18

siruppiddy

பிப்ரவரி 27, 2014

அரசாங்கத்திற்கு 2000 ரூபாய் வரி: அனுரகுமார.,

இறந்தாலும் அரசாங்கத்திற்கு 2 ஆயிரம் ரூபாவை வரியாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குழந்தை ஒன்று பிறக்கும் போதும் அரசாங்கத்திற்கு வரியை செலுத்த வேண்டியுள்ளது. குழந்தை பிறந்ததும் அரசாங்கத்திற்கு 300 ரூபாவை செலுத்த வேண்டும். இதனால் பிள்ளைகள் பிறக்கும் வரை அரசாங்கம் காத்திருக்கின்றது.

திருமணம் செய்யும் போதும் அரசாங்கத்திற்கு 5 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும். எதற்கான நாங்கள் திருமணம் செய்யும் போது அரசாங்கத்திற்கு பணத்தை செலுத்த வேண்டும்?.
இறந்தாலும் விடுவதாக இல்லை. இறந்த பின்னர் வரியாக 2 ஆயிரம் ரூபாவை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்றார்.

பிப்ரவரி 25, 2014

மனித உரிமை அமைப்புக்களின் நடவடிக்கைக்கு திசர சமரசிங்க

அவுஸ்திரேலிய மனித உரிமை மற்றும் அகதிக் கோரிக்கையாளர் ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளுக்கு அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

மனுஸ் தீவுகளில் கடமையாற்றி வரும் இலங்கை படையதிகாரி ஒருவருக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் கருத்து வெளியிட்டிருந்தன.
எனினும், இவ்வாறு முன்னாள் இராணுவ அதிகாரிக்கு எதிராக கருத்து வெளியிடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தில் கடமையாற்றியிருந்தார் என்பதற்காக ஒருவரை பணியில் அமர்த்துவதற்கு எதிர்ப்பு வெளியிட முடியாது.
தினேஷ் பெரேரா என்பவர் இலங்கைப் பிரஜையா அல்லது அவுஸ்திரேலிய பிரஜையா என்பதே இன்னமும் தெரியவில்லை.

இலங்கை இராணுவத்தினர் சிறந்த தகுதிகளையும் ஒழுக்கத்தையும் கொண்டவர்கள். மனுஸ் தீவு அகதிக் கோரிக்கையாளர் முகாமில் இலங்கையர் படையதிகாரி கடயைமாற்றுவதில் எவ்வித தவறும் இல்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியிருந்த 300,000 அப்பாவி பொதுமக்களை இலங்கைப் படையினரே மீட்டனர்.
தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது பிரிவினைவாதத்தை தூண்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 23, 2014

உக்ரைன் ஜனாதிபதி தலைநகரை விட்டு தப்பி ஓட்டம்

உக்ரைனில் போராட்டக்காரர்களின் ஆதிக்கம் அதிகமாகி வருவதால், ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் தலைநகரை விட்டு தப்பிஓடி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனில் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச்சுக்கு எதிரான மக்களின் போராட்டம் வன்முறை சம்பவங்களாக மாறி வருகிறது.

சிலநாட்களுக்கு முன் தலைநகர் கீவில் உள்ள சதுக்கத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
அப்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதில் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 75 பேர் பலியாகியுள்ளனர், நகரின் பல கட்டிடங்கள் தீக்கரையாக்கப்பட்டன.

போராட்டக்காரர்களை ஒடுக்க உக்ரைன் அரசு கையாளும் முறை குறித்து உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்தன.
பொருளாதார தடைகள் விதிக்க போவதாக ஐரோப்பிய யூனியனும், உக்ரைனுடனான நல்லுறவை துண்டித்துக் கொள்ள போவதாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து போராட்டக்காரர்களுடன் சமாதானமாக போக விரும்புவதாக கூறிய ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைத்தார்.
அந்த குழுவின் ஆலோசனையின்படி, நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த விக்டர், ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதாக நாடாளுமன்றம் அறிவித்தது.
வரும் மே மாதம் 25ம் திகதி புதிய ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி வசிக்கும் மாளிகை உட்பட தலைநகர் கீவ் தங்களின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாகவும், ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் கீவ் நகரை விட்டு வெளியேறிவிட்டதாகவும் போராட்டக்காரர்கள் நேற்று அறிவித்துள்ளனர்.
மேலும் சிறை வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான யூலியா டைமோஷென்கோ நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
 

பிப்ரவரி 21, 2014

மீண்டும் படைகளுக்கு காணி பறிப்பு; நுணாவிலில் சுவீகரிப்பு

 யாழ்.மாவட்டத்தில் மீண்டும் இராணுவமுகாம்களுக்கான காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. நுணாவிலில் இவ்வாறு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் 7 பேரும் அவற்றை இராணுவத்தினருக்கு வழங்குவதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது. யாழ்.மாவட்டத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் அலுவலகம் திறக்கப்பட்டு இரண்டு மாத காலத்தினுள், இராணுவம் மற்றும் கடற்படைக்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மும்முரப்படுத்தப்பட்டிருந்தன. தாமதமடைந்த திட்டம் இதன் பின்னர் குறித்த காணி சுவீகரிப்பு அலுவலர்கள் தமது பதவியில் இருந்து விலகி வெளியேறியிருந்தனர். இதனால் குறித்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் தாமதமடைந்திருந்தன. இதன் பின்னர் குறித்த நடவடிக்கைகளை அந்தந்தப் பிரதேச செயலாளர்களே முன்னெடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.   இவ்வாறானதொரு நிலையில் கடந்த 9 ஆம் திகதி யாழ்ப் பாணத்துக்கு வருகை தந்திருந்த காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனாக பண்டார தென்னக்கோன், பாதுகாப்புத் தேவைக்காக இனிமேல் தனியார் காணிகள் சுவீகரிக்கப்படமாட்டாது என்று கூறியிருந்தார். அரச அதிபர்,பிரதேச செயலர்கள், படை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். ஏற்கனவே சுவீகரிப்பு நடவடிக்கைகள் தொடங்கிய காணிகள் தொடர்பில் அமைச்சர் எதுவும் தெரிவித்திருக்கவில்லை. குறித்த கூட்டத்தில் வைத்து, பிரதேச செயலாளர்கள் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கின்றார்கள் இல்லை என்று இராணுவ அதிகாரிகள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தனர்.அத்துடன் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் சுவீகரிக்கவேண்டிய தனியார் காணிகளின் பட்டியலும் பிரதேச செயலாளர்களுக்கு இந்தக் கூட்டத்தில் வைத்து வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய பிரதேச செயலாளர்கள், காணி சுவீகரிப்பு அலுவலர்களுக்கான ஒப்பத்தையிட்டுச் சுவீகரிப்பு அறிவித்தல்களை ஒட்டத் தொடங்கியுள்ளனர். இதற்கு உதவியாக ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் பட்டதாரிப் பயிலுநர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.   நுணாவில் சந்தியில் 5 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட தனியார் காணிகளைச் சுவீகரிப்பதற்காக அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த காணிகளுக்குரிய உரிமையாளர்கள் 7 பேர் தமது காணி ஆவணங்களுடன் வடக்கு முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.   இது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நம்பகரமாக அறியமுடிகின்றது.

பிப்ரவரி 10, 2014

மனிதப் புதைகுழி தோண்டும் பணிகள் மீண்டும் ஆரம்பம்

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ம் திகதி மன்னார் பகுதியில் நீர்க்குழாய் பொருத்துவதற்காக நிலம் தோண்டப்பட்டபோது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதனையடுத்து தொடர்ச்சியாக அப்பகுதி தோண்டப்பட்டு மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

இதனைத்தொடுந்து கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டன.

இதுவரையில் 19 தடவைகள் குறித்த திருக்கேதிஸ்வரம் மனித புதை குழி தோண்டப்பட்டு, 55 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் எச்சங்களாகவும் மீட்கப்பட்டுள்ளன.

அவற்றில் 28 மனித எலும்புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி 09, 2014

விசாரணை நடத்தும் அக்கறை மகிந்தவுக்கு இல்லை:

இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற வெளியாகியுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தும் அக்கறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கிடையாது என இண்டர்நேஷனல் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அண்மையில் தீ்ட்டிய ஆசிரியர் தலையங்கத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அவரது அரசாங்கம் மேற்கொண்டு வரும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் என்பன அவர் விமர்சனங்களை பொறுத்து கொள்ள தயாராக இல்லை என்பதை வெளிகாட்டுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் சிரேஷ்ட அதிகாரி நிஷா தேசாய் பிஸ்வாலின் இலங்கை விஜயம் மற்றும் எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட உள்ள இலங்கை சம்பந்தமான மூன்றாவது யோசனை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆசிரியர் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இலங்கையில் இரத்தம் சிந்திய சிவில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து கண்டறிய நம்பிக்கையானதும் சுயாதீனமானதுமான விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வொஷிங்டன் மீண்டும் முயற்சித்து வருகிறது.

இது குறித்து அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் கலந்துரையாடல்களை நடத்த அமெரிக்க அரசின் சிரேஷ்ட பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்பி வைத்தமை காலத்திற்கு ஏற்ற செயற்பாடகும்.

போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அது தொடர்பில் கண்டறிய நியமிக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

கொல்லப்பட்டவர்களின் அதிகளவானவர்கள் அரசாங்கத்தின் ஷெல் வீச்சு தாக்குதலிலேயே கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது. மாத்திரமின்றி அந்த விடயம் தொடர்பில் சர்வதேச சமூகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கு தடையேற்படுத்தியது.

அரச படையினரும், தமிழ்ப் பிரிவினைவாத விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட போர் குற்றங்களை கண்டறியும் விசாரணைகளை நடத்துமாறு ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் இதுவரை இரண்டு யோசனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆனால் இந்த இரண்டு யோசனைகளையும் இலங்கை அரசாங்கம் புறந்தள்ளியுள்ளது. இவ்வாறான மூன்றாவது யோசனை ஒன்றை கொண்டு வரும் அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையிலேயே தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்தது.

போர் முடிந்து 5 வருடங்கள் கழிந்துள்ளதால், பொறுப்புக் கூறும் விடயம் தொடர்பில் விடுக்கப்படும் இந்த கோரிக்கையை மறந்து விட உலகத்திற்கும் அமெரிக்காவுக்கும் சிரமமான காரியமல்ல.

ஆனால் அப்படி மறந்து விடுவது அனர்த்தமான நிலைமையை ஏற்படுத்தும். காரணம் பொறுப்புக் கூறல் இன்றி மாபெரும் மனித படுகொலைகளை நிகழ்த்த தமக்கு அனுமதி கிடைத்திருப்பதாக அவர்கள் நினைக் கூடும்.

ராஜபக்ஷவின் எண்ணத்தையும், நோக்கத்தை உணர்ந்து கொள்ள முடியாதளவில் எவரும் வலு குறைந்தவர்கள் அல்ல. முறையான விசாரணைகளை நடத்துவதில் அவர்களுக்கு அக்கறையில்லை.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அவர்கள் விமர்சனங்களை பொறுத்து கொள்ள தயாரில்லை என்பதை காட்டுகிறது.

இந்த நிலையில், சர்வதேச அழுத்தங்கள் காரணமாக விருப்பமின்றியேனும் இலங்கை அரசாங்கம் சில தீர்மானங்களை எடுத்துள்ளது என்பது உண்மையே.

பல வருடங்களாக அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டு வந்த, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாண சபைக்கு கடந்த செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டமை இதற்கான உதாரணமாகும்.

தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபை போர் குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற பிரேரணையை நிறைவேற்றியது.

போரில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து முழுமையான பொறுப்புக் கூறலை கோரி நிற்கும் இலங்கையர்களுடன் சர்வதேசமும் அணித்திரள்வது முக்கியமானது என அந்த ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி 06, 2014

சிறிலங்கா துணை துதுவராலயம் முன்பாக நடைபெற்ற போராட்டம்


கனடிய தமிழர் தேசிய அவை தொடர்ச்சியாக நடத்தி வரும் தொடர் கவன ஈர்ப்பு போராட்ட வரிசையில், மூன்றாம் நாள் கவனஈர்ப்புப் போராட்டம் பெப்ரவரி 4ம் திகதி கடும் குளிரான கால நிலையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான தமிழர்களால் மிகுந்த எழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரதான சந்திகளில் ஒன்றான யங் மற்றும் எக்ளிங்டன் சந்திப்பிற்கருகில் 36 எக்ளிங்டன் வீதி மேற்கில் அமைந்துள்ள சிறிலங்கா துணைத் தூதராலயத்திற்கு

 முன்பாக பி. ப. 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை எழுச்சி முழக்கங்களுடன் இந்த போராட்டத்தை நடத்தினார்கள். இந்த போராட்ட நிகழ்வில் தமிழினப் படுகொலை குறித்த ஓவியங்களும் பாதையோரத்தில் காட்சிப் படுத்தப்பட்டன. வருகை தந்த மக்கள் கடும் குளிரை பொருட்படுத்தாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை நின்று போராடி தமது காலக் கடமையை நிறைவேற்றினார்கள். கனடிய தமிழர் தேசிய அவையால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் உணர்வு மிக்க தமிழ் மக்கள் அமைப்பு பேதங்கள் கடந்து கலந்து தமது வரலாற்று கடமையை

ஆற்றினார்கள். அமைதி வழி போராட்டம் நடத்திய மக்கள் பாதையோர வழியாக நேர்த்தியாக முழக்கங்களை எழுப்பியவாறு அந்த பகுதியை நடை பவனியாகவும் நீண்ட வரிசையில் நடந்து வந்தார்கள். பல்லின சமூகம் பல்லாயிரமாக பயணிக்கும் இந்த பகுதியில் இந்த போராட்டமானது, பல்லின மக்களின் கவனத்தையும் ஆதரவையும் பெருமளவில் பெற்றது. கனடியத் தமிழர் தேசிய அவை தொடர்ச்சியாக நடத்தி வரும் இது போன்ற போராட்டங்களை இனி வரும் காலங்களிலும் நீதி கிடைக்கும் வரை நீதி வேண்டி தொடர்வோம் என்ற உறுதி மொழி எடுக்கப்பட்டு போராட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.






பிப்ரவரி 02, 2014

சிறுபான்மையினர் உரிமைகளை பெற சிங்களவர்கள் தலையிட?!

இலங்கையின் சிறுபான்மையினர் சுயநிர்ணய உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடி வந்தனர் எனவும் அதனை பெற்றுக் கொடுக்கவும் முன்னோக்கி கொண்டு செல்லும் சிங்கள சமூகம் தலையிட வேண்டும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறுபான்மை மக்களின் சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொடுக்க சிங்கள சமூகம் தலையிடுவதன் ஊடாக உண்மையான சமாதானத்தை உலகத்திற்கு காட்ட முடியும்.
நாங்கள் பாரிய அர்ப்பணிப்புகளை செய்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களின் ஐக்கிய கூட்டணியை கட்டியெழுப்பி உள்ளோம். இதன் மூலம் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும்.
1920 ஆம் ஆண்டுகளில் சிலோன் காங்கிரஸ் என்ற ஐக்கிய கூட்டணி கட்டியெழுப்பட்டது. எனினும் அதில் இருந்த சில தமிழ் தலைவர்கள் விலகி சென்றனர்.
சிங்களவர்கள் சிங்கள இனம் பற்றி மட்டுமே பேசிதால் அன்று அருணாச்சலம் அந்த கூட்டணியை விட்டு வெளியேறினார்.
வரலாறு முழுவதும் சிங்களவர்கள் சிங்களவர்களை பற்றி மட்டுமே பேசி வந்ததால், இனப்பிரச்சினை ஏற்பட்டது. இந்த தவறை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.