18

siruppiddy

ஜனவரி 29, 2015

பதவியிழந்த ஷிரானி மீண்டும் தலைமை நீதிபதியானார்..

 ராஜபக்சவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட, இலங்கையின் முதல் பெண் தலைமை நீதிபதியான, ஷிரானி பண்டாரநாயகேவை, மீண்டும் அதே பதவியில் அமர்த்தியுள்ளார், இலங்கையின் புதிய அதிபர், மைத்திரிபால சிறிசேன.
கடந்த 2013ம் ஆண்டில், ஷிரானி பண்டாரநாயகே மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில், பார்லிமென்டில் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஷிரானியை, ராஜபக் ஷே பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில், ராஜபக் ஷே தோல்வியுற்று, புதிய அதிபராக, மைத்திரிபால சிறிசேன 
தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, ராஜபக்சவின் பழிவாங்கும் படலத்தில் பாதிக்கப்பட்ட பலருக்கு, நிவாரணம் அளிக்கும் நடவடிக்கைகளை புதிய அதிபர் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக, அண்மையில், முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த 
சரத் பென்சேகாவுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது. இதே போன்று, தற்போது, ஷிரானி பண்டாரநாயகேவுக்கும், தலைமை நீதிபதி பதவி வழங்கப்பட்டுள்ளது. நேற்று, 43வது தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்ட ஷிரானிக்கு, நீதிமன்ற வளாகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜனவரி 27, 2015

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை! ஜனாதிபதி உறுதிமொழி !!

இந்த வருட முடிவுக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உரிய தீர்வு காணப்படும் என்று மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போதே ஜனாதிபதி
 மேற்படி உறுதிமொழியை மன்னார் ஆயரிடம் வழங்கினார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் மகஸின் சிறைச்சாலைக்குச் சென்ற மன்னார் ஆயர் அங்கு 120 தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து உரையாடினார். பின்னர் வெலிக்கடைச் சிறைக்குச் சென்று அங்குள்ள 5 பெண் அரசியல் கைதிகளையும் சந்தித்து உரையாடினார். அரசின் 100 நாள் வேலைத் திட்டத்துக்குள் கைதிகள் விடுதலை செய்யப்படுவது 
சாத்தியமாகாது. எனினும் இந்த வருட முடிவுக்குள் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால மேற்கொள்வார் என்று மன்னார் ஆயரிடம் தெரிவித்தார் என மேலும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜனவரி 26, 2015

எச்சரிக்கை!! பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கலாம்;??

விடுதலைப் புலிகள் விவகாரத்தை சரியான வகையில் கையாளாவிடின் நாட்டின் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.   வடக்கில் யுத்தம் 
உச்ச கட்டத்திலிருந்ததை விட இப்போது மிக குறைவாகவே அங்கு இராணுவம் உள்ளது. தேவையேற்படின் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வைத்துக்கொண்டு இராணுவ குறைப்பை மேற்கொள்ள வேண்டும்.     மேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும்
 தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது.    நிலைமையை அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப்படாவிடின் பயங்கரவாதம் அதன் கொடூரத்தை மீண்டும் தொடங்க முடியும்.
   வடக்கு, கிழக்கில் வாக்களிக்க செல்பவர்களை தடுக்கவென தேர்தலின்போது, மேலதிக படையினர் நகர்த்தப்படவில்லை. ஆனால், வாக்களிப்பை தடுப்பதற்காக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.      தேர்தலுக்கு முன்னர், வடக்கு பாதுகாப்பு படைகளின் தளபதியை இடமாற்றம் செய்தனர். சில புலனாய்வு அதிகாரிகளுடன் சேர்ந்து திட்டங்களை வகுத்தனர். எம்மிடம் இது தொடர்பான விவரங்கள் உள்ளன. 
விரைவில் இவற்றை விசாரணைகளின் மூலம் அம்பலப்படுத்துவேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.     சில மாதங்களுக்கு முன்னர் சில தமிழீழ விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர்.
 முன்னிருந்த அரசின் அக்கறையின்மையே இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் காரணம். நான் இராணுவத்தை விட்டு இளைப்பாறியதும் அவர்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.   இதன்மூலம் தப்பியிருந்த புலி உறுப்பினர்களை பிடித்திருக்கலாம். ஆனால், முன்னைய அரசு இதை செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜனவரி 22, 2015

மனு தாக்கல் !பயங்கரவாத அமைப்பு என அறிவிக்க வேண்டும்:!!

அமெரிக்க நீதிமன்றத்தில் !!ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என கோரி நியூயார்க் நீதிமன்றத்தில் சீக்கியர்களுக்கான உரிமைகள் குழு என்ற அமைப்பு உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
சீக்கியர்களுக்கான உரிமைகள் குழு(sfj) என்ற அமைப்பு நியூயார்க்கின் தென் மாவட்டத்தில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது. விரிவாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், 
ஆர்.எஸ்.எஸ்  அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்க வேண்டும். அந்த அமைப்பு பாஷிச கொள்கைகளையும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய கொள்கைகள், தீய மற்றும் வன்முறை பிரச்சாரத்தில்  நம்பிக்கை கொண்டு  இந்தியாவை இந்து நாடாக்க  முயற்சிக்கிறது,வீடு திரும்புதல் என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களை கட்டாயமாக மதமாற்று பிரச்சாரத்தை செய்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பாபர் மசூதி இடிப்பு மற்றும் பொற்கோவிலில் ராணுவ நடவடிக்கையை ஏற்படுத்த தூண்டியதாகவும் 2008 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது கிறிஸ்தவ ஆலயங்களை எரித்ததாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு  தொடர்பாக வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரிக்கு சம்மன் அனுப்பியுள்ள நீதிமன்றம் இன்னும் 60 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்  என உத்தரவிட்டுள்ளது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜனவரி 21, 2015

தமிழர் பகுதிக்கு அதிகார பகிர்வு; இலங்கை புதிய பிரதமர் ரணில்உறுதி!!!!

தமிழர் பகுதிக்கு அதிகார பகிர்வு அளிக்க 13-வது அரசியல் சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதி அளித்துள்ளார்.
கொழும்பு,
கடந்த 1987-ம் ஆண்டு ஜூலை மாதம், இந்தியா- இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதில், அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் கையெழுத்திட்டனர்.
13-வது திருத்தம்
அதைத் தொடர்ந்து, இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்பட அனைத்து மாகாணங்களுக்கும் அதிகார பகிர்வு அளிக்க இந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது.
ஆனால், அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள், இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்தவில்லை. மேலும், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த இலங்கை சுப்ரீம் கோர்ட்டு, 13-வது சட்ட திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், மாகாணங்களுக்கு இதுவரை அதிகார பகிர்வு கிடைக்கவில்லை.
ஆனால், 13-வது சட்ட திருத்தத்தை எழுத்திலும், செயலிலும் அமல்படுத்துமாறு இலங்கையை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
புதிய பிரதமர்
இந்நிலையில், கடந்த 8-ந் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜபக்சே தோல்வி அடைந்தார். புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா பதவி ஏற்றார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே, புதிய பிரதமராக பதவி ஏற்றார். 27 பேர் கொண்ட இடைக்கால மந்திரிசபையும் பொறுப்பு ஏற்றுக்கொண்டது.
பாராளுமன்றம் கூடியது
புதிய அரசு பதவி ஏற்ற பிறகு, நேற்று முதல் முறையாக பாராளுமன்றம் கூடியது. பாராளுமன்றத்தில் பேசிய புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தனது அரசின் 100 நாள் திட்டம் பற்றி விளக்கி கூறினார்.
அப்போது அவர், 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்தப்போவதாக அறிவித்தார். அவர் பேசியதாவது:-
வெவ்வேறு கொள்கைகளும், நோக்கங்களும் கொண்ட அரசியல் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளோம். சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட நாங்கள் ஒன்று சேர்ந்தோம்.
எல்லா அரசியல் கட்சிகளிடம் இருந்தும் நாங்கள் யோசனைகளையும், திட்டங்களையும், விமர்சனங்களையும் வரவேற்கிறோம். தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நாங்கள் ஒன்று சேர்வது சவாலான விஷயம்தான். இருப்பினும், இந்த பிரச்சினைகளை இந்த பாராளுமன்ற பதவிக்காலத்துக்கு அப்பாலும் நீடிக்க விட்டுவிடக்கூடாது.
அதிகார பகிர்வு
மாகாணங்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க வகை செய்யும் 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்துவோம். ஒன்றுபட்ட இலங்கை என்ற அடிப்படையிலும், சிறுபான்மை தமிழர்களுடன் நல்லிணக்கத்தை எட்டுவதற்காகவும் இந்த சட்ட 6திருத்தத்தை அமல்படுத்தப்போகிறோம்.

அதிபர் அதிகாரம் ரத்து

ஜனநாயக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதுதான், எங்களது 100 நாள் திட்டத்தின் பெரும்பகுதியாக இருக்கும். ராஜபக்சே, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை குழிதோண்டி புதைத்து விட்டு, அதிபர் பதவிக்கு அதிகாரங்களை குவித்துக்கொண்டார்.

இதற்காக அவர் செய்த 18-வது அரசியல் சட்ட திருத்தத்தை ரத்து செய்வோம். இதன்மூலம், அதிபர் பதவிக் கான அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படும். பாராளுமன்றத்துக்கும், மந்திரிசபைக்கும் அதிகாரங்கள் அளிக்கப்படும். பாராளுமன்றத்துடன் இணைக்கப்பட்ட மந்திரிசபையை கொண்ட புதிய அரசு முறையை கொண்டுவர பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்.
இந்திய ஆதரவை இழந்தது
தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை மீண்டும் உருவாக்க, 19-வது அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும். நீதித்துறை உள்ளிட்ட பொது அமைப்புகளை கண்காணிக்கும் அமைப்பாக இந்த தன்னாட்சி அமைப்புகள் செயல்படும். இதுவும், அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் நடவடிக்கைதான்.
ஒளிவுமறைவற்ற நிர்வாகத்தை அளிப்பதற்காக, தகவல் பெறும் உரிமை சட்டம் கொண்டுவரப்படும்.
ராஜபக்சே ஆட்சியால், மேலை நாடுகள் மற்றும் இந்தியாவின் ஆதரவை இலங்கை இழந்து விட்டது. சீனாவையே சார்ந்து இருந்தது. ஆனால், சீனா, ராஜபக்சேவின் நடவடிக்கைகளை கண்டு கொள்ளவில்லை.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே பேசினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜனவரி 19, 2015

மீண்டும்விஜலட்சுமி! வருகின்றார் இளங்கோவன்!!

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் தூக்கி அடிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பதவிக்கு தற்போதைய ஆளுநர் சந்திரசிறியுடன் பணியாற்றிய ஆளுநர் செயலாளர் இளங்கோவன் அப்பதவிக்கு நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
தூக்கியடிக்கப்பட்ட விஜயலட்சுமி ரமேஸ் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளரான விஜயலட்சுமியை மாற்றம் செய்யும்படி முன்னைய அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலதடவை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது இவர் வடமாகாண பிரதம செயலாளர் பதவியில் இருந்து தூக்கப்பட்டு பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது மூப்பின் அடிப்படையில் முன்னிற்கு நிற்கும் ஆளுநர் செயலாளர் இளங்கோவன் அப்பதவிக்கு நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜனவரி 16, 2015

ராஜபக்சே கட்சி தலைவர் பதவியையும் மைத்ரிபாலா சிறிசேனாவிடம் பறிகொடுத்தார்

 இலங்கை அதிபர் தேர்தலில் மண்ணைக் கவ்விய மகிந்த ராஜபக்சே, இதுநாள் வரை பொறுப்பேற்றிருந்த இலங்கை சுதந்திரக் கட்சி தலைவர் பதவியை இன்று மைத்ரிபாலா சிறிசேனாவிடம் ஒப்படைத்தார்.

தன்னை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மைத்ரிபாலா சிறிசேனாவை இலங்கை சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கடந்த நவம்பர் மாதம் ராஜபக்சே நீக்கினார்.

அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வியடைந்து, மைத்ரிபாலா சிறிசேனா வெற்றி பெற்றதையடுத்து, இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை விட்டும் ராஜபக்சே விலக வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல் கட்சிக்குள் கிளம்பியது.

இந்த எதிர்ப்பையடுத்து, தலைவர் பதவியை விட்டு விலகத் தயாராக உள்ளதாக இன்று அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கிடையில், அக்கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்துவந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சேவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 8-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியதும் ராஜபக்சே தோற்பது உறுதி என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. இதனையடுத்து, ராஜபக்சேவின் தேர்தல் பிரசார ஏற்பாடுகளுக்கு பொறுப்பேற்றிருந்த பசில், அமெரிக்காவுக்கு சென்று விட்டது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், கட்சி தலைவர் பதவியை இன்று மைத்ரிபாலா சிறிசேனாவிடம் ராஜபக்சே ஒப்படைத்தார். இதனையடுத்து, இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அக்கட்சியின் புதிய தலைவரானார்.

எனது கட்சி துண்டாடப்படுவதை நான் விரும்பவில்லை. எனவே, தலைவர் பதவியை இன்று மைத்ரிபாலா சிறிசேனாவிடம் ஒப்படைக்கிறேன் என இது தொடர்பாக ராஜபக்சே வெளியிட்ட இரு வரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>