18

siruppiddy

பிப்ரவரி 22, 2016

சிங்களவர்கள் தான் தலைவர் பிரபாகரனை உருவாக்கியது !

தமிழர்களுக்கான உரிமைகளை சிங்கள தேசம் வழங்கியிருந்தால் பிரபாகரனும் தோன்றியிருக்க மாட்டார். ஆயுதப் போராட்டங்களும் நடந்திருக்காது. இதனை சிங்கள தேசம் உணர்ந்து கொண்டு தனது செயற்பாடுகளை இனியாவது முன்னெடுக்க
 வேண்டும் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு சீர் திருத்தங்கள் தொடர்பில் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை நேற்று  யாழ் மாவட்டச் செயலகத்தில் இரண்டாவது நாளாகவும் நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழிழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரணை உருவாக்கியது தமிழ் மக்கள் அல்ல. சிங்கள மக்களே இதற்கு நாட்டில் கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த அரசியல் யாப்புக்களே 
காரணம் என 
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனூடாகவே நல்லாட்சியும் நல்லிணக்கமும் சமத்துவமும் ஏற்படலாம் என அரசியலமைப்பு சீர் திருத்தக் குழுவிடம் பொது மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்படாத அதே வேளை இருக்கின்ற சில உரிமைகளும் மறுக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் வந்திருக்கின்றதே வரலாறுகளாக இருக்கின்றன.
இதனாலேயே நாடு சுதந்திரம் அடைந்திருந்தாலும் எமக்கான சுதந்திரம் இன்று வரை கிடைக்காத நிலையில் இருக்கின்றோம். இவ்வாறு எமது உரிமைகள் மறுக்கப்பட்டு எமக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டுகொண்டிருந்த போதே எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்குத் 
தள்ளப்பட்டார்கள்.
 அத்துடன் தந்தை செல்வநாயகம் முதல் தமிழ் மக்களின் தலைவர்கள் ஏமாற்றப்பட்டே வருகின்றதே வரலாறுகளாக இருக்கின்றன. அதே போன்று குறிப்பாக தமிழ் மக்களிற்காக இன்றிருக்கின்ற தலைவரான சம்மந்தனும் இந்த ஆட்சியாளர்களாலும் ஏமாற்றப்படலாம் எனவும் பொது மக்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



பிப்ரவரி 19, 2016

பேர்லினில் புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

ஜேர்மன் தலைநகர் பேர்லினில் புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நல்லாட்சி அரசாங்கம் 
என்ற பெயரில் தொடர்ந்தும் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாகக் கண்டித்தும், ஜேர்மன் அரசாங்கம் எந்தவகையான உதவிகளையும் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கக் கூடாது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கறுப்புக் கொடியை தாங்கியவாறு ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கலந்து கொண்டனர். மகிந்த ராஜபக்ச
 அரசாங்கத்திற்கும் 
மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திற்கும் இடையே பாரிய வேறுபாடுகள் இல்லை என்றும் சுட்டிக்காட்டிய ஆர்ப்பாட்டகாரர்கள், போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும் கோஷம் எழுப்பியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராகவும் கோஷம் எழுப்பிய ஆர்ப்பாட்டகாரர்கள் சர்வதேச ரீதியாக தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஆதரவு தளத்தை உடைக்கும் செயற்பாட்டில் மைத்திரிபால சிறிசேன ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டியதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிப்ரவரி 09, 2016

முன்னாள் அதிபர் மகிந்த கண்ணீர் சிந்தியது ஏன்?

இந்துக்களின் காவியமான இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் தற்போது சிறிலங்காவில் இடம்பெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக சிறிலங்காவில் நவீன இராமாயண இதிகாசம் உருவாகியுள்ளது.
குறிப்பாக சிறிலங்காவின் ஆட்சியைத் தம் வசம் வைத்திருந்த ராஜபக்ச குடும்பத்தின் தற்போதைய நிலை நவீன இராமாயண இதிகாசத்தைத் தோற்றுவித்துள்ளது.
ஒரு ஆண்டிற்கு முன்னர் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தனது ஆட்சியிலிருந்து தோற்கடிக்கப்பட்ட பின்னர், இவரைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட புதிய அரசாங்கமானது ராஜபக்சவின் கோட்டையைத் தகர்த்து எறிவதற்கான நடவடிக்கையில் 
இறங்கியுள்ளது.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் துணைவியார் கடந்தவாரம் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யப்பட்டமை மற்றும் இவரது மகன்களில் ஒருவரான யோசித ராஜபக்ச நிதி மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டமை போன்றன தொடர்பாக பி.பி.சி செய்தியாளர் சாள்ஸ் ஹவிலாண்ட் வெளியிட்டுள்ள 
தகவல்கள்-
யோசித கைதுசெய்யப்பட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் மகிந்தவின் கண்களில் நீர் நிரம்பியிருந்த ஒளிப்படம் ஊடகங்களில் வெளியிடப்பட்டன. யோசிதவிற்கு எதிராக நிதி மோசடிக் குற்றங்கள் 
முன்வைக்கப்பட்டுள்ளன.
இது இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் எதிரான அரசியல் பழிவாங்கலாக நோக்கப்படுகிறது. தான் கட்டியெழுப்பிய குடும்ப ஆட்சி கடந்த ஒராண்டில் நிர்மூலமாக்கப்பட்டதையே மகிந்தவின் கண்ணீர் சிந்திய ஒளிப்படம் தெளிவாகக் காண்பிக்கின்றது.
மகிந்தவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார அதிகாரங்களைத் தம்வசம் வைத்திருந்த இவரது இரண்டு சகோதரர்களும் மற்றும்
 மகிந்தவின் 
மனைவி மற்றும் இவரது இரண்டு மகன்மாரும் தற்போது ஆயுத விவகாரம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டும் விசாரணைக்கும் முகங்கொடுக்கின்றனர்.
ஆனாலும் இவ்வாறான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் மகிந்தவும் அவரது குடும்பத்தவர்களும் மறுத்தே 
வருகின்றனர்.
30 ஆண்டுகளாக சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தை வெற்றி கொண்டமைக்காக அநேக சிங்களவர்கள் ராஜபக்சவிற்கு மதிப்பளித்தனர். பெரும் தொகையான உயிர்கள் காவுகொள்ளப்பட்டு இந்த யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட போதிலும் சிங்களவர்கள் மகிந்தவிற்கு புகழாரம் 
சூட்டினர்.
அதேவேளையில், மகிந்தவின் குடும்ப ஆட்சியானது சிங்கள மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுவே மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியுற்று மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறக் 
காரணமாகியது.
கடற்படையில் இணைந்த யோசித ராஜபக்ச சலுகை அடிப்படையில் பதவி உயர்த்தப்பட்டார் என அதிகாரிகள் குற்றம் சுமத்துகின்றனர். கடந்த ஆண்டு, சிறிலங்காவின் றக்பி வீரர் ஒருவர் முன்னாள் அதிபர் பாதுகாப்பு வீரர் ஒருவரால் கொல்லப்பட்டதற்கு யோசிதவின் காதல் விவகாரமே காரணம் என அமைச்சர் ஒருவர் குற்றம்
 சுமத்தியுள்ளார்.
ராஜபக்சாக்கள் மட்டுமன்றி இராணுவ மற்றும் புத்த பிக்குகள் கூட பல்வேறு வன்முறைகளை மேற்கொண்டுள்ளனர். தமிழ்ப் பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு நான்கு இராணுவ வீரர்களுக்கு கடந்த ஒக்ரோபரில் நீண்டகால சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டது.
இதேபோன்று ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கேலிச்சித்திர வடிவமைப்பாளரான பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து புலனாய்வாளர்கள் தற்போது 
கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் கடும்போக்கு பௌத்த பிக்குவான ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கடந்த கால குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்தால் பல்வேறு கைதுகள் இடம்பெறுகின்றன.
சிறிலங்காவின் ஆட்சியில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தற்போது சுதந்திரமாகச் செயற்படக் கூடிய சூழல் சிறிலங்காவில் உருவாகியுள்ளது.  இருப்பினும் சட்ட ஆட்சியை சிறிலங்கா அரசாங்கம் மிகவும் இதயசுத்தியுடன் செயற்படுத்துகின்றதா என்கின்ற சந்தேகம் நிலவுகிறது.
கடந்த காலங்களில் சட்ட ஆட்சியை மீறிய சிலர் இன்னமும் கைதுசெய்யப்படாது சுதந்திரமாக உலாவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் மேர்வின் சில்வா ஒருவராவார். ராஜபக்சவின் காலத்தில் பொதுத் தொடர்பாடல் அமைச்சராக மேர்வின் சில்வா
 செயற்பட்டார்.
இவர் தனது அடியாட்கள் மூலம் தனது விரோதிகள் மீது பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரதேச சபை அதிகாரி ஒருவரை மேர்வின் சில்வா மரம் ஒன்றில் கட்டினார். இதுவே இவரது வன்முறைச் செயற்பாடுகளுக்கு சிறந்ததொரு 
உதாரணமாகும்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மேர்வின் சில்வா அவரது கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார். ஆனால் பின்னர் இவர் மீதான குற்றங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு இவர் விடுவிக்கப்பட்டார்.  இன்று மேர்வின் சில்வா சுதந்திரமாகத் திரிகிறார்.
இவர், தன்மீதான அனைத்துக் குற்றங்களுக்கும் தனது முன்னாள் பாதுகாப்பாளர்களான ராஜபக்ச சகோதரர்களே காரணம் எனக் கூறுகிறார். இவர்களே காணாமற் போதல்களுக்குக் காரணம் என வெளிப்படையாக குற்றம் சுமத்துகிறார்.
இதேபோன்று முன்னர் ராஜபக்சவின் ஆதரவாளர்களாகவும் விசுவாசிகளாகவும் செயற்பட்ட பலர் இன்று அமைச்சரவையில் சிறந்த பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது சிறிலங்காவின் சட்ட ஆட்சியை கேள்விக்குறியாக்கியுள்ளது.
சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது நாட்டில் தீவிர மாற்றத்தை நோக்கி மிக மெதுவாகவே நகர்கின்றது என கடந்த ஆண்டு மரணமாகிய மறுமலர்ச்சி சிந்தனைவாதியான பௌத்த பிக்குவான மாதுளுவாவே சோபித தேரர் சுட்டிக்காட்டியிருந்தார்.
சிறிசேன தற்போது நாட்டில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தக் கூடிய ஏதுநிலைகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார். ஆகவே அவர் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி நாட்டில் சிறந்த மாற்றங்கள் ஏற்படுவதற்கான பணிகளை முன்னெடுக்க
 வேண்டும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



பிப்ரவரி 03, 2016

திடீர்ரடியான மைத்திரியின் அதிரடி! ரணில் அதிர்ச்சி! மகிந்த திணறல்!!!

மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவை மைத்திரிபால சிறிசேன அதிரடியாக கைது செய்யச் சொல்லி மிகப்பெரிய அதிர்வலைகளை இலங்கை அரசியலில் ஏற்படுத்தியுள்ளார்.
மிகவும் அமைதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனா அவ்வப்போது எதிர்பாராத விதமாக திடீர் திடீரென்று தனது முடிகளை அறிவித்து இலங்கை அரசியலில் அவ்வப்போது தன்னை நிலைநிறுத்தி 
வருகின்றார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செல்வாக்கு இன்னமும் குறைவடையவில்லை என்பது உண்மையாயினும், மைத்திரிபால சிறிசேனவிற்கும் அதே அளவு இடம் சிங்கள மக்கள் மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களிடமும் உண்டு என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு 
இடமில்லை.
இதனால் அரசியலில் இரு பெரும் துருவமாக இவர்கள் விளங்குகின்றார்கள். ஆயினும், மகிந்த ராஜபக்சவின் விடையத்தில் மைத்திரிபால சிறிசேன தனது காய்களை மெல்லவே நகர்த்துகின்றார் என்பது தெளிவாக
 தெரிகின்றது.
ஏனெனில் மகிந்த ராஜபகச் விடையத்தில் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் அது அவருடைய ஆட்சிக்கே குந்தகம் விளையும் என்பதில் அவர் தெளிவாகவே இருக்கின்றார்..
இதனால் தான் இன்றுவரை மகிந்த ராஜபக்சவை கைது செய்யுமாறு அவரால் உத்தரவு பிறப்பிக்க முடியவில்லை. மகிந்த ராஜபக்ச மீதான விடையத்தில் நிதானம் முக்கியம் என்பது மைத்திரியின் முடிவு. அது தவறும் அன்று. ஆனால் மகிந்த ராஜபக்சவிற்கு அவ்வப்போது ஒரு பயப்பீதியை மைத்திரி கொடுக்காமலும் இல்லை.
முதலில் பசில் ராஜபக்சவை கைது செய்ய பணித்தார். கோத்தபாய ராஜபக்சவை விசாரணைக்கு இழுத்துவிட்டார். மகிந்தவின் மனைவியையும் அவர் விசாரணைக்காக அலைய 
வைத்திருக்கிறார்.
அதன் அடுத்த கட்டமே யோசித ராஜபக்சவின் கைது நடவடிக்கை. இது மகிந்த ராஜபக்வின் ஊழல்களை விசாரிப்பதற்கானது என்பதைக்காட்டிலும் இப்படியான ஒரு நெருங்குவாரங்களை கொடுத்து அவரை மிரட்டுவதற்கான, அல்லது தன்னுடைய இருப்பைக் காட்டுவதற்கான செயற்பாடாக ஜனாதிபதி நினைத்திருக்க கூடும். அதன் விளைவு தான் 
யோசிதவின் கைது.
ஆனால் மைத்திரிபால சிறிசேனவின் இந்த முடிவானது அவசரப்பட்டு எடுக்கப்பட்ட ஒன்று என்றும், இதனை நினைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சி அடைந்து போயுள்ளார் என்றும் பிறிதொரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அரசாங்கமாக ஆட்சி செலுத்தும் தற்போதைய கூட்டு அரசியலைப்பயன்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை வளப்படுத்த ரணில் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றார்.
இதன் முதற்கட்டமாக, அடுத்து நடக்கவுள்ள இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அதிகபடியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாகவேண்டும் என்னும் கண்டிப்பு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மைத்திரிபால சிறிசேன யோசித ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தமையானது அவர் மீதான கூட்டு எதிர்க்கட்சிகள் மீதான அனுதாப அலைகளாக மாறிவிடும் என ரணில் அச்சம்
 கொண்டுள்ளார்.
இதேவேளை, மகிந்த, கோத்தபாய, பசில் இணைந்து புதிய மாற்று அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான இக்கட்டான அரசியல் சூழ்நிலையில் மைத்திரியின் இந்த முடிவு தனது அரசியல் காய் நகர்த்தல்களுக்கு நெருக்கடியானது என அவர் கலங்கிப்போயுள்ளார்.
ஆனால் மைத்திரிபால சிறிசேனவின் இந்த முடிவால் மகிந்த ராஜபக்ச தாங்க முடியாத கவலையோடு, கடும்கோபத்திலும் தனது கருத்துக்களை வெளியிட்டுவருகின்றார்.
நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்து நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்த என் குடும்பத்திற்கு இப்படியொரு நிலமையை ஏற்படுத்தியிருக்கின்றார்கள் என எண்ணி 
கலங்கியுள்ளார்.
அதனை அவர் வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கின்றார். இந்த நாட்டிற்காக பாடுபட்டதற்காக கிடைத்த பரிசு என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார். இதனிடையே முழு நேர அரசியலில் இறங்கப்போகின்றேன். எண்ணை சீண்டிப்பார்க்கின்றார்கள் என்றும் கூறியிருக்கின்றார்.
இதுவொருபுறமிருக்க, மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் தனது முகப்புத்தகத்தில் சிங்கத்தின் வாலை பிடித்துவிட்டீர்கள். என்றும் கருத்திட்டு இருக்கின்றார்.
இந்நிலையில், இன்று மகிந்த ராஜபக்ச கண்டி தலதா மாளிகைக்கு வழிபாட்டுக்காக சென்றுள்ளார். இது அவரின் மன ஆறுதலுக்கான பயணமாக இருந்தாலும், அவரின் திட்டமிட்ட செயற்பாடாக 
நோக்கப்படுகின்றது.
நாட்டின் மிகப்பெரிய பெரும்பான்மை தலைவர்களாகிய மைத்திரி, ரணில், மகிந்த மூவரும் தற்பொழுது வேறு வேறு சிந்தனையில் இருக்கின்றார்கள். ஆனால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவிற்கு சற்றே சந்தோசமான நிகழ்வாக இது காணப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் மகிந்த ராஜபக்ச இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கு கொடுத்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
இந்நிலையில் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் சிறிது காலம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தங்கியிருந்தார் என்பது 
குறிப்பிடத்தக்கது.
எதுவாயினும் மைத்திரியின் இந்த அதிரடி உத்தரவு பலரை ஆடிப்போகச் செய்துள்ளது என்பதோடு அரசியலில் பரபரப்பையும் ஏற்படுத்திவிட்டிருக்கின்றது என்பதே உண்மை.
பொறுத்திருந்து பார்க்கலாம் மைத்திரியின் இந்த நடவடிக்கையால் இன்னும் என்னென்ன நிகழ்வுகள் நடக்கப்போகின்றன என்று.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>