18

siruppiddy

ஜூலை 31, 2015

இலங்கையில் மீண்டும் இந்திய அமெரிக்க ஆதிக்கப்போட்டியா?

உலக நாடுகளில் சுயநலமிக்க நாடுகளில் முதன்மை நாடு அமெரிக்கா. அடுத்து முதன்மை பெறுவது இந்தியா என்பது நம்பில் பலருக்கும் நன்கு தெரியும். இந்திய தேசம் அண்டை தேசம் என்பதுடன், இலங்கை தேசத்தின் தாய்த் தேசம் என்று சொன்னால் மிகைப்படுத்தலன்று.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பூர்வீக பந்தங்கள் நிறையவே உண்டு, மொழி, பண்பாடு, கலாச்சாரம், மதங்கள் என்று எடுத்து நோக்கின் அத்துணையும் இரு நாட்டையும் இணைக்கும் பாலங்கள் எனலாம். 
இந்தியாவில் ஏற்படுகின்ற அத்துணை மாற்றங்களும் இலங்கையிலும் காலாகாலமாக ஏற்படுவது வழமை.
பாக்கு நீரினை ஒன்றே இரு நாட்டையும் பிரித்து நிற்கின்றது. தவிர, வேறேதும் இங்கு தடையல்ல.
அதனாலேயே இந்தியாவில் உள்ள தமிழ் உறவுகளை நாம் இன்று வரை தொப்புல் கொடு உறவுகள் என்றழைக்கின்றோம்.
ஆக தாய் தேசம் என்று இன்று நாம் சொல்லும் இந்தியா அதாவது இந்திய மத்திய தேசம் இலங்கை விடையத்தில் அன்றிலிருந்து இன்றுவரை தனது சுயநல அரசியலையே நடத்திவருகின்றது.

இலங்கை இந்தியாவின் தெற்குக்கரையில் தமிழ்நாட்டுக்கு கீழ் அமைந்துள்ளமையினால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அது மிகவும் பயனுள்ளதாகவே அமைந்துள்ளது. ஐரோப்பியர்கள் முதலில் இந்தியாவை கைப்பற்றியிருந்தாலும், அவர்கள் இலங்கையையும் கைப்பற்றி தமது ஆளுகைக்குள்ளேயே வைத்திருந்தார்கள்.

இந்தியாவை கண்காணிப்பதற்கு ஏற்ற வழமான இடம் இதுவென்பது ஐரோப்பியர்களுக்கு நன்கு தெரியும். அதன் பிரதிபலிப்பே இலங்கை மீதான தாக்கம்.

இந்திய நாடு தனது வெளிநாட்டுக்கொள்கைகளில் இலங்கை மீதான அதனது கொள்கை என்பது மிகவும் தவறான ஒரு கண்ணோட்டத்தில் அமைந்திருப்பதை அண்மைக்காலமான செயற்பாடுகள் மூலமாக உணர முடிகின்றது.
எழுபதாம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் எழுச்சியின் போது இலங்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம் ஆசியாவின் மிகச்சிறிய நாடான இலங்கை மீதுபரவத்தொடங்கியிருந்தது.
அதிலும் இலங்கையின் புத்தளத்தில் “வாய்ஸ் ஆவ் அமெரிக்கா” என்கின்ற தொலைத் தொடர்பு கோபுரம் அமைத்து தெற்காசியாவை அமெரிக்கா தனது கண்காணிப்பில் வைத்திருந்தமையானது இந்தியாவிற்கு மிகப்பெரியதொரு சவாலாகவே இருந்தது.
இந்த நெருக்கடி நிலையினை 1950 ஆண்டு காலப்பகுதியோடு வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவார்கள். 1950களில் பிரித்தானியர்களது திருகோணமலை கடற்படைத்தளம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மட்டுமன்றி இலங்கைக்கும் அது மிகப்பெரிய சவாலாக தான் இருந்தது.
எனினும் அது 1950களின் இறுதிப்பகுதியில் வாபஸ் பெறப்பட்டு விட்டது.
இந்நிலையில் எழுபதுகளில் விடுதலைப்போராட்ட இயக்கங்கள் எழுச்சி பெறவும், புலிகளின் வளர்ச்சியும் அமெரிக்காவிற்கு தலையிடியாகவே அது மெல்ல மாறத்தொடங்கியது.
மறுபுறத்தில் தனது தேசிய பாதுகாப்பிற்கு இலங்கை மீது அமெரிக்காவின் நகர்வை பிடுங்க இந்திய அரசாங்கம் திட்டம் வகுத்துக்கொண்டது. தமிழ்ப் போராளிக்குழுக்களை அழைத்து இந்தியாவில்
 பயிற்சி வழங்குவதற்கு இந்திராகாந்தி அம்மையார் இணக்கம் தெரிவித்ததோடு அதற்கு ஏற்றால் போல போராட்டாக் குழுக்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டன.
ஆனால் தவிர்க்க முடியாதவொரு சவாலை இந்திய மத்திய அரசாங்கம் எதிர்கொண்டது. தமது சுயநலத்திற்காக போராளிக்குழுக்களை ஆதரித்த இந்தியாவிற்கு புலிகளும், பிரபாகரனும் தலையிடியாக
 மாறியதே அது.
இலங்கையில் தோன்றிய 32இற்கும் அதிகமான போராட்ட குழுக்களில் புலிகள் மட்டும் இந்தியாவின் சொற்களுக்குள் கட்டுப்பட மறுத்தனர். புலிகள் தனி ஈழத்தில் அக்கறையாக இருந்ததோடு, அதில் உறுதியாகவும் இருந்தனர்.
இதன் அடுத்த நகர்வாகவே புலிகளை தேடியழிக்கும் நகர்வை இந்தியா கையிலெடுத்தது. போராளிக்குழுக்களுக்கிடையில் பிரச்சினையை மூட்டிவிட்டு அதனூடாக பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும்
 அன்றே அழிக்க முயன்றனர். ஆனால் இது பிரபாகரனை ஏனோ அசுரவளர்ச்சியடைய வைத்ததை இந்தியா சற்றும் அன்று எதிர்பார்த்திருக்கவில்லை.
எனினும் இந்தியாவின் இந்நகர்வுகள் தவுடுபொடியாக இந்திரா காந்திக்குப் பின்னர் ராஜீவ்காந்தி அரசியல் களத்திற்கு புகுந்து அவரும் இலங்கை மீதான இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கையை தவறாகவே பின்பற்றியிருந்தார்.
முதலில் புலிகளுக்கு சார்பாகவும், இலங்கை தமிழ் இனத்திற்கு காவலனாகவும் செயற்படுவதாக காட்டிக்கொண்டவர் பின்னர் இலங்கை அரசாங்கத்தோடு ஒப்பந்தம் செய்தார். அமைதிப்படையை அனுப்பினார்.
ஆனால் அந்த 13வது திருத்த ஒப்பந்தத்தை கிடப்பில் போடவேண்டிய தேவை ஜே.ஆர்க்கு ஏற்படவும், இந்திய இராணுவத்தை வெளியேற்றவும் காரணம் தேவைப்பட, தமிழர்களை காக்க வந்ததாக சொல்லப்பட்ட இந்திய அமைதிப்படையை அவர் தமிழர்களுக்கு எதிராக திருப்பி விட்டார்.
சிங்கள இராணுவத்திடம் வேண்டிக்கொண்டது போதாது என்று அண்டை நாட்டு இராணுவத்திடமும் ஈழத்தமிழினம் நொந்து கெட்டுப்போனது.
கடைசியாக ராஜீவ்காந்தியின் இந்தியப்படை பிரபாகரனிடமும், புலிகளிடமும் வாங்கிக்கட்டிக்கொண்டு திரும்ப, ஜே.ஆரின் இலக்கும் வெற்றி பெற்றது. அதிலும் இந்தியா தோற்றுப்போயிற்று.
தனது தேசிய பாதுகாப்பு என்பது தான் குறிக்கோள் என்பதில் குறியாக இருந்த இந்தியா புலிகளை அழித்தாக வேண்டுமென்பதில் கங்ஙணம் கட்டிக்கொண்டு நின்றது. அதற்கான வேலைகள் சரியாக நடக்க நோர்வே தலைமையிலான சமாதான ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட சமநேரத்தில் இலங்கை இராணுவத்தின் படைப்பலமும் சகல வழிகளிலும் பெருக்கப்பட்டது.
ஆனால் இந்தியாவில் ஆட்சி மாற்றம் பெற்றதும் சோனியா காந்தி பிரபாகரனை அழிக்கும் செயற்றிட்டத்தில் தீவிரமாகவே இருந்தார். அது மகிந்தவிற்கு வாய்ப்பாகவும் இருந்தது.
புலிகளை அழித்தால், அவர்களை அழிக்க சகல வழிகளிலும் மகிந்த தரப்பிற்கு உதவினால் தம் சொல்லை இலங்கை தட்டாது என்பதே சோனியா, மன்மோகன் அரசின் திடமான நம்பிக்கை. ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக மகிந்தர் சீனாவின் பக்கம் சாய்ந்தார்.
இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் மிகப்பெரிய தலையிடியாக மாறிப்போயிருந்தது. ஏற்கனவே பாகிஸ்தானை தனது கைக்குள் கொண்டுள்ள சீனா, இப்பொழுது இலங்கையையும், தனது கட்டப்பாட்டிற்குள் கொண்டுவந்தால் வல்லரசான அமெரிக்காவிற்கும், வல்லரசு கனவோடு நடைபோடும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் காத்திருந்தது.
மகிந்தவோடு நிகழ்ந்த பல சுற்றுப்பேச்சுக்கள் சாதகமாக காணப்பட்டாலும், அவர் பேசுவது ஒன்றும் செயற்பாடு இன்னொன்றுமாக இருக்க, இந்தியாவும், அமெரிக்காவும் கரம் கோர்த்தது. அதன் தாக்கமே யுத்த நாயகனின் வீழ்ச்சி.
இந்நிலையில் புலிகளை அழித்து வெற்றி கொண்டதாக இந்தியா பெருமிதம் கொண்டாலும் அது தனது தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டது என்பதை உணர்ந்தது.
இப்பொழுது சீனாவை அகற்ற அமெரிக்காவோடு கரம் கோர்த்து வீழ்த்தியாயிற்று. ஆனால் சீனாவின் இடத்தில் இப்பொழுது அமெரிக்கா!
1970 ஆண்டு காலப்பகுதியை மீண்டும் உணரமுடிகின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே ரணில் அமெரிக்காவில் தங்கியிருந்து ஒரு மாதகால அரசியல் பயிற்சியை முடித்துவிட்டு வந்திருக்கின்றார். பின்னர், ஆட்சி மாற்றம், இப்பொழுது இந்தியாவிற்கு கலக்கம்.
ஆனால் திரும்பவும் தனது வரலாற்று தவறை இந்தியா கையிலெடுத்திருக்கின்றது போல உணரமுடிகின்றது. அண்மைய நாட்களாக மகிந்தவின் வெற்றிக்கு இந்தியாவின் புலனாய்வுப்பிரிவான றோ வேலை செய்வதாகவே செய்திகள் உலாவருகின்றன.
அதை மெய்ப்பிக்கும் வகையில், தமிழகத்தின் பல இடங்களிலும், புலிகளின் முக்கிய போராளிகள் சைனட் குப்பிகளோடு கைது செய்யப்பட்டதாக அறிவித்ததோடு, பிரபாகரனோடு இருந்த முக்கிய நபரும் கைது செய்யப்பட்டார் என்றும் இந்திய பாதுகாப்புத் துறை சொல்லியிருக்கின்றது.
வடக்கில் மக்கள் புலிகளை தேடுகின்றார்கள் என்று கூறிப்பிரச்சாரம் செய்த மகிந்தவிற்கு இதுவொரு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கவே செய்கின்றன.
இந்நிலையில் இவ்வாரம் வெளிவந்த மகிந்த ராஜபக்ச அணியினரின் தேர்தல் விஞ்ஞாபனமும் ஒரு உண்மையை சுட்டி நிற்கின்றது. அதாவது ஆசிய நாடுகளுக்கே இலங்கையில் முன்னிரிமையென்று. 
அதாவது அமெரிக்கா மேற்குலம் பற்றி அவர் வாய் திறக்கவில்லை.
எனில் அவர் இந்தியாவிற்கே தனது ஆதரவு என்று சொல்லாமல் சொல்லியிருக்கின்றார். அப்படியென்றால் இந்தியா மீண்டும் மகிந்தரை கொண்டுவர முழுமூச்சோடு செயற்படுகின்றதா?
அப்படியெனில் அது மீண்டுமொருமுறை வரலாற்று தவறை செய்யவே ஆரம்பித்திருக்கின்றது. தனது பிராந்திய பாதுகாப்பிற்காக அது தவறுமேல் தவறு செய்கின்றது. இல்லாத புலிகளை உருவாக்கவும் முயற்சிக்கின்றது.
அமெரிக்க இந்திய ஆதிக்கப்போட்டி இலங்கையில் மீண்டும் உச்சம் பெற்றுள்ளமையானது தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய கேடாகவே கருதவேண்டியிருக்கின்றது.
இதை தமிழர் அறிவுஜீவிகள், சிவில் சமூகத்தினர், புலம்பெயர் தமிழர்கள், மற்றும் அரசியல் தலைமைகள் எவ்விதம் கையாளப்போகின்றார்கள் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். பொதுத் தேர்தல் அதற்கான பல விடைகளை, கதவுகளை திறந்து விடும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிரபாகரனை தேசியத் தலைவர் என்றே எல்லோரும் அழைத்தோம், இப்பொழுதும் அழைக்கின்றோம்.

இருதேசம் ஒரு நாடு என்ற கோசம் ஒரு அர்த்தமில்லாத கோசம் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து நவாலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
2015ம் ஆண்டின் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இருதேசம் ஒரு நாடு என்ற கோசத்துடன் இத் தேர்தலில் பங்குபற்றுகிறது.
எனினும் இந்த விடயத்தில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் ஜீ.ஜீ பொன்னம்பலம் 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி பிரித்தானிய குடியேற்ற நாடுகள் மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்த கருத்து மிகமுக்கியமானது.
இந்தக் காலத்தில் தந்தை செல்வநாயகமும் காங்கிரசிலேயே இருந்தார். மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் சட்ட சபையுடன் கூடிய ஒற்றையாட்சி அரசாங்கத்தை தமிழர்கள் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்றும் தகுந்த மாற்றுமுறை இல்லாத படியால்
 நாங்கள் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை கோருகின்றோம் என்று எழுதினார்.
இதில் ஒற்றையாட்சி அரசாங்கத்தை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள் என்ற கருத்து இன்றுவரை இலங்கை தமிழரசுக் கட்சியாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினாலும் இறுக்கமாக வலியுறுத்தப்பட்டே வருகிறது.அதன் காரணமாகவே சமஷ்டி முறையிலான ஆட்சி முறையை நாம் வலியுறுத்தி நிற்கின்றோம்.
அடுத்து சுயநிர்ணய உரிமை பற்றிய இந்தக் கோரிக்கையை அரசியல் ரீதியாக முதன்முதலில் முன்வைத்தவர் அமரர் ஜி.ஜி பொன்னம்பலம். ஆனால் அவர் சுயநிர்ணய உரிமை தமிழ் மக்களுக்கே உரியது என்று கூறினார். ஆனால் அவர் எச்சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசத்துக்கு சுயநிர்ணய உரிமை கோருவதாக சொல்லவில்லை.
1966 டிசம்பர் 19ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் எற்றுக் கொள்ளப்பட்ட குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் சமவாயத்தின் முதலாவது உறுப்புரை மக்களே சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்று கூறுகிறது.
ஆகவேதான் நாங்கள் எமது தலைவர்களான தந்தை செல்வா ,அமரர் அமிர்தலிங்கம், சிந்தனைச் சிற்பி கதிரவேற்பிள்ளை போன்றவர்களின் கருத்தின் அடிப்படையிலும் தந்தை செல்வா 1973ம் ஆண்டு
 செப்ரம்பர் மாதம் 04ம் திகதி இன்டர்நேசனல் கமிசன் ஒப் ஜீரிஸ் அமைப்புக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையிலும் இலங்கையில் மொழியால், கலாச்சாரத்தால், பாரம்பரியத்தால், வரலாற்றால் வேறுபட்ட இரண்டு தனித்துவமான தேசிய இனங்கள் வாழ்வதை வலியுறுத்தி வருகிறோம்.
அதனடிப்படையிலேயே தமிழ்த் தேசிய இனமென்ற மக்கள் 
குழாத்துக்கே சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை தெளிவுபடத் தெரிவித்து வருகிறோம்.
தேசம் என்ற வட மொழிச் சொல்லுக்கு சமனான தமிழ் சொல் நாடு என்பதாகும். நாடு என்றால் கன்றி என ஆங்கிலத்தில் கூறப்படும். ஆகவே இரு தேசம் ஒரு நாடு என்ற கோசம் ஒரு அர்த்தமில்லாத கோசமாகும்.
எமது இனத்தின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசமயப்படுத்தி விடுதலைப் புலிகளின் இயக்கத்தினதும் எமது இனத்தின் வரலாற்று தலைவனுமாகிய வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசியத் தலைவர் என்றே எல்லோரும் அழைத்தோம், இப்பொழுதும் அழைக்கின்றோம், தேசத்தின் தலைவர் என்று அழைக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை மாற்றவேண்டும் என்பதும் எமது கட்சியை மட்டும் கண்டனம் செய்வதுமே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினது அரசியல் சித்தாந்தமாக உள்ளது.
தென்னிலங்கை கட்சிகளையோ சிறிலங்கா அரசையோ எம்மைக் கண்டிப்பது போன்று கண்டிக்காமல் நல்லபிள்ளைத்தனமான அரசியலை இவர்கள் முன்னெடுக்கின்றார்கள் என்பதை மக்கள் புரிந்து 
கொள்ளவேண்டும்.
தமிழரசு கட்சியினதும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை ஓய்வூதியக்காரர்கள் என்றும் இவர்கள் கூறுகின்றனர். எம்மைப் போன்ற ஒய்வூதியர்கள் மிகவும் கடினமாக உழைத்த பின்னே ஓய்வூதியத்தை பெறுகின்றோம்.
ஆனால் இந்தக் கட்சியின் தலைவர்களோ 2004ம் ஆண்டுக்கும் 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அரைவாசிக் காலத்தில் அதிலும் ஆயுதப் போரட்டம் உக்கிரமடைந்து தமிழினம் இழப்புக்களைச் சந்தித்த காலத்தில் வெளிநாடுகளில் சுகபோகமாக வாழ்ந்துவிட்டு விடுதலைப் புலிகள்
 இருந்த போதும் நாட்டுக்குத் திரும்பாதவர்கள் 
புலிகளின் ஆயுத போராட்டம் மௌனித்த பின்பு நாட்டுக்கு திரும்பி வெளிநாட்டில் வாழ்ந்த காலத்தையும் கணக்கிட்டு ஓய்வூதியம் பெறுகின்ற இளம் ஓய்வூதிய சமுதாயமாகவே இவர்கள் உள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாகாணசபை தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என எல்லாத் தேர்தல்களிலும் பங்குபற்றி உள்ளுராட்சி மற்றும் மாகாண மட்டத் தலைவர்கள் பலரை உருவாக்கியுள்ளது..
ஆனால் தாங்கள் மட்டுமே தலைவர்களாக இருக்க வேண்டுமென்பதால் தலைவர்கள் மட்டும் போட்டியிடும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டும் பங்குபற்றிக் கொண்டு உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களைப் பகிஸ்கரிப்பதை கொள்கையாக கொண்டுள்ளனர் என்பது ஆழமாக கவனிக்கப்படல் வேண்டும்.
இவர்கள் கூறியபடி ஜனாதிபதித் தேர்தலைப் தமிழர்கள் பகிஸ்கரித்திருந்தால் இப்பொழுது மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருப்பார். அடுத்த ஏழு வருடத்திற்கு தமிழினத்தின் அடையாளத்தை அழித்திருப்பார். இதுதான் இவர்களின் பகிஸ்கரிப்பு லட்சணம் என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூலை 30, 2015

உரிமைகளை ஓரணியில் நிலைநாட்டுவோம்! கூட்டமைப்பு அறைகூவல்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பெருங்கூட்டங்கள் நேற்று வட்டக்கச்சியில் ஆரம்பித்துள்ளன. கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சுவிஸ்கரன் தலைமையில் வட்டக்கச்சி பொதுச்சந்தை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வு நடைபெற்றது.
காணோளிகள் இணைப்பு   ....

இதில் தமிழரசுக்கட்சி தலைவரும் வேட்பாளருமான மாவை.சேனாதிராசா, வட்டக்கச்சியை பிறப்பிடமாகக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன், வேட்பாளரும் சாவகச்சேரி டிறிபேக்கல்லூரியின் அதிபருமான அருந்தவபாலன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா, வடக்கு மகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, வவுனியா யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூலை 28, 2015

இதுதான் காலம் பூ.சுகியின் பசி


பிச்சை எடுக்கிறேன்
அப்போதும்
இச்சை கொண்டுதான்
பார்க்கிறார்கள்……..

பாவம் என்கிறார்கள்
பாவிகள்
அருகில் வந்து
அழகாய் இருக்கிறாய்
வருகிறாயா ?
தருகிறேன் என்கிறார்கள்……

உடல் விக்க
விரும்பவில்லை
ஒருவேளை உணவூட்டி
என் குழந்தை
உயிர் காக்க விரும்புகிறேன்……..

சில சமயம்
பசியின் கொடுமைதாங்கா
பாவிகளின் இச்சைக்கு
அடிபணிய எண்ணுவதுமுண்டு

என்ன செய்வது
இப்படியொரு நிலை
எனக்கு தோன்றியிருக்காது
போரில் என்னவர்
உயிர்காக்கப்பட்டிருந்தால்
ஆக்கம் பூ.சுகி 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூலை 26, 2015

கைத்துப்பாக்கி உடன் மீண்டும் வெள்ளை வான்

மிரிஹான பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் வேகமாகச் சென்ற WP-JP-9244 இலக்கம் கொண்ட வெள்ளை நிற வான் ஒன்றைப் பொலிஸார் சோதனையிட எடுத்த முடிவு, பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
அந்த வாகனத்தைச் சோதனையிட்ட போது, சிவில் உடையில் இருந்த மூவரில் ஒருவரிடம் இருந்து 13 ரவைகள் நிரப்பப்பட்ட, 9 மி.மீ கைத்துப்பாக்கி இருந்தமை பொலிஸாருக்கு அதிர்ச்சியளித்தது.
அந்த வாகனத்தில் இன்னொரு இலக்கத் தகடு உள்ளே கழற்றி வைக்கப்பட்டிருந்தமை மற்றொரு அதிர்ச்சியை அவர்களுக்கு அளித்தது. அது இராணுவத்துக்குச் சொந்தமானது. SLA- 59466 என்பது தான் அந்த வெள்ளை நிற வாகனத்தின் உண்மையான இலக்கத் தகடு.
ஆனால், பொலிஸாரிடம் பிடிபட்ட போது, அதில் சிவிலியன்களால் பயன்படுத்தப்படும் வாகனத்தின் இலக்கத் தகடு பொருத்தப்பட்டிருந்தது.
அந்த இலக்கத் தகடு, அல்விஸ் பிளேஸ், கொழும்பை முகவரியாகக் கொண்ட ஒரு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டது.
போலி இலக்கத் தகடு, சிவில் உடையில் இருந்தவர்களிடம் கைத்துப்பாக்கி, வெள்ளை நிற வான், இந்த மூன்றுமே பொலிஸார் சந்தேகம் கொண்டு, அவற்றைக் கைப்பற்றுவதற்குப் போதுமான அடிப்படையான விடயங்களாக இருந்தன.
அவற்றுக்கு மேலாக, அந்த வெள்ளை நிற வான் மடக்கிப் பிடிக்கப்பட்ட இடம், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷவின் வீட்டுக்குச் செல்லும் பாதைக்கு அருகில் இருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கூட மிரிஹான பகுதியில் தான் தங்கியிருக்கிறார். அந்த இடத்தின் முக்கியத்துவம் மற்றும் குறிப்பிட்ட வானின் சந்தேகப்படும்படியான விடயங்கள் அனைத்தும், தான் கடந்த வாரத்தில் வெள்ளை வான் குறித்த பரபரப்பு ஏற்படுவதற்குக் காரணம்.
இது தேர்தல் நேரம் என்பதாலும், இந்தத் தேர்தலில் கொள்கையை முன்னிறுத்துவதை விட உணர்ச்சியைக் கிளப்பும் உத்திகளிலேயே எதிர்க்கட்சியினர் அதிகம் நம்பிக்கை கொண்டுள்ளதாலும், இந்த விடயத்தை கவ்விப்பிடித்துக் கொண்டனர்.
தமது அரசாங்கத்தின் மீது வெள்ளை வான் கடத்தல்கள் குறித்து குற்றஞ்சாட்டியவர்களின் ஆட்சியில், இப்போது எங்கிருந்து வந்தது வெள்ளை வான் என்று பிரச்சார மேடைகள் அதிர்ந்தன.
மஹிந்த ராஜபக்ஷவுக்கும், கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சிலர் கூற, விமல் வீரவன்ஸவோ, அவர்களைப் படுகொலை செய்யும் திட்டத்துடனேயே இந்த வெள்ளை வான் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதனால், வெள்ளை வான் விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்தது.
என்றாலும், இந்த வெள்ளை வான் இராணுவத்துக்குச் சொந்தமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இது புலிகளிடம் இருந்து முள்ளிவாய்க்காலில் கைப்பற்றப்பட்ட வாகனங்களில் ஒன்றாகும்.
இந்த வாகனத்தை, மேஜர் ஜெனரல் பிரசன்ன டி 
சில்வா தனது பாதுகாப்பு பிரிவினரின் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
அதில் பயணம் செய்த போது கைது செய்யப்பட்ட மூன்று படையினரில் ஒருவர் கொமாண்டோப் படைப்பிரிவையும், இருவர் காலாட்படைப் பிரிவுகளையும் சேர்ந்தவர்கள். இந்த மூவரும், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்பு அதிகாரிகள் என்பது உறுதி 
செய்யப்பட்டுள்ளது.
அதுபோலவே, அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 9 மி.மீ கைத்துப்பாக்கியும், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்டது என்றும், அதனை அவர் 15 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இந்தத் துப்பாக்கியை, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பயன்படுத்தியிருந்தாலோ, அல்லது அவருடன் செல்லும் போது அவரது பாதுகாப்பு அதிகாரிகள் வைத்திருந்தாலோ இந்தளவுக்கு விவகாரமாக மாறியிருக்காது.
மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா இல்லாமல், தனியாக அதுவும் சிவில் உடையில் இவர்கள் துப்பாக்கியுடன் சென்றது தான் முதல் சர்ச்சை.
அதுபோலவே, இராணுவ இலக்கத் தகடு கொண்ட வாகனத்தில் போலியான இலக்கத்தகடு பொருத்தப்பட்டது அடுத்த சர்ச்சை.
இராணுவத்தினருக்கு கடமை நேரம் என எதுவும் இல்லை என்றும், தேவைப்படும் போது பாதுகாப்புக்காக துப்பாக்கியை எடுத்துச் செல்ல முடியும் என்றும் சில வாதங்கள் பாதுகாப்புத் தரப்பினால் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், இது எத்தகைய விபரீதங்களுக்கு காரணமாகலாம் என்பதற்கு, கடந்த காலத்தில் நிகழ்ந்த பல கசப்பான சம்பவங்கள் சாட்சியாக உள்ளன. இந்தச் சர்ச்சையில் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா சிக்கியிருப்பது தான் ஆச்சரியமானது.
அதுவும் தீவிர தேசியவாதிகளாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் விமல் வீரவன்ஸ போன்றவர்களினாலேயே, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா இவ்வாறு கீழ்த்தரமாக விமர்சிக்கப்படும் நிலைக்குள்ளாகியிருப்பது வேடிக்கை.
ஏனென்றால், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா போரில் முக்கிய பங்காற்றிய ஒரு அதிகாரி என்பதை அவர்கள் அறியாமல் இருக்க முடியாது.
இறுதிக்கட்டப் போரில், முகமாலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி – கரையோரமாக முன்னேறிய 55ஆவது டிவிசனுக்குத் தளபதியாக இருந்தவர் அவர்.
போர் முடிந்த பின்னர், இரண்டு ஆண்டுகள் அவர் லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றியிருந்தார். இப்போது, கொமாண்டோப் படைப்பிரிவுக்குத் தளபதியான அவர், பாதுகாப்பு அமைச்சில் இணைப்பதிகாரியாகப் பணியாற்றுகிறார்.
பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்கவுடன் நேரடியாக இணைந்து பணியாற்றுகிறார் அவர். வெள்ளை வான் மஹிந்த ராஜபக்ஷவையும், கோத்தாபய ராஜபக்ஷவையும் படுகொலை செய்யவே வந்ததாக விமல் வீரவன்ஸ கூறியது, இவரையும் நேரடியாகவே தாக்கியதற்குச் சமம்.
அதனால் தான் முன்னாள் படை அதிகாரிகளான ரியர் அட்மிரல் சமரதுங்க, கேர்ணல் ஜெயவி பெர்னாண்டோ, கேர்ணல் ரணவக்க போன்றவர்கள், விமல் வீரவன்ஸவை கடுமையாக விமர்சித்திருக்கின்றனர்.
என்றாலும், இந்த விவகாரத்தில் பல சந்தேகங்களும், கேள்விகளும் இருப்பது உண்மை.
போலி இலக்கத்தகடு பொருத்திக் கொண்டு, சிவில் உடையில், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் துப்பாக்கியுடன், அவரது மெய்க்காவலர்கள் எதற்காக வெளியில் நடமாடினர் என்ற கேள்விக்கான விடை இன்னும் வெளிவரவில்லை.
இது தொடர்பாக மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவை பொலிஸார் 4 மணிநேரம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அப்போது, நுகேகொடையில் உள்ள தனது வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கொழும்பு வருமாறு தனது பாதுகாவலர்களுக்குத் தானே கூறியதாகவும், அங்கிருந்து அவர்களுடன் கண்டிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
பாதுகாப்பு அமைச்சில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தனது கைத்துப்பாக்கியை பாதுகாப்பு அமைச்சுக்குள் கொண்டு செல்ல முடியாது.
அத்தகைய வேளைகளில் தனது மெய்ப்பாதுகாவலர்களிடம் அதனை ஒப்படைத்து விட்டுச் செல்வது வழக்கம். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தான் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
பொலிஸார் கைது செய்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் மெய்க்காவலர்கள் மூவரையும் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரித்திருக்கலாம். ஆனால், மறுநாளே நீதிமன்றத்தில் நிறுத்தினர். அவர்களைப் பிணையில் விடுவிப்பதற்கும்
 எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
எனினும், ஒருபக்கத்தில் பொலிஸ் தரப்பும், இன்னொரு பக்கத்தில் இராணுவப் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மூன்று படையினரும் இராணுவப் பொலிஸாரின் தடுப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்றும், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா மற்றும் ஏனைய மூன்று படையினர் தவறிழைத்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது இராணுவச் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர கூறியிருக்கிறார்.
இந்த வெள்ளை வான் விவகாரம், கடந்த ஆட்சியில் நடமாடிய வெள்ளை வான்ளைப் போன்ற ஆபத்தான ஒன்றா? அல்லது ஒன்றுமேயில்லாத விடயமா? என்பது விசாரணைகளில் தான் தெரியவரும்.
எவ்வாறாயினும், கடந்த காலங்களில் புலிகளிடம் கைப்பற்றிய பலநூறு வாகனங்கள் இராணுவத்தினரால் பயன்படுத்தப்படுவதும், அவை முற்றிலும் சட்டரீதியான பயன்பாட்டில் இல்லை என்பதும் உறுதியாகியிருக்கிறது.
அண்மையில், முல்லைத்தீவு - பரந்தன் வீதியில் இலக்கத் தகடு இல்லாத வெள்ளை வான் ஒன்று மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகிக் கவிழ்ந்து கிடந்தது.

அதற்கு யாரும் உரிமை கோரியிருக்கவில்லை. அதில் பயணம் செய்தவர்கள் காயமடைந்ததாகவும் ஒருவர் இறந்ததாகவும் கூடத் தகவல்கள் வெளியாகின.

எனினும், அதுபற்றிய விடயங்கள் எதுவும் பின்னர் வெளியிடப்படவில்லை. இதுபோன்ற பல வெள்ளை வானகள் இரகசியப் பயணங்களையோ, திட்டங்களை நிறைவேற்றவோ பயன்படுத்தப்படலாம். அதனையே இந்த வெள்ளை வான் சம்பவமும் உணர்த்தியிருக்கிறது.
எவ்வாறாயினும், தற்போது முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகள், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவைக் காப்பாற்றத் தவறாது. ஏனென்றால், அவர் போரின் இறுதிக்கட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஒரு படை அதிகாரி.
ஏற்கனவே, வெலிவேரியவில் சுத்தமான குடிநீருக்காகப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த உத்தர விட்டமை தொடர்பாக, பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட முக்கிய இராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அந்த விசாரணைகளில் குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்ட போதும் அவர்கள் காப்பாற்றப்பட்டனர். காரணம் போரில் அவர்கள் முக்கிய பங்காற்றியிருந்தனர்.
அதுபோலவே, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவையும், இந்த வெள்ளை வே சர்ச்சை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்க முடியாது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூலை 25, 2015

ஜோதிடரின் பரபரப்பு தகவல்.ராஜபக்ஷ வெல்வார்.! ஆனால் என்ன நடக்கும்?

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெறுவார். எனினும், அவருக்கு பிரதமராக வருவதற்கான திறமை இல்லை என்று பிரபல ஜோதிடர் நாத்தாண்டியே பி.டீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள்
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைவார் என்றும் அத்தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிப்பெறுவார் என்றும் இந்த சோதிடரே கூறியிருந்தார்.
அதேபோல, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது சரத் பொன்சேகா தோல்வியடைவார் என்றும், அவர் சிறைக்கு செல்வதுடன் சிறையில் அடைத்தவர்களே அவரை மீட்பார் என்றும் இந்த சோதிடரே தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமன்றி தான் இழந்த வரப்பிரசாதங்களை சரத் பொன்சேகா 2015ஆம் ஆண்டு பெற்றுக்கொள்வார் என்றும் அவர், தரமுயர்த்தப்படுவதுடன் அவருக்கு இல்லாமல் செய்யப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட வரப்பிரசாதங்களும் வழங்கப்படும் என்றும் இந்த சோதிடரே தெரிவித்திருந்தார்.
இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தோல்வியை தழுவிக்கொள்ளும். ஐக்கிய தேசிய முன்னணியே ஆட்சியமைக்கும். மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமராகுவதற்கு முடியாது.
பொதுத்தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் பிரபல்யமானவர்கள் சிலர் தோல்வியடைவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்து பொதுத்தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி அதிகாரம் கொஞ்சம் அதிகரிக்கும் என்றும் சோதிடர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூலை 24, 2015

விழிதிறவாய் நெடுந்தீவு அரவிந்தின் கவி

 ஒரு வேளை 
காதல் என்ற
பெயரில் காமம் 
தனித்து
நடுத்தெருவில்
விட்டானோ?
குப்பைத்தெட்டியில்
பிறந்தானோ
இவனை பெற்றவள்
மரித்தாளோ?
பெண்னை மட்டும்
எப்படி குறைசொல்வது????

ஆக்கம் நெடுந்தீவு அரவிந்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கறுப்பு ஜூலை கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின்!!!

ஆடை களைந்து
நிர்வாண மாக்கி
ஆண்மை அழித்தும்
அறுத்தும் அக்கிரமம்..!
எந்த நாட்டிலும்
இல்லாத இம்சை
பெண்மையின்
பிறப்புறுப்பில்
கைக் குண்டு..!
பட்டியல் போட்டு
படைகளையும்
காடையர்களயும்
கட்டறுத்து காட்டிய
கொடுமைகள்..
மூட்டிய தீ !
முடியவில்லை
மூர்க்கத் தனம்.
இன அழிப்பின்
ஆரம்பம். வீதி
ஓரங்களில் கொதிக்கும்
தார் பீப்பாக்களுக்குள்
பிஞ்சுக் குழந்தைகள்..!
பொறுமையின்
எல்லைக்கு
அப்பாலும் அராஜகம்
உலகம் கண்மூட
உயிர்ப்புடன்
உன்னதப் போர்…
அகிலம் அதிர
உரிமைத் தாண்டவம்
தமிழன் பெருமை
தரணி கண்டது
ஒற்றைத் துப்பாக்கி
ஓட ஓட விரட்டியது
தமிழர் சேனை
தளைத்தது.
வையம் வாயடைக்க
விடுதலை மையம்
கொண்டது.அச்சம்
மேலிட தந்திரம்
தலை நிமிர
நாம் பயங்கரவாதிகளாம்…!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூலை 21, 2015

உச்ச நீதிமன்றத்தில் ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம் ???

.தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தினால் போதும், அனுமதி பெறத் தேவையில்லை’ என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிக்குமார் ஆகிய ஏழு பேரும் தங்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீது கடந்த 15ம் தேதி நடந்த விசாரணையின் போது ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று தமிழக அரசு ஏற்கெனவே முன்வைத்த வாதத்தை மனுதாரர்கள் தரப்பில் ஆதரித்து மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி வாதிட்டார்.
மத்திய அரசு எதிர்ப்பு: இதற்கு மத்திய அரசு வழக்குரைஞர் ஆட்சேபம் தெரிவித்ததால், இந்த மனுக்கள் மீதான மத்திய, மாநில அரசுகளின் வாதத்தை ஜூலை 21, 22, 23 ஆகிய நாள்களில் முன்வைக்க உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அனுமதி அளித்தது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தனது தரப்பு நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் நேற்று திங்கட்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இரண்டு முக்கிய பிரிவுகளை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். இச்சட்டத்தின் விதி 432(2) பிரிவின்படி குற்றவாளியின் தண்டனை குறைப்பு
 தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்து அறியப்பட வேண்டும். விதி 435(1) பிரிவின்படி மத்திய அரசு தொடர்புடைய வழக்குகளில் அதன் கருத்து அறியப்பட வேண்டும். இதில் “விதி 433′ தண்டனை குறைப்பையும், “விதி 432′ தண்டனைக் குறைப்புடன் சம்பந்தப்பட்ட கைதியை விடுவிக்கவும் வகை செய்கிறது.
சட்டப்பிரிவு கூறுவது என்ன?: “432(2) பிரிவு’ தண்டனைக் குறைப்பு வழக்குகளுக்கு மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட கைதியை விடுவிக்கவும், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யவும் வகை செய்கிறது. தண்டனை அனுபவித்து வரும் கைதி, 432(2) பிரிவின்படி தனக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் குறைக்கக் கோரி மனு தாக்கல் செய்ய உரிமை வழங்குகிறது.
அதே சமயம், 432(1) விதி, அந்த கைதியை விடுதலை செய்ய 
சம்பந்தப்பட்ட அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம் அளித்துள்ளது. மேலும், தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு சிறையில் இருக்கும் கைதியை விடுதலை செய்ய முடிவெடுக்கும் அதிகாரத்தை நிர்வாகத்துக்குத்தான் அரசியலமைப்பு விதி 72/61-இன் கீழ் வழங்கியுள்ளது.
எனவே, இந்த அதிகாரத்தை பயன்படுத்தும் போது நீதிமன்றத்தின் கருத்தை அறிய வேண்டிய அவசியம் சம்பந்தப்பட்ட அரசுக்குக் கிடையாது.
அதிகாரத்தை பறிக்கக் கூடாது: ராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தில் சிபிஐ விசாரித்த வழக்கில் தண்டனை அனுபவித்த கைதிகளை 
விடுதலை செய்யும் நடவடிக்கை பற்றி மத்திய அரசுக்கு தமிழக அரசு முறைப்படி கடிதம் எழுதியது.
கூட்டாட்சி முறையில் இந்த நடவடிக்கை, மத்திய அரசுடன் மாநில அரசு நடத்திய ஆலோசனையே தவிர அது அனுமதி பெறுவதற்கான முயற்சியாகக் கருதக் கூடாது. அரசியலமைப்பு விதி 435(1) இதை மிகவும் தெளிவாகக் கூறியுள்ளது. இந்த அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கும் நோக்கில் பொருள் கொள்வது தவறானது.
மத்திய அரசு தொடர்ந்த இரண்டுக்கும் அதிகமான வழக்குகளில் தண்டனை பெற்ற கைதியை விடுதலை செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்று அரசியலமைப்பு விதி 435(2) மூலம் பொருள் கொள்ளலாம்.
இந்த இரு விதிகளையும் மத்திய அரசு தனக்கு சாதகமாக பொருள் கொள்ளக் கூடாது’ என்று தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு ராஜீவ் கொலையாளிகள் தாக்கல் செய்த மனுக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது. அப்போது மேற்கண்ட தமிழக அரசின் மனுவும் விசாரணையின் போது கவனத்தில் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

இலங்கைத் தமிழர்கள் சயனைட் குப்பிகளுடன் கைதாம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில், இரு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள் (ஜிபிஎஸ்) மற்றும் செய்மதி தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையினர் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை மறித்து சோதனையிட்ட அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்தக் காரில் இருந்து, செய்மதி தொலைபேசி ஒன்று, நான்கு புவிநிலைகாட்டி கருவிகள், 75 சயனைட் குப்பிகள், 300 கிராம் சயனைட் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்தக் காரில் பயணித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் இலங்கைத் தமிழ் அகதிகளாவர். ஏனையோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளாலேயே சயனைட் குப்பிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் பிரிஐ குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, சென்னையில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிதழ் ஒன்றில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிருஸ்ணகுமார் (39), சசிகுமார் (26), ராஜேந்திரன் (44) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூலை 19, 2015

மைத்திரி – ரணில் ரகசிய ஒப்பந்தம் மஹிந்த தரப்பை வெளியேற்ற?

மஹிந்த தரப்பை அரசியலில் இருந்து வெளியேற்றுவதற்காக, மைத்திரி – ரணில் ரகசிய ஒப்பந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக மிகவும் நம்பத்தகுந்த அரசியல் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த இணக்கப்பாடு இந்திய அரசாங்கத்தின் தலையீட்டில் இடம்பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆற்றிய உரையும் இந்த இணக்கப்பாட்டுக்கு அமைய இடம்பெற்ற 
ஒன்றாகும்.
ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய உரை தொடர்பில் ஜனாதிபதிக்கு நெருங்கியவர்களை காட்டிக்கொடுக்கவில்லை. எனினும் பிரதமர் இது தொடர்பில் முழுமையான அவதானத்துடன் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையினுள் உள்நாட்டு போர் நிலைமையை ஏற்படுத்தாமல் சர்வதிகார ஆட்சியை மாற்றுவதற்கு ஆட்சியை கைப்பற்றிக் கொள்வதற்காகவும், அதனை நடத்தி செல்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால்
 மேற்கொள்ளப்பட்ட நடைமுறையிலான ஜனநாயக ஆட்சி முறை தொடர்பில் சர்வதேச பல்கலைக்கழக அளவிலான ஆய்வுகள் மூலம் விருதுகள் கிடைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூலை 17, 2015

ரவிகரனுடன் பிரித்தானிய தூதரக அதிகாரி சந்திப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய தூதரக அரசியல் செயலாளர் டோம் சோபருக்கும் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் 10 மணியளவில் முல்லைத்தீவில் ரவிகரனது இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது ,கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான
அரசியல் சூழல், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பற்றியும், தமிழர் தாயகத்தில் இனப்பரம்பல் கோலத்தை மாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது
அத்துடன் தமிழ் இளைஞகள் மீது திணிக்கப்படும் புலம்பெயரும் நிர்ப்பந்தம் ,சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் மத அடையாளங்கள் திணிப்புக்கள், தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் உள்ளடங்கலாக பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் ரவிகரன் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூலை 16, 2015

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் நிகழ்வில் முதலமைச்சரின் சிறப்புரை!

சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் லண்டனில் ஆண்டுதோறும் நடத்தும் “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்ச்சியில் வடமாகாண சபை முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தாயகத்தின் இன்றைய நிலவரம் தொடர்பில் 
உரையாற்றவிருக்கிறார். இந்நிகழ்ச்சி இம்மாதம் (ஜுலை) 17ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குலண்டன் ஹரோவில் உள்ள கட்வா படிடார் நிலையத்தில் ( Kadwa Patidar Centre,Kenmore Avenue,Harrow, HA3 5BD)நடைபெறவுள்ளது.
வரையறுக்கப்பட்ட ஆசனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளதால் அனுமதிச்சீட்டுக்களை ( தனி நபர் : 10 பவுண்டுகள், சிறுவர்களுக்கு இலவசம்) முன்கூட்டியே பெற்றுக்கொண்டு ஆசனங்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புபவர்களுக்குஅறிவுறுத்தப்படுகிறது. இந்த நிகழ்வு தொடர்பில் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
ஆனந்தி சூரியப்பிரகாசம் (+44 208 543 7226),
கோபி றட்ணம் ( +44 758 597 8377),
பெய்லோன் யோகரட்ணம் (+44 795 693 9874),
விஜய் செந்தில் (+44 772 333 3205)
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூலை 12, 2015

அமைச்சருக்கும் பாதுகாப்புச் சோதனை!

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவுக்கும் உடற்பரிசோதனையை பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டனர். நேற்று கொழும்பில் நடந்த ஐதேக கூட்டத்துக்கு வந்த போதே பாதுகாப்பு இராஜாங்க 
அமைச்சரும் உடற்பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு மட்டக்களப்பில்!

காணாமல்போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட அமர்வு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. நாளை நடைபெறும் விசேட கூட்டத்திலேயே திகதி விவரம் பற்றி இறுதி 
முடிவெடுக்கப்படும் என்று ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்தார். காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது கடந்த அமர்வை திருகோணமலையில் நடத்தியது.
மட்டக்களப்பில் இதற்கு முன்னரும் பொது அமர்வு நடத்தப்பட்டிருந்தது. அதன்போது கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் புதிய முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்காகவுமே அங்கு மீளவும் அமர்வு நடைபெறுகின்றது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அமெரிக்கா அழுத்தம்!

இனப்படுகொலை விடயத்தில் மென்மைப்போக்கை கடைப்பிடித்து வடக்கு மாகாண மக்களின் நல்லிணக்கம் தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லுமாறு, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
வட மாகாண முதலமைச்சர், அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்குமான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவர் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதிசெயலாளர் நிசா பிஸ்வாலை சந்தித்துள்ளார்.இதன்போது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களுக்கு அப்பால் வடக்கின் நல்லிணக்கம், புனரமைப்பு மற்றும்
 புனர்வாழ்வு விடயத்தில் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிஸ்வால், விக்னேஸ்வரனிடம் கேட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதை வாய்ப்பாக கொள்ளுமாறு விக்னேஸ்வரன் கோரப்பட்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது முதலமைச்சர் உலக வங்கி பிரதிநிதிகளையும் சந்தித்தார். எனினும் பேசப்பட்ட விடயங்கள் வெளியாகவில்லை. அத்துடன் காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்ஸனுடன் அவர் மூடிய அறை பேச்சுவார்த்தையையும் நடத்தியுள்ளார். இதேவேளை தமது பயணம் 
தனிப்பட்டது என்ற அடிப்படையில் அவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரனை சந்திக்கவில்லை என்று ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூலை 09, 2015

கைதானவர் முன்னாள் போராளி அல்ல! - மனைவியே காட்டிக்கொடுத்தார்

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் விடுதலைப்புலி உறுப்பினர் அல்ல என தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல்.எப்.கஸ்தூரியாராச்சி தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில், தெல்லிப்பளை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டார்
கைது செய்யப்பட்டவர் யாழ்.தெல்லிப்பளையைச் சேர்ந்த, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் என தெரிவிக்கப்பட்டது. 119 எனும் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர் கடந்த திங்கட்கிழமை கைது
 செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு இடம்பெற்று வந்துள்ளது. இதனால் மனைவியே 119 எனும் அவசர பொலிஸ் பிரிவிற்கு அழைத்து இத்தவறான தகவலை வழங்கியுள்ளார். குறித்தநபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அது தொடர்பான அறிக்கை எமக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை. ஆனால், குறித்த நபர் விடுதலைப்புலி உறுப்பினர் இல்லை என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவர் யுத்த காலத்தில் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒருவார யுத்தப்பயிற்சியை நிறைவு செய்தபோதிலும், இயக்கத்தில் செயற்படவில்லை. இவரது சகோதரனும், சகோதரியுமே இயக்கத்தில் செயற்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்தநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து அவர் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>