18

siruppiddy

ஜனவரி 08, 2016

இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு நோர்வே முழு ஆதரவு!

வடக்கு, கிழக்கு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் இலங்கை அரசு பொறுப்புடன் செயற்படுவதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கின்றோம். மீள்குடியேற்றம் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதேவேளை, இதனை நாங்கள் அவதானித்து வருகின்றோம் இவ்வாறு நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்ட் தெரிவித்தார்.
ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த அவர் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இருதரப்பு பேச்சுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட பல்லின கலாசாரமே நாட்டை பலப்படுத்துகின்றது. வடக்கில் அமைதி பேணப்படுவது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களது மீள்குடியேற்றம் என்பது இலங்கை அரசு முக்கிய கவனம் செலுத்த வேண்டிய அம்சங்களாகும். இது தொடர்பில் புதிய அரசும் முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பில் இரு தரப்பு கலந்துரையாடலின்போது
 பேசப்பட்டது.
இலங்கை அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நல்லிணக்க நடவடிக்கைகள் செயற்பாடுகளுக்கு நோர்வே பெரிதும் ஆதரவளிக்கும், வரவேற்கும். இலங்கை தற்போது மிக முக்கியமான மறுசீரமைப்புகளை மேற்கொண்டு வருகின்றது. இலங்கையின் அபிவிருத்திகளை முன்னெடுத்துச்
 செல்வதில்
 சர்வதேச சமூகம் உங்களது அரசுடன் வலுவான ஒத்துழைப்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றது. இலங்கையுடனான நோர்வேயின் ஒத்துழைப்பைப் பொறுத்த வரையில், மீன்பிடித்துறையில் மீட்சிப் பெறுவதையும் அதன் பின்னர் நீரியல் வளங்கள் அபிவிருத்தியையுமே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது பற்றி எங்களது சந்திப்பில் பேசப்பட்டது. இதற்கான ஒத்துழைப்புகளை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம். அதேபோல், சூரியசக்தி உற்பத்திக்கு இலங்கையில் அதிக சாத்தியங்கள் இருப்பது தொடர்பிலும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் என்னிடம் தெரிவித்தார்.
வடக்கில் நிலவும் அமைதி மற்றும் வீடுகள் மீள்நிர்மாணம் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் இந்தச் சந்திப்பின்போது எனக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதை நான் பாராட்டுகின்றேன். இந்த விடயங்கள் ஒரு 
வழியில் முன்னோக்கி நகர்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இந்த உத்வேகம் பேணப்பட வேண்டும். இது மிகவும் 
முக்கியத்துவம் கொண்டதாகும். இதேநேரம், இலங்கையில் நேர்வே முதலீடுகளுக்கு அதிக சாத்திப்பாடுகள் இருப்பதையும் நாம் காண்கின்றோம் என்றார்.   
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக