18

siruppiddy

ஜூலை 10, 2014

தொடர்ந்து உரிமைக்காகத் போராடுவது தவிர்க்க முடியாது:!!

எங்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான் ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டிய தேவை உருவானது. காலம் காலமாக எமது இனம் வாழ்ந்த எம் தாய்நிலத்தை எதிரியவன் அபகரித்த கணத்தில் தான் எம்மை நாம் பாதுகாத்து எமக்கு ஒரு நாடு வேண்டும் -எமது மக்களுக்கு விடுதலை வேண்டும் -எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஒரே ஒரு இலட்சியத்திற்காக போராட வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டோம். 30 வருட சாத்வீக போராட்டத்தை தொடர்ந்து 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழீழ மக்களின் கனவை நியமாக்கி தமிழீழ நிழலரசை நிறுவியது.
சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களை அழிப்பதே நோக்கமாக கொண்டதனால் உலக வல்லரசுகளின் பிராந்திய மற்றும் பொருளாதார நலத்தை பாவித்து அவர்களை தனது அனுசரணையாளர்களாக மாற்றியது. 65 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் எம் போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு முகம் கொடுத்தும் உறுதி தளராமல் தடம் பிரலாமல் இன்றுவரை தொடர்கின்றது .
2009 ஆண்டு மே மாத நடுப்பகுதியில் எமது விடுதலை வீரர்களையும் மற்றும் 3 லெட்சத்திற்கும் மேலான எமது உறவுகளையும் குறிகிய நிலப்பரப்பில் அடைத்து , உயிரா அல்லது விடுதலையா என்று சிங்களத்தாலும் அத்தோடு உலகத்தாலும் கேக்கப்பட்ட பொழுது தமது விடுதலை தான் வேணும் என்று தமது உயிர்களை கொடுத்தார்கள் எமது மாவீரர்களும் மக்களும். நிலத்தில் போராட்டம் மௌனித்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புலம்பெயர் மக்கள் தொடர்ந்து ஏந்தி செல்கிறார்கள் .
முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் உலகமே கண்டிராத புலம்பெயர் தமிழர்களின் கண்டன பேரணிகளும், நீதி வேண்டிய உண்ணாநோன்பு விரதங்களும், வீதிமறிப்பு கவனயீர்ப்பு நிகழ்வுகளும் உலகம் பூராகவும் செய்யப்பட்டது. எம் உறவுகள் தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் தம்மை தாமே தீயிலிட்டு அர்ப்பணித்த நிமிடங்களை மறக்க முடியுமா ?
இன்று ஐந்து ஆண்டுகள் கடந்தும் தமிழர்களுக்கு மீதான இன அழிப்புக்கு எவ்வித நீதியும் எவ்வித அரசியல் தீர்வும் வழங்காத போதிலும் எமது தொடர் போராட்டம் முள்ளிவாய்க்கால் காலத்திலும் விட அதிவேகத்தோடு முன்னெடுக்கப்படவேண்டும்.
உண்மைகள் அழிவதில்லை என்பது போல தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு செய்த இன அழிப்பு ஆவணங்கள் வெளிவரும் தருணத்திலும் ஐநா வின் மனிதவுரிமை ஆணையகத்தின் விசாரணைக்குழு (ஒரு பலமான முழுமையான அனைத்துலக விசாரணைக் குழுவாக இல்லாத போதிலும்) உருவாக்கம் பெற்றிருக்கும் இத் தருணத்தில் நாம் எமது தொடர்போராட்டத்தையும் அரசியல் ரீதியான வேலைத் திட்டங்களையும் மிக வலுவோடு முன்னெடுக்கவேண்டும் .
நிலத்தில் உறவுகள் சிங்கள இனவெறியர்களுக்கும் அவர் தம் கூலிப்படைகளுக்கும் எவ்வித அச்சமும் அல்லாமல் நீதியை நிலை நாட்ட போராடுவது , மானத் தமிழர்கள் மடியவில்லை அடிபணியவில்லை என்று உறுதிப்படுத்துகின்றது .
பூமிப்பந்தில் எங்கு தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் போராட்டம் நடக்கின்றது . அந்த வகையில் கடந்த காலங்களில் பிரித்தானியாவில் தமிழர் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மக்கள் போராட்டங்கள் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே .
அந்த வகையில் எதிர்வரும் 23.யூலை ,தமிழின அழிப்பின் ஓரங்கமான வரலாற்று பதிவாகிய ,தமிழர்களால் மறக்க முடியாத கறுப்பு யூலை நினைவு நாளான அன்று ஸ்கொட்லான்ட் கிளாஸ்கோ நகரில் பொதுநலவாய நாடுகளின் தலைவராக மகிந்த ராஜபக்ச வருவதன் ஊடாக இன அழிப்புக்கு எதிராக நாங்கள் மேற்கொள்ளுகின்ற நீதிக்கான போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய ராஜபக்ச அரசாங்கம் தீவிரமாக இறங்கியிருக்கின்றது.
தமிழர் தேசத்தின் விடிவுக்காகவும் நீதிக்கான எமது போராட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கும் ராஜபச்சவுக்கு எதிராக நாம் போர்க்கொடி தூக்குவோம். பிரித்தானியாவாழ் உறவுகள் மீண்டும் வரலாற்றுப் போராட்டத்தை செய்வார்கள் என்பது நிச்சயம். இப் பாரிய போராட்டத்தை ஒருங்கிணைத்து செயற்படுத்தும் பிரித்தானியா தாய் அமைப்புக்கு அனைத்து மக்களும் ஆதரவு கொடுத்து இப் போராட்டத்துக்கு ஓரணியாக பேரணியாக அணி திரண்டு வெற்றிபெற செய்வது தேசக்கடமை .
இப் போராட்டத்துக்கு ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இருந்து மக்கள் அணிதிரள விமான பயண சீட்டை பதிவுசெய்கின்றனர் .
எத்தனை தடைகள் வந்தாலும் நாங்கள் போராடுவோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவோம் .நாங்கள் சிந்தும் துளிகள் இன்று கண்ணீராக இருந்தாலும் நாளை மலரப் போகும் தமிழீழத்துக்கு தண்ணீராக மாறும். தமிழீழம் மீட்கும் வரை எம் மக்கள் விடுதலை பெறும் வரை ஓயாது எம் போராட்டம்.
எம்மை பலப்படுத்தி , ஒரு வலுவான பலமான இனமாக எமது விடுதலையை வென்றெடுப்போம் . தமிழீழம் மலர்வது உறுதி .
நீதியின் அடிப்படையில், மனிததர்மத்தின் அடிப்படையில், சத்தியத்தின் அடிப்படையில் நியாயப்பாடு எமது பக்கமாக இருக்கும்பொழுது, நாம் எமது போராட்ட இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்க வேண்டும். இலட்சியத்தில் உறுதி பூண்டு இறுதி வரை போராடும் மக்கள்தான் விடுதலையை வென்றெடுப்பார்கள். (தேசியத் தலைவரின் சிந்தனைகளில் இருந்து )
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !!!
நன்றி
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை (ICET)

மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக