18

siruppiddy

மே 25, 2021

சர்வதேச அரங்கில் தமிழர்களின் உரிமை தொடர்பாக குரல் கொடுத்தால் அது பயங்கரவாதமாம்

 தமிழ் மக்களின் நீதி மறுப்பு, தமிழர்களின் உரிமை தொடர்பாக சர்வதேச அரங்கில் குரல் கொடுத்தால் அது பயங்கரவாதம், ஆனால் முதலீடு என்ற பெயரில் சர்வதேச நாடுகள் இலங்கையை 
துண்டாடுவது தேசியவாதம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் 
தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய துறைமுகங்கள் சட்டமூலம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் தற்போது சீனாவின் ஆதிக்கத்தில் கொடுக்கப்படவுள்ள துறைமுக அபிவிருத்தி என்பது இலங்கையின் ஆட்சியாளர்களுடைய விருப்பம் அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் அப்படி சீனாவுக்கு வழங்குவது முறையான செயல் இல்லை என்பதால் அந்த சட்டமூலத்தை பகிரங்கமாக எதிர்த்தோம்.
இன்னொரு நாட்டினால் இலங்கைக்கு பாதிப்புகள் ஏற்படலாம் அது இப்போது புரியாது காலம் கடந்தபின் இலங்கை மக்கள் ஒட்டுமொத்தமாக இதனை எதிர்க்கும் காலம் உருவாகும்.
பொல்லை கொடுத்து அடி வாங்கும் நிலைக்கு இந்த செயல் மாறலாம். அப்போது இதனை ஆதரித்து வாக்களித்தவர்களும் இரட்டை வேடம் போட்ட கட்சி உறுப்பினர்களும் புரிந்து கொள்வார்கள்.
வடக்கு, கிழக்கு தமிழ் தேசிய அரசியல் பிரச்சினை இன்று சர்வதேச அரசியலுடன் கலந்துள்ளது. எமது ஒருமித்த நாட்டுக்குள் 
சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்ற 
கோட்பாட்டு தத்துவத்துடன்
 இலங்கையை ஆட்சி செய்த சிங்கள தலைவர்களுடன் நடந்த பேச்சுக்கள் ஒப்பந்தங்கள் போராட்டங்கள் எல்லாம் மௌனிக்கபலபட்ட நிலையில் தேசிய ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை இன்று சர்வதேச அரங்கிற்கு சென்றுள்ளது.
சர்வதேசம் தலையிட வேண்டும் என தமிழ் தலைமைகள் சர்வதேசத்தை நோக்கி கேட்பது தவறு என கூறும் ஆட்சியாளர்கள் சர்வதேசத்திற்கு நாட்டில் ஒரு பகுதியை கையளிப்பது சரி என எந்த வகையில் நியாயம் 
கற்பிக்க முடியும்.
உங்களுக்கு அது பொருளாதார பிரச்சினை என்றால் எங்களுக்கு அது உரிமை பிரச்சனை என்பதை அனைவரும் புரிந்து
 கொள்ள வேண்டும்.
சிலர் கேட்கலாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்தை நோக்கி தமது அரசியல் செயல்பாடுகளை முன் எடுக்கும் போது ஒரு சர்வதேச நாடான சீனாவுக்கு இலங்கை அரசு தமது ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியை கையளிப்பதை ஏன் எதிர்க்க வேண்டும்.
எமது உரிமை பிரச்சினை என்பது சீனாவுடன் சம்பந்தப்பட்ட விடயமில்லை.
இன்னும் சொல்வதானால் ஈழவிடுதலை ஆயுதப் போரை இலங்கையில் ஆரம்பித்து அதேபோரை முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற வைத்த நாடுகளில் இந்தியாவின் பெரும் பங்கு உண்டு.
ஆனால் வடக்கு, கிழக்கில் சர்வதேச அழுத்தங்கள் மூலம் ஒரு நிரந்தர தீர்வு வருமானால் அதில் இந்தியாவை வெறுத்தோ ஒதுக்கியோ இந்தியாவுக்கு தெரியாமலோ நிச்சயம் வராது வருவதற்கு இந்தியா 
விடவும் மாட்டாது.
எனவே இந்தியாவின் ஆதரவு தமிழ் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்று இந்தியாவிற்கு பகைமை நாடாக உள்ள சீனாவுக்கு இலங்கையில் முதலீட்டு வாய்ப்பளிப்பது தமிழ்தேசிய அரசியல் தலைமை எதிர்ப்பதே சரியான அரசியல் ராஜதந்திரம் அதனால்தான் எதிர்த்து வாக்களிக்க வேண்டிய முடிவு எடுக்கப்பட்டது.
சிலவேளை துறைமுகங்கள் அபிவிருத்தி இந்தியாவிற்கு கையளிப்பது தொடர்பாக இலங்கை முடிவுகளை எடுத்திருப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவுகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக