மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவை மைத்திரிபால சிறிசேன அதிரடியாக கைது செய்யச் சொல்லி மிகப்பெரிய அதிர்வலைகளை இலங்கை அரசியலில் ஏற்படுத்தியுள்ளார்.
மிகவும் அமைதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனா அவ்வப்போது எதிர்பாராத விதமாக திடீர் திடீரென்று தனது முடிகளை அறிவித்து இலங்கை அரசியலில் அவ்வப்போது தன்னை நிலைநிறுத்தி
வருகின்றார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செல்வாக்கு இன்னமும் குறைவடையவில்லை என்பது உண்மையாயினும், மைத்திரிபால சிறிசேனவிற்கும் அதே அளவு இடம் சிங்கள மக்கள் மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களிடமும் உண்டு என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு
இடமில்லை.
இதனால் அரசியலில் இரு பெரும் துருவமாக இவர்கள் விளங்குகின்றார்கள். ஆயினும், மகிந்த ராஜபக்சவின் விடையத்தில் மைத்திரிபால சிறிசேன தனது காய்களை மெல்லவே நகர்த்துகின்றார் என்பது தெளிவாக
தெரிகின்றது.
ஏனெனில் மகிந்த ராஜபகச் விடையத்தில் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் அது அவருடைய ஆட்சிக்கே குந்தகம் விளையும் என்பதில் அவர் தெளிவாகவே இருக்கின்றார்..
இதனால் தான் இன்றுவரை மகிந்த ராஜபக்சவை கைது செய்யுமாறு அவரால் உத்தரவு பிறப்பிக்க முடியவில்லை. மகிந்த ராஜபக்ச மீதான விடையத்தில் நிதானம் முக்கியம் என்பது மைத்திரியின் முடிவு. அது தவறும் அன்று. ஆனால் மகிந்த ராஜபக்சவிற்கு அவ்வப்போது ஒரு பயப்பீதியை மைத்திரி கொடுக்காமலும் இல்லை.
முதலில் பசில் ராஜபக்சவை கைது செய்ய பணித்தார். கோத்தபாய ராஜபக்சவை விசாரணைக்கு இழுத்துவிட்டார். மகிந்தவின் மனைவியையும் அவர் விசாரணைக்காக அலைய
வைத்திருக்கிறார்.
அதன் அடுத்த கட்டமே யோசித ராஜபக்சவின் கைது நடவடிக்கை. இது மகிந்த ராஜபக்வின் ஊழல்களை விசாரிப்பதற்கானது என்பதைக்காட்டிலும் இப்படியான ஒரு நெருங்குவாரங்களை கொடுத்து அவரை மிரட்டுவதற்கான, அல்லது தன்னுடைய இருப்பைக் காட்டுவதற்கான செயற்பாடாக ஜனாதிபதி நினைத்திருக்க கூடும். அதன் விளைவு தான்
யோசிதவின் கைது.
ஆனால் மைத்திரிபால சிறிசேனவின் இந்த முடிவானது அவசரப்பட்டு எடுக்கப்பட்ட ஒன்று என்றும், இதனை நினைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சி அடைந்து போயுள்ளார் என்றும் பிறிதொரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அரசாங்கமாக ஆட்சி செலுத்தும் தற்போதைய கூட்டு அரசியலைப்பயன்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை வளப்படுத்த ரணில் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றார்.
இதன் முதற்கட்டமாக, அடுத்து நடக்கவுள்ள இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அதிகபடியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாகவேண்டும் என்னும் கண்டிப்பு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மைத்திரிபால சிறிசேன யோசித ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தமையானது அவர் மீதான கூட்டு எதிர்க்கட்சிகள் மீதான அனுதாப அலைகளாக மாறிவிடும் என ரணில் அச்சம்
கொண்டுள்ளார்.
இதேவேளை, மகிந்த, கோத்தபாய, பசில் இணைந்து புதிய மாற்று அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான இக்கட்டான அரசியல் சூழ்நிலையில் மைத்திரியின் இந்த முடிவு தனது அரசியல் காய் நகர்த்தல்களுக்கு நெருக்கடியானது என அவர் கலங்கிப்போயுள்ளார்.
ஆனால் மைத்திரிபால சிறிசேனவின் இந்த முடிவால் மகிந்த ராஜபக்ச தாங்க முடியாத கவலையோடு, கடும்கோபத்திலும் தனது கருத்துக்களை வெளியிட்டுவருகின்றார்.
நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்து நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்த என் குடும்பத்திற்கு இப்படியொரு நிலமையை ஏற்படுத்தியிருக்கின்றார்கள் என எண்ணி
கலங்கியுள்ளார்.
அதனை அவர் வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கின்றார். இந்த நாட்டிற்காக பாடுபட்டதற்காக கிடைத்த பரிசு என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார். இதனிடையே முழு நேர அரசியலில் இறங்கப்போகின்றேன். எண்ணை சீண்டிப்பார்க்கின்றார்கள் என்றும் கூறியிருக்கின்றார்.
இதுவொருபுறமிருக்க, மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் தனது முகப்புத்தகத்தில் சிங்கத்தின் வாலை பிடித்துவிட்டீர்கள். என்றும் கருத்திட்டு இருக்கின்றார்.
இந்நிலையில், இன்று மகிந்த ராஜபக்ச கண்டி தலதா மாளிகைக்கு வழிபாட்டுக்காக சென்றுள்ளார். இது அவரின் மன ஆறுதலுக்கான பயணமாக இருந்தாலும், அவரின் திட்டமிட்ட செயற்பாடாக
நோக்கப்படுகின்றது.
நாட்டின் மிகப்பெரிய பெரும்பான்மை தலைவர்களாகிய மைத்திரி, ரணில், மகிந்த மூவரும் தற்பொழுது வேறு வேறு சிந்தனையில் இருக்கின்றார்கள். ஆனால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவிற்கு சற்றே சந்தோசமான நிகழ்வாக இது காணப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் மகிந்த ராஜபக்ச இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கு கொடுத்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
இந்நிலையில் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் சிறிது காலம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தங்கியிருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
எதுவாயினும் மைத்திரியின் இந்த அதிரடி உத்தரவு பலரை ஆடிப்போகச் செய்துள்ளது என்பதோடு அரசியலில் பரபரப்பையும் ஏற்படுத்திவிட்டிருக்கின்றது என்பதே உண்மை.
பொறுத்திருந்து பார்க்கலாம் மைத்திரியின் இந்த நடவடிக்கையால் இன்னும் என்னென்ன நிகழ்வுகள் நடக்கப்போகின்றன என்று.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக