கணணி மூலமாக எங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டுவோம். ஆசிரியர்களுடன் நேரடித் தொடர்பின்றி கல்வி புகட்டுவோம் என்று பெற்றோர்கள் கூறத் தலைப்படுவார்கள்.
ஆகவே ஆசிரியர் சமூகம் மீண்டும் ஒரு உன்னதமான சமூகமாக மாற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என இச் சந்தரப்பத்தில் கூறி வைக்கின்றேன்.
ஒவ்வொரு பாடசாலையும் ஏனைய பாடசாலைகளுக்கும் மக்களுக்கும் முன்மாதிரியாக விளங்க இனிப் பாடுபடவேண்டும். அவை பாடசாலைகளாக இல்லாது கோவில்களாக மாற நாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கோவில்களாகத் தினமும் பூஜிக்கத்தக்க வகையில் பாடசாலைகள் மாற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
அதற்கு நாம் அனைவரும் சிந்தித்து நடவடிக்கைகளை எடுப்போம். எமது பாடசாலைகள் ஆத்மார்த்த கோவில்களாக மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை என மேலும் தெரிவித்தார்.…
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஜூன் 19, 2016

ராணுவம் வடக்கிலிருந்து படிப்படியாக நீக்கப்படுமாம்!

இலங்கை அரசாங்கத்தினது உயர்மட்ட அரசியல்வாதிகளால் அடிக்கடி திருவாய் மலர்ந்த அறிக்கைகளுக்கு நேர்விரோதமாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவாசம் திருவாய் மலர்ந்திருப்பது அரசினது வார்த்தை ஜாலங்களில் ஒன்று என அமெரிக்க அதிகாரிகளுக்கு எங்கே விளங்கப்போகிறது.
அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மேலும் கூறுகையில் வடக்கு கிழக்கிலிருக்கும் ராணுவத்தை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அப்பட்டமான பொய்யை அமெரிக்காவுக்கு கூறியிருக்கிறார்.அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போதே வடக்கு கிழக்கில் ராணுவ பிரசன்னம் அகற்றப்படுவதுபற்றி உங்களது நிலைப்பாடு எவ்வாறு அமைந்திருக்கின்றது என்னும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கெட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு உரைத்தார். அத்துடன் சிறீலங்கா அரசு வழங்கிய உறுதிமொழிகளை படிப்படியாக நிறைவேற்றும் எனவும் அக் கூட்டத்தில் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் அடுத்த வருடத்துக்குள் அனைத்து ராணுவத்தினரும் அகற்றப்பட்டு
தேவைக்கேற்ப மாத்திரமே ராணுவத்தினர் வடகிழக்கில் நிறுத்தப்பட்டிருப்பர் எனவும் பிரசாத் காரியவாசம் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>ஜூன் 15, 2016

தலைவர் பிரபாகரன் மரணிக்கவில்லை: பொன்சேகாதெரிவிப்பு !!!

தலைவர் பிரபாகரன் மரணிக்கவில்லை: பொன்சேகா
கரும்புலிகளுக்கு படகுவாங்க காசு கொடுத்தார் பசில் மலையகத் தலைவர்களிடம் ஒப்படைத்தார் பிரபாகரன் பாகிஸ்தானிடம் இருந்தே ரவைகள் பெற்றோம் நானிருக்கும் போதே 200 கிலோகிராம் தங்கம் மீட்டோம் என் ஜாதகத்தை திருடிப் பார்த்தனர் படைவிட்டோடி இன்று புத்தகம் எழுதுகிறார் வெள்ளைக் கொடியைக் கிளறுங்கள் 
பதவி கிடைத்தால், 
பீல்ட் மார்ஷலைப் பறிப்பர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியன்று மரணிக்கவில்லை என்று தெரிவித்த அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, யுத்தம் முழுமையாக முடிவதற்கு முன்னரே மஹிந்த ராஜபக்ஷ மண்ணை முத்தமிட்டுவிட்டார் என்றும் தெரிவித்தார்.
‘பயங்கரவாதிகளுக்குப் பணம் கொடுத்தனர். அதனைக் கூறுவதற்கு நான் எப்போதும் தயங்கமாட்டேன். இவ்வாறு தேசத்துரோகம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதியுச்ச தண்டனை, தூக்குத் தண்டனையாகும். அவ்வாறு நிரூபிக்கப்பட்டால் மஹிந்த ராஜபக்ஷவை கைதுசெய்து தூக்கிலிட வேண்டும்’ என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (10) நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய 
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ‘வெளிநாட்டிலிருந்து மே மாதம் 16ஆம் திகதியன்று நாட்டுக்குத் திரும்பிய மஹிந்த ராஜபக்ஷ, மண்ணுக்கு முத்தமிட்டார். அன்றும் யுத்தம் முடியவில்லை. அலரிமாளிகைக்கு என்னை அழைத்து, 18ஆம் திகதியன்று பதவியுயர்வு வழங்கினர். அன்றும் யுத்தம் முடியவில்லை. 19ஆம் திகதியன்று நாடாளுமன்றத்திலிருந்து யுத்தம் நிறைவடைந்து விட்டதாக நாட்டுக்கும் மக்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார். அன்றைய தினமும் யுத்தம், முழுமையாக நிறைவடையவில்லை.
அவ்வாறான அறிவிப்பு விடுக்கப்பட்ட 19ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்திலிருந்து இரவு வேளையில், காரில் நான் சென்று கொண்டிருந்தபோதே,வேலுப்பிள்ளை பிரபாகரனின்… சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எனக்கு அறிவித்தனர். யுத்தத்தின்
 கௌரவத்தைத் தான் பெற்றுக்கொள்ள பதாதைகளை அமைத்தனர் எனினும், நான் அமைதியாகவே இருந்தேன். „விளையாட்டுப் போட்டியில் அணி தோற்றுவிட்டால் அதன் சுமையை அணிமீதும், வென்றுவிட்டால் விளையாட்டுத்துறை அமைச்சருக்குமா கொடுப்போம்… என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எனினும், யுத்த வெற்றிக்குப் பின்னர் அவ்வாறு இடம்பெறவில்லை. பெயருக்கும் புகழுக்காகவும் என்னை ஒதுக்கிவிட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கரும்புலிப் படைப்பிரிவுக்குப் படகுகளை வாங்குவதற்கு, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இரண்டு மில்லியன் 
டொலர்களை வழங்கினார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின் போது தெற்கில், தெற்கு தமிழர்களின் வாக்கை தடுக்க வேண்டும்… என்று மலையகத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் தலைவர்களிடம் பிரபாகரன் தெரிவித்திருந்தார்.
பணத்தைக் கையளிப்பதற்காக, பசில் ராஜபக்ஷவுடன் சென்றிருந்த இரண்டு தலைவர்களிடமே பிரபாகரன் இவ்வாறு கூறியிருக்கின்றார்’ என்றும் அமைச்சர் சரத்பொன்சேகா மேலும் கூறினார். ‘யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தின் போது ரவைகள்; இருக்கவில்லை. நான் பாகிஸ்தானுடன் நேரடியாகத் தொடர்புகளை ஏற்படுத்தி அவற்றைப் பெற்றுக்கொண்டேன். அதன் பெறுமதி, 60 மில்லியன் டொலர்களாகும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தானும் உதவியது’
 என்றார்.
‘யுத்தத்தின் பின்னரான விசாரணைகளின் போது, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மற்றும் நீதிபதிகளை அனுமதிக்க வேண்டும். இராணுவத்தினர் மீது முழுமையாக குற்றம் சாட்டக்கூடாது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை
 எடுக்க வேண்டும். யுத்தத்தின் இறுதிக் காலத்தின் போது, சாதாரண படையினர் களத்தில் இருந்தனர். எனினும், முன்னோக்கிய நகர்வுகளில், முக்கியஸ்தர்களும் படைத்தரப்பில் உயர்பதவி நிலைகளில் இருந்தவர்களுமே விடுதலைப் புலிகளுடன் போரிட்டனர் என்பதையும் இவ்விடத்தில் நினைவுறுத்த விரும்புகின்றேன்.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது, என்னை அனுப்பிவிட்டு எல்லாவற்றையும் குழப்பி விட்டு விட்டனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, ஜனநாயக அம்சங்களின் அடிப்படையிலேயே யுத்தத்தை நான் முன்னெடுத்தேன். எனினும், குழப்பிவிட்டமையால் விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டியதாய் உள்ளது. ‘வெள்ளைக்கொடி’
 விவகாரத்தில் 
எனக்கு சிறை வாசம் விதித்தனர். வெள்ளைக்கொடி விவகாரத்தை மீண்டும் கிளறி எடுக்க வேண்டுமென நல்லாட்சி அரசாங்கத்திடம் கோருகின்றேன். குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். முப்படைகளின் மீதும் குற்றஞ்சாட்டக்கூடாது.
குண்டு வெடிப்புக்களும் தற்கொலைத் தாக்குதல்களும் தீவிரமடைந்திருந்த போது தேசப்பற்றாளர்கள் வாய்திறக்கவில்லை. அன்று வாய்திறந்திருந்தால், பிரபாகரன் பாடம் கற்பித்துக் கொடுத்திருப்பார். அநுராதபுரம், பொலன்னறுவைக்கு அப்பால் தேசப்பற்றாளர்கள் செல்லவே இல்லை. பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு பின்னால், நான் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் என்மீது குற்றம் சாட்டுகின்றார். அது தொடர்பில் 
விசாரிக்கவும்.
குற்றமிழைத்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும். உடுவே தம்மாலோக்க தேரரைக் கைது செய்ததைப் போல, கோட்டாவையும் கைது செய்ய வேண்டும். ராஜபக்ஷ குடும்பங்களுக்காக இரண்டு முறை சிந்திக்க கூடாது. படையை விட்டோடிய கோட்டாபய ராஜபக்ஷ, யுத்தம் தொடர்பில் புத்தகம் எழுதுகின்றார். என்னை மட்டுமே ராஜபக்ஷ குடும்பம் பழிவாங்கியதாக, பசில் ராஜபக்ஷ ஒத்துக்கொண்டுள்ளார். எப்படித்தான் மறைத்து 
வைத்திருக்க முயன்றாலும் நாக்கு, பொய் சொல்லாது. யுத்தம் நிறைவடைந்து, பொறுப்பற்ற பதவிகளை கொடுத்ததன் பின்னர், தேர்தலில், அதுவும் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிடுவதாக அறிந்து கொண்டதன் பின்னர் எனது ஜாதகத்தையே திருடியெடுத்துப் பார்த்தனர். அன்று முறையாக தேர்தல் நடந்திருந்தால், நான் வெற்றி பெற்றிருப்பேன்…
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இருந்தமையால் தான், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டி, ஜனாதிபதியாக ஆகியுள்ளார். அவர் மட்டும் அன்று தோற்றிருந்தால் நான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பெருந்தொகையானோர் சிறைச்சாலைக்குச் சென்றிருப்போம். மஹிந்த ராஜபக்ஷ 
குடும்பங்களின் செயற்பாடுகள் காரணமாகவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். பதவிகளும் கிடைத்தன அமைச்சராகவும் இருக்கின்றோம். நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லாட்சி கிடைத்தது. இவ்வாட்சியை முன்னகர்த்தி செல்வது எமது கையிலேயே இருக்கின்றது.
நான் பதவியில் இருக்கும் போதே 200 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டது. எனினும், 110 கிலோகிராம் தங்கமே மீட்கப்பட்டதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துவிட்டார். அதற்குப் பின்னர் 400 அல்லது 500 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டிருக்கலாம். எனது உரையை, மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. எங்காவது இருந்து கேட்டுக்கொண்டிருக்கலாம். பீல்ட் மார்ஷல் பட்டமும் அமைச்சர் பதவியும் அவரின் செயற்பாட்டினாலே எனக்குக் கிடைத்தது. மஹிந்தவுக்கு பதவி மீண்டும் கிடைக்குமாயின் என் பதவியைப் பறித்தெடுப்பார்’ என்றார்.
நற்பெயரை பாதுகாத்தேன்
‘நான் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன். எனது பெற்றோர் ஆசிரியர்களாக சேவையாற்றினர். இராணுவத்தில் நான், இணைந்ததன் பின்னர் பதவி நிலைகளை ஆணவத்தில் பெறுவதற்கு முயற்சித்திருக்கவில்லை. படிப்படியாக உயர்வு பெற்று சென்றதுடன், இராணுத்தின் நற்பெயரையும் பாதுகாக்க செயற்பட்டிருந்தேன். ஒரு கட்டத்தில் இராணுவத்தில், கஷ்ட காலமிருந்தது. அந்த காலத்தில் இராணுவத்தை விட்டு தப்பிச் சென்று அமெரிக்காவில் சுகபோகமாக வாழ்ந்து, சம்பாதித்து விட்டு. யுத்தம் முடிந்ததும் ஆசையில் அந்த கௌரவத்தை பறித்துக் கொள்வதற்காக அலைந்து
 திரியவுமில்லை.
இராணுவத்தின் கௌவரத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் நாம் செயற்பட்டிருந்தோம். அதன் விளைவாக எமக்கு பதவியுர்வுகள் கிடைத்தன. அந்த பதவியுயர்வுகளின் அடிப்படிடையில் நிலையொன்று கிடைத்தது. எனது இராணுவத் தளபதி பதவி மற்றும் அந்தப் பதவிக்கு நான் வந்த முறைமை தொடர்பாக முன்னைய ஆட்சியாளரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் கடந்த காலங்களில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
ராஜபக்ஷ குடும்பத்தின் புண்ணியமல்ல
நேர்மையான வழியிலேயே அந்த பதவிக்கு நான் வந்திருந்தேன். அதைவிடுத்து ராஜபக்ஷ குடும்பத்தின் புண்ணியத்திலோ அல்லது அவர்களது தேவைகளுக்காவோ அந்த பதவிக்கு வந்திருக்கவில்லை. இதேநேரம், நான் ஓய்வுபெற இருந்த அதிகாரி என்ற போதிலும் இராணுவ தளபதி பதவியை எனக்கு வழங்கியிருந்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டிருந்தார். அது முழுமையான பொய்.
ஹன்சார்ட் அறிக்கையில் பதியப்படவேண்டும் என்பதற்காகவே இதனை நான் கூறுகிறேன். இராணுவத்தில் நான் தலைமை அதிகாரியாக இருந்தபோது, ஓய்வபெறுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் என்னை அழைத்து பேசிய அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எனக்கு அடுத்ததாக இராணுவத் தளபதி பதவி கிடைக்கும் என்றும்
 ஓய்வுபெறும் வயது 58 ஆக அதிகரிக்கப்பட்டு வர்த்தமானியும் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். ஆகவே, எனக்கு முன்பிருந்த இராணுவ தளபதி ஓய்வுபெறும் போது எனக்கு ஐம்பத்து ஆறாரை வயதாக இருந்தது. இராணுவ தளபதி பதவியில் எனக்கு 3 வருடங்கள் இருக்க முடியும் என்று சந்திரிகா குமாரதுங்க என்னிடம் கூறியிருந்தார்.
எனக்கு 60 வயதாவதற்கு முன்னதாக என்னால் இராணுவத்தில் 3 வருடங்கள் இருக்கக்கூடிய சூழலிலேயே நானிருந்தேன். இராணுவ தளபதி பதவிக்கு நான், 2005 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டபோது, ஓய்வு பெறுவதற்கு 3 வருடங்கள் எனக்கு இருந்தன. அவ்வாறான நிலையில்தான் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டேன்.
ஜாதகங்ளை திருடிச்செல்வர்
இராணுவ தளபதியானதும் மிகவும் சாதாரணமாக எதிர்பார்ப்பே என்னிடம் இருந்தது. அதிகாரத்தை கைப்பற்றுவதன் நிமித்தம் சூழ்ச்சி செய்யும் நோக்கம் இருந்திருக்கவில்லை. எனினும், அப்போதிருந்த நாட்டின் ஆட்சியாளர்கள், அவர்களது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் எமது ஜாதகங்ளை திருடிச் சென்று ஜோதிடம் பார்ப்பார்கள். அந்த ஜாதகம் சிறப்பானதாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுடன் குரோதங்ளை ஏற்படுத்திக் கொள்வார்கள். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சூழ்ச்சி செய்வதாகவும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பார்கள் என்றும் நினைத்துக் கொள்வார்கள். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பலிவாங்க
 செயற்படுவார்கள்.
எனக்கு எதிர்பார்ப்பொன்று தான் இருந்தது. பொதுவாக எந்தவொரு இராணுவ தளபதியிடமும் அந்த அப்பாவியான எதிர்பார்ப்பு இருக்கும் என்றே நான் கருதுகிறேன். இராணுவ தளபதியொருவருக்கு இந்த நாட்டின் சார்பான தூதுவராக பதவி வகிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன.
எதிர்ப்பார்ப்பு எனக்கிருந்தது
சில இராணுவத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளராக பதவி வகிக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன. அவ்வாறான எதிர்பார்ப்பு தான் எனக்கும் இருந்தது. அதற்கு அப்பால் செல்ல எதிர்ப்பார்திருக்கவில்லை. 2009ஆம் ஆண்டில் நாம் யுத்தத்தை நிறைவு செய்தோம். நாம் யுத்தத்தை செய்யும் காலத்தில் யுத்தத்துக்கு மேலதிக பணம் செலவாகவில்லை. இராணுவத்தை 2005 ஆம் ஆண்டில் நான் பொறுப்பேற்கும் போது இராணுவத்தின் செலவினங்களுக்காக வருடமொன்றுக்கு 82 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
3 வருடங்களும் 7 மாதங்களும் இராணுவ தளபதியாக நான் செயற்பட்டிருந்தேன். ஒரு இலட்சத்து 16 ஆயிரமாக இருந்த இராணுவத்தின் எண்ணிக்கையை 2 இலட்சமாக அதிகரித்தேன். அப்போதும் எனக்கு 82 மில்லியன் ரூபாய் தான் கிடைத்தது. எனினும், இராணுவத்தை பராமரிப்பதற்காக மேலதிகமாக நான் பணம் 
கேட்டிருக்கவில்லை.
2012 இல் இருந்தே செலுத்த ஆரம்பிக்கப்பட்டது
இதேநேரம், அதற்கு முன்னரும் நான் யுத்தத்துக்கு கட்டளையிட்ட சந்தர்ப்பத்திலும் யுத்தத்துக்கான ஆயுதங்களை வாங்கும் நடவடிக்கைகள் இந்த 82 பில்லியனுக்கு வெளியிலேயே நடைபெற்றன. அது சீனாவில் இருந்த நடைபெற்றிருந்தது. நான் யுத்தம் செய்தபோது வாங்கப்பட்ட ஆயுதங்களுக்கான கட்டணங்கள் 2012 ஆம் ஆண்டிலேயே செலுத்த ஆரம்பிக்கப்பட்டன. அவை 2020 வரை செலுத்தப்படும்.
யுத்தத்துக்கான செலவுகள் 2012 ஆம் ஆண்டிலிருந்தே செலுத்த ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு யுத்தத்தை காட்டி மக்களை ஏமாற்றி யுத்தத்துக்கென கூறி அந்த பணத்தை அப்போதைய ஆட்சியாளர்கள் கொள்ளையடித்திருந்தனர். உதாரணமாக 130 மில்லிமீற்றர் தோட்டாக்களை குறிப்பிட முடியும். அவற்றை நாம் கப்பல் கணக்கிலேயே
 கொண்டு வருவோம். யுத்தம் ஆரம்பிக்கும் போது அந்த தோட்டவொன்றின் விலை 250 டொலராக காணப்பட்டது. 15 வருடங்களில் அதன் விலை 50 டொலரினால் மட்டுமே அதிகரித்திருந்தது. யுத்தம் நடபெற்ற காலத்தில் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் அந்தத் தோட்டவொன்றுக்கு 650 டொலர் கணக்கில் செலுத்த ஆரம்பித்திருந்தார். இது 400 டொலர் அதிகமாகும்.
யுத்தம் செய்யமுடியவில்லை
இவ்வாறு செலவிட்டு இறுதியில் எனக்கு தோட்டா வாங்குவதற்கு நிதி இல்லாமல் போய்விட்டது. தோட்டகள் இல்லாம் என்னால் 4 மாதங்கள் யுத்தம் செய்ய முடியாமல் போய்விட்டது. 2008 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எம்மிடம் போதிய தோட்டக்கள் இல்லாமையினால் நாளொன்றுக்கு ஒரு மல்டி பரல் தாக்குதலை தான் மேற்கொண்டிருந்தோம். அதன் பின்னர், பாகிஸ்தான் இராணுவ தளபதியிடம் நான் தனிப்பட்ட ரீதியில் பேசி 60 மில்லியன் டொலர் பெறுமதியான தோட்டக்களை பெற்றுக்கொண்டோம்.
ஆயுதங்கள் இல்லாத யுத்தம்
பாதுகாப்பு அமைச்சரும், பாதுகாப்புச் செயலாளரும் ஒன்றும் செய்யாமல் மேலே பார்த்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், பசில் ராஜபக்ஷவுடனும் பேசி 60 மில்லியன் டொலரை பெற்று பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் எனக்கிருந்த நட்பை பயன்படுத்திதான் தோட்டாக்களை வரவழைத்து போதிய ஆயுதங்கள் இல்லாத ஆறு மாதகால யுத்தத்தை நாம் நடத்தியிருந்தோம். அந்தவகையில் தற்போது யுத்தவெற்றிக்கான கௌரவத்தை உரிமைக் கோருபவர்களுக்கு இந்த விடயங்களெல்லாம் மறந்து
 போய்விட்டன.
2005ஆம் ஆண்டு மற்றும் 2010, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களைப் பொருத்தவரையில், 2005 ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களானது மிகவும் மோசடிமிக்கதாகவே நடைபெற்றிருந்தன.
பிரபாகரனுக்கு கப்பம்
தமிழ் மக்கள் வாக்களிப்பை தடுப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷவினால் பிரபாகரனுக்கு 2 மில்லியன் டொலர் கப்பம் வழங்கப்பட்டது. ஜனாதிபதி அலுவலகத்தில் பசில் ராஜபக்ஷவுக்கு இருந்த அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் இது பற்றி என்னிடம் கூறியிருக்கிறார். அத்துடன் கடற்புலிகளுக்குத் தேவையான படகுகளை மலேசியாவிலிருந்து வாங்குவதற்கு 2 மில்லியன் டொலர்களை தருவதாக பிரபாரகனுக்கு கூறியிருந்ததாகவும் அதன் பசில் ராஜபக்ஷவே மலேசியாசென்று வழங்கிருந்தார் என்றும் அமைச்சர் பொன்சேகா
 தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாது, அச் சந்தர்ப்பத்தில் மலையக அரசியல்வாதிகள் இருவர் அங்கிருந்ததாகவும், மலையக மக்களை வாக்களிப்பதற்கு இடமளிக்கவேண்டாமென, பிரபாகரன் அவ்விருவரிடமும் கேட்டுக்கொண்டதாக பசில் ராஜபக்ஷ என்னிடம் கூறினார். ஆகவே, கூறுபவற்றை பார்த்தால் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாதிகளுக்கு பணம் வழங்க செயற்பட்டிருந்தால் அது மரணதண்டனைக்குரிய குற்றமாகும். அந்தவகையில் இவ்வாறான செயற்பாடுகளிலேயே அப்போதிருந்த பிரபல அரசியல் வாதிகள் ஈடுபட்டிருந்தனர். அது பற்றி தேடிப்பார்ப்பதற்கு காலங்கள் கடந்துவிடவில்லை.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலும் மிகவும் மோசடிமிக்கதாகும். வாக்கெண்ணும் ஆறு நிலையங்கள்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. தேர்தல் பெறுபேறுகள் திருத்தி எழுதப்பட்டு வெளியிடுமாறு கூறப்பட்டது. இதனால் அப்போதிருந்து தேர்தல் ஆணையாளருக்கு பெரும் மன அழுத்தம் ஏற்பட்டது.
கடைக்கு கூட வருவதில்லை
அவர் எங்கு சென்றார் என்பது இதுவரை தெரியவில்லை. ஆகவே, 2005 ஆம் மற்றும் 2010 ஆம் ஆண்டு தேர்தல்கள் நீதியான முறையில் நடைபெற்றிருந்தால் மஹிந்த ராஜபக்ஷ இரு 
தேர்தல்களிலும் தோல்விகண்டிருப்பார். இறுதியில் 2015 ஆம் ஆண்டிலும் ஆசையில் போட்டியிட்டார். எனினும், அதில் மோசடிகளை மேற்கொள்ள முடியாமல்போய்விட்டது. வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் இருந்தபடியால் வாக்கெண்ணும் நிலையங்கள்மீது தாக்குதல்களை நடத்த முடியாமல்போனது. இரண்டு வருடங்களும் ஏழு மாதங்களும் 
போரை நான் வழிநடத்தியிருந்தேன். யுத்தம் நிறைவடைய இரண்டு மாதங்கள் இருக்கையில் என்னை அழைத்துப் பேசிய அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நீண்டகாலமாக 24 மணிநேரம் யுத்தம்செய்து நீங்கள் களைப்படைந்து
 இருப்பீர்கள்.
ஆகையால், அடுத்தநிலையிலுள்ள இராணுவ அதிகாரிக்கு எஞ்சியிருக்கும் நடவடிக்கைகளை ஒப்படைக்குமாறு கூறினார். அந்த இராணுவ அதிகாரி அப்போது வவுனியாவில் பதுங்கு குழிகளின் நிலைகளுக்கு பொறுப்பாக இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில், உண்மையில் யுத்தத்தை கொண்டுநடத்துவதற்கு பெரிதாக ஒன்றும் எஞ்ஞியிருக்கவில்லை. என்னை அகற்றிவிட்டு யுத்தத்தை கொண்டுநடத்தி, தான்தான் யுத்தத்தை வெற்றிக்கொண்டேன் என்ற கௌரவத்தை சம்பாதித்துக்கொள்வதற்காக இதை செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்துக்கொண்டேன்.
பிரபாகரன் உயிருடன் இருந்தார்
மே 19 ஆம் திகதி யுத்தம் முடிந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை விடுத்தனர். அப்போதும்கூட யுத்தம் முடிவடைந்திருக்கவில்லை. பிரபாகரன் உயிருடன் இருந்தார். எனினும், நாடாளுமன்ற நிகழ்வு முடிவடைந்து நான் காரில் சென்றுக்கொண்டிருந்தபோது பிரபாகரனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.
 யுத்த வெற்றக்கான கௌரவத்தை பெறுவதற்கு முயற்சிக்கும் இவர்கள் யுத்தம் முடிவடைந்த திகதியைகூட அறிந்துவைத்திருக்கவில்லை. வெளிநாடு செல்வதற்கான பயணத்தை ஐந்துதடவைகள் பிற்போட்டு, ஆறாவது தடவையாகவே சென்றிருந்தேன். இவ்வாறான நிலையில், கடைசிவாரத்தில் இராணுவத்தளபதி நாட்டில் இருக்கவில்லை என்றும், தாங்கள் யுத்தத்தை வழிநடத்தினர் என்றும் கூச்சலிடுகின்றனர்.
கீழ்த்தரமான நடவடிக்கை
கடைசி ஒருவார காலப்பகுதியினுள் இவர்கள் செய்த கீழ்தரமான நடவடிக்கைகளினால்தான் வெள்ளைக்கொடி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. அவ்வளவுகாலமும் மிகவும் தூய்மையாக மேற்கொள்ளப்பட்டுவந்த யுத்த நடவடிக்கைகள் இவர்களது ஒருவார கால நடத்தைகளினால் பாலில் ஒருதுளி விஷம் விழுந்ததுபோல் இருந்து. இறுதி காலத்தில் நற்பெயரை களங்கம் 
ஏற்படுத்திவிட்டனர்.
ஆகவே, இவ்வாறு யுத்தநிறைவின் இறுதிநாட்கள்கூட தெரியாமல் புத்தம் எழுதினர். எவ்வாறிருப்பினும் யுத்தத்தின் இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பது தொடர்பில் கூடியவிரைவில் நாம் மக்களுக்கு 
வெளிப்படுத்துவோம். சிலர் நல்லாட்சிக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நோக்கில் ஜெனிவா தீர்மானத்தின் பிரகாரம் விசாரணை நடந்தால் அது நாட்டின் இறைமைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு என்றும் பிரச்சினை கிளப்பிவருகின்றனர். எனினும், யுத்தத்தை வழிநடத்தியவன் என்ற வகையில் கட்டாயம் வெளிப்படையான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும். அந்த விசாரணை வெளிப்படையாக நடத்தப்படுவதற்கும், அதை எமக்கும் பலமாக்கிக்கொள்வதற்கும் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களையும், ஆலோசகர்களையும் ஈடுபடுத்திக்கொள்ள
 வேண்டும்.
ஏனெனில், யுத்தத்தை வழிநடத்தியன் என்ற வகையில் ஜெனிவா சாசனங்களையும், மனித உரிமைகளையும் மதித்தே யுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அவற்றை யாரும் ஒருசிலர் மீறியிருக்கும் பட்சத்தில் தண்டனை வழங்கப்படவேண்டும். இராணுவத்தின் கௌரவத்தைப் பாதுகாத்துக்கொள்ள இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். இதேநேரம், வெள்ளைக்கொடி விவகாரம் பற்றியும் பேசப்பட்டது. அது தொடர்பில் எனக்கும்கூட மூன்றுவருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இந்த விடயம் பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏனெனில், இது பற்றி உண்மை. மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட 
வேண்டும்.
இதேநேரம், கடந்த காலங்களில் பேசப்பட்ட பல்வேறு கொலைச் சம்பவங்களும் இருக்கின்றன. தாஜுடீன், ரவிராஜ், எக்னெலிகொட, லசந்த விக்கிரமதுங்க போன்றை கொலைகள் தொடர்பில் கட்டாயம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அந்த அனைத்து கொலைகளையும் செய்தது ஒரு நபர், ஒரு குழு தான். அவ்வற்றின் பின்னணியில் இருந்ததும் ஒரு அணியினர் தான். அந்த காலப்பகுதியில் அதிகாரத்தில் இருந்த தரப்பினர் தான் அவற்றின் பின்னணியில் இருந்தனர். தற்போது அது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கிறது’ என்று
 தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

ஜூன் 09, 2016

இன்று இடம்பெற்ற கைக்குண்டு வீச்சில் இரு பெண்கள் உட்பட மூவர் சாவு!

கொஸ்வத்தை – தலங்கம பகுதியில் இன்று இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரும் பலியாகினர்.
9 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் பலியான ஆண் புனிதத் தளம் ஒன்றில் 
பணிபுரிபவராவார்.
அவரிடம் பெண் ஒருவர் தனது தாய் மற்றும் மகளுடன் வழிபாடு நிமித்தம் சென்ற வேளை,  முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பின்னர், இது தொடர்பில் முறையிட குறித்த பெண் பொலிஸ் நிலையம்
 சென்றுள்ளார்.
மேலும் இந்த நிலையில், அங்கு வந்த அந்த ஆண் நபர் கைக்குண்டை வெடிக்க வைத்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதில், சம்பந்தப்பட்ட ஆணும், பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பெண்ணின் தாய் மற்றும் மகள் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்   
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

ஜூன் 01, 2016

மட்டக்களப்பில் கிராமசேவகரை தாக்கியமைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து கிராம சேவகரை இராணுவம் தாக்கியதை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .
காட்டு பிரதேசங்களில் இருந்து மரங்களை வெட்டிக்கொண்டு வந்த இராணுவத்தினருக்கும் கிராம சேவகருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இராணுவத்தினர் கிராமசேவகரை 
தாக்கியுள்ளனர்.
இவ்வாறு கிராமசேவகர் தாக்கப்பட்டமையை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரன் 
தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கிராம சேவகர்கள், மக்கள் என பலரும் கலந்து கொண்டமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>