18

siruppiddy

ஜனவரி 21, 2015

தமிழர் பகுதிக்கு அதிகார பகிர்வு; இலங்கை புதிய பிரதமர் ரணில்உறுதி!!!!

தமிழர் பகுதிக்கு அதிகார பகிர்வு அளிக்க 13-வது அரசியல் சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதி அளித்துள்ளார்.
கொழும்பு,
கடந்த 1987-ம் ஆண்டு ஜூலை மாதம், இந்தியா- இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதில், அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் கையெழுத்திட்டனர்.
13-வது திருத்தம்
அதைத் தொடர்ந்து, இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்பட அனைத்து மாகாணங்களுக்கும் அதிகார பகிர்வு அளிக்க இந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது.
ஆனால், அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள், இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்தவில்லை. மேலும், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த இலங்கை சுப்ரீம் கோர்ட்டு, 13-வது சட்ட திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், மாகாணங்களுக்கு இதுவரை அதிகார பகிர்வு கிடைக்கவில்லை.
ஆனால், 13-வது சட்ட திருத்தத்தை எழுத்திலும், செயலிலும் அமல்படுத்துமாறு இலங்கையை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
புதிய பிரதமர்
இந்நிலையில், கடந்த 8-ந் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜபக்சே தோல்வி அடைந்தார். புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா பதவி ஏற்றார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே, புதிய பிரதமராக பதவி ஏற்றார். 27 பேர் கொண்ட இடைக்கால மந்திரிசபையும் பொறுப்பு ஏற்றுக்கொண்டது.
பாராளுமன்றம் கூடியது
புதிய அரசு பதவி ஏற்ற பிறகு, நேற்று முதல் முறையாக பாராளுமன்றம் கூடியது. பாராளுமன்றத்தில் பேசிய புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தனது அரசின் 100 நாள் திட்டம் பற்றி விளக்கி கூறினார்.
அப்போது அவர், 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்தப்போவதாக அறிவித்தார். அவர் பேசியதாவது:-
வெவ்வேறு கொள்கைகளும், நோக்கங்களும் கொண்ட அரசியல் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளோம். சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட நாங்கள் ஒன்று சேர்ந்தோம்.
எல்லா அரசியல் கட்சிகளிடம் இருந்தும் நாங்கள் யோசனைகளையும், திட்டங்களையும், விமர்சனங்களையும் வரவேற்கிறோம். தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நாங்கள் ஒன்று சேர்வது சவாலான விஷயம்தான். இருப்பினும், இந்த பிரச்சினைகளை இந்த பாராளுமன்ற பதவிக்காலத்துக்கு அப்பாலும் நீடிக்க விட்டுவிடக்கூடாது.
அதிகார பகிர்வு
மாகாணங்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க வகை செய்யும் 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்துவோம். ஒன்றுபட்ட இலங்கை என்ற அடிப்படையிலும், சிறுபான்மை தமிழர்களுடன் நல்லிணக்கத்தை எட்டுவதற்காகவும் இந்த சட்ட 6திருத்தத்தை அமல்படுத்தப்போகிறோம்.

அதிபர் அதிகாரம் ரத்து

ஜனநாயக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதுதான், எங்களது 100 நாள் திட்டத்தின் பெரும்பகுதியாக இருக்கும். ராஜபக்சே, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை குழிதோண்டி புதைத்து விட்டு, அதிபர் பதவிக்கு அதிகாரங்களை குவித்துக்கொண்டார்.

இதற்காக அவர் செய்த 18-வது அரசியல் சட்ட திருத்தத்தை ரத்து செய்வோம். இதன்மூலம், அதிபர் பதவிக் கான அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படும். பாராளுமன்றத்துக்கும், மந்திரிசபைக்கும் அதிகாரங்கள் அளிக்கப்படும். பாராளுமன்றத்துடன் இணைக்கப்பட்ட மந்திரிசபையை கொண்ட புதிய அரசு முறையை கொண்டுவர பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்.
இந்திய ஆதரவை இழந்தது
தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை மீண்டும் உருவாக்க, 19-வது அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும். நீதித்துறை உள்ளிட்ட பொது அமைப்புகளை கண்காணிக்கும் அமைப்பாக இந்த தன்னாட்சி அமைப்புகள் செயல்படும். இதுவும், அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் நடவடிக்கைதான்.
ஒளிவுமறைவற்ற நிர்வாகத்தை அளிப்பதற்காக, தகவல் பெறும் உரிமை சட்டம் கொண்டுவரப்படும்.
ராஜபக்சே ஆட்சியால், மேலை நாடுகள் மற்றும் இந்தியாவின் ஆதரவை இலங்கை இழந்து விட்டது. சீனாவையே சார்ந்து இருந்தது. ஆனால், சீனா, ராஜபக்சேவின் நடவடிக்கைகளை கண்டு கொள்ளவில்லை.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே பேசினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக