18

siruppiddy

ஜூன் 28, 2016

முதல்வர் சீ.வியின் அதிரடி உத்தரவு வடக்கு ஆசிரியர்களுக்கு?

ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர வகுப்புக்கள், விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் ஆகியன பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடாத்தப்படக்கூடாது.
அவ்வாறு நடாத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
 தெரிவித்துள்ளார்.
வடமராட்சி புலோலி புற்றளை மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவும் , பரிசளிப்பு விழாவும் இன்று காலை நடைபெற்றது அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
ஊக்கம் அற்ற மாணவர்கள் தாம் நிற்கின்ற இடத்திலேயே ஒரு கோட்டைக் கீறிவிட்டு அதன் மீது ஏறி நின்று கொண்டு தமது இலக்கைத் தாம் அடைந்துவிட்டதாகத் தம்மையும் ஏமாற்றி தமது குடும்பத்தவரையும் ஏமாற்றுகின்ற ஒரு நிலையை நாம் அவதானிக்கலாம். அந்த நிலை மாற வேண்டும்.
தமிழ்ச் சமூகம் பொதுவாகக் கல்வியில் உயர்ந்தவர்களாக, ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களாக, நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக, கடும் உழைப்பாளிகளாக இனம் காணப்பட்ட சமூகம்.
இன்றோ அவர்கள் கல்வி கேள்வி அறிவின்றி, ஒழுக்க நெறியில் நின்றும் பிறழ்வடைந்து, ஒழுக்கச் சீர்கேடுகளுடன் எதுவித தொழில் முயற்சியோ, வருமானம் ஈட்டும் நோக்கமோ, குடும்ப கௌரவத்தைப் பாதுகாக்கும் எண்ணமோ அற்றவர்களாகக் காட்டுமிராண்டித் தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் கொலை, களவு போன்ற தீய செயல்களில் ஈடுபடுவதும் எம்மை மிகவும் வேதனைக்கு உள்ளாக்குகின்றன.
உலகலாவிய ரீதியில் இலங்கைத் தமிழர்கள் பொதுவாகக் கற்றவர்கள், பண்பட்டவர்கள், பண்புடையவர்கள் என்ற நற்பெயரை இதுவரை நிலைநாட்டி வந்துள்ளனர்.
எனினும் எவ்வளவு தீய பழக்கங்களையும் செயல்களையும் புரிய முடியுமோ அவற்றையெல்லாம் புரிந்து கொண்டு பூமிக்கு பாரமாக இருக்கக் கூடிய இளைஞர்களை நாம் இன்று எம்மிடையே பார்க்கின்றோம். இவர்களைத் திருத்தி சரியான பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய தலையாய பணி இப்போது புதிதாக உருப் பெற்றிருக்கின்றது.
போரால் பாதிக்கப்பட்ட மக்கள், உறவுகளை இழந்தவர்கள், உடல் அங்கங்களை இழந்தவர்கள், சொத்து சுகங்களை இழந்தவர்கள், வீடு வாசல்களை இழந்தவர்கள், பிள்ளைகளை இழந்தவர்கள் எனப் பல்லாயிரக் கணக்கானவர்கள் வறுமையால் வாடிக் கொண்டிருக்கும் போது 
அவர்களை 
எவ்வாறு கரையேற்றுவது என்று திக்குத் தெரியாமல் நாம் தடுமாறிக் கொண்டிருக்கும் இவ் வேளையில் மாணவ மாணவியரைக் கரை சேர்க்கும் பிரச்சனை எம்மை மேலும் திணர வைத்துக்
 கொண்டிருக்கின்றது.
எளிமையிலும் செழிப்புடனும் வாழ்ந்த எம்மவர்கள் இன்று வெட்கித் தலைகுனிகின்றார்கள். பிரச்சனைகள் மாணவ மட்டத்தில் மட்டுமே என்று கூறமுடியாது. நாம் சிறுவர்களாக பாடசாலைகளில் 
கல்வி கற்ற 
காலத்தில் எமது ஆசான்களாக எமக்குக் கல்வி புகட்டிய ஆசிரியப் பெருந்தகைகளை ஒரு கணம் எண்ணிப் பார்த்தோமானால் அவர்கள் ஆசார சீலர்களாக, ஒழுக்கம் நிறைந்தவர்களாக, கண்ணியம் மிக்கவர்களாக, எமது முன்னேற்றத்தின் முன்னோடிகளாக வாழ்ந்ததை நாங்கள் அடையாளம் காணுவோம்
அவர்களின் தோற்றங்கள் இப்போதும் எமது மனக் கண்ணில் பசுமரத்தாணியாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இன்றைய தினசரிப் பத்திரிகைகளில் வருகின்ற செய்திகள் எம்மை கதி கலங்க வைக்கின்றன.
பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் குறிப்பாகப் பத்துப் பன்னிரண்டு வயது பெண் பிள்ளைகளுடைய பெற்றோர்கள் தமது பிள்ளைகளை எவ்வாறு பாடசாலைக்கு அனுப்புவது என ஏங்குகின்றார்கள்.
ஆரம்பத்தில் இச் செய்திகள் பொய்யானவையா அல்லது புனையப்பட்டவையா என்ற ஒரு சந்தேகம் எழுந்தது. ஆனால் தினமும் வரக்கூடிய செய்திகளைப் பார்க்கின்ற போது ஆண் பெண் என்ற வேறுபாடின்றி ஆசிரியர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ துர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும் என எனக்குத் தெரியவில்லை. ஆசிரிய குலத்திற்கே அபகீர்த்தி வந்துள்ளதை நாம் உணர வேண்டும்.
குருவைக் கண்ட இடமெல்லாம் வணங்கு என்ற ஒளவைப் பிராட்டியின் கூற்றுக்கு இன்று என்னாகி விட்டது? தகுதியற்றவர்கள் தகைமையற்றவர்கள் தரங்குறைந்தவர்கள் புனிதமான ஆசிரியத் தொழிலினுள் உள்ளிட நாம் இடமளித்து விட்டோம். இதற்குக் காரணம் அரசியல் என்பதிலும் பார்க்கச் சுயநலமே என்பது எனது கருத்து.
தூர நோக்கின்றி தருணத்திற்குப் பொருத்தமாக தன்நல காரணங்களுக்காக நாங்கள் தவறான பாதையில் சென்று விட்டோம் என்பதை இனியாவது நாம் உணர வேண்டும். எனவே கல்வி நடவடிக்கைகளில் ஆசிரியர்களின் செயற்பாடுகள் பற்றி இறுக்கமான சில தீர்மானங்களை கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகள் மூலம் அனுப்ப வேண்டிய கால கட்டாயத்திற்கு நாம் உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம் என்று நான் 
நம்புகின்றேன்.
உதாரணத்திற்குத் தனி ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர வகுப்புக்கள், விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் ஆகியன பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடாத்தப்படக்கூடாது. அவ்வாறு நடாத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல்
 வேண்டும்.
மேலும் ஒரு ஆசிரியர் ஒழுக்க நெறி பிறழ்வில் ஈடுபட்டிருப்பது தெரிந்தும் அதனை உடனடியாக உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தாமல் மறைப்பதுங் கூட தண்டனைக்குரிய குற்றமாகும். இவற்றை நடைமுறைப்படுத்த நாம் முன்வர வேண்டும்.
ஓர் இரு ஆசிரியர்களின் தவறான பழக்க வழக்கங்கள் ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தையும் தலைகுனிய வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. நண்பர்கள், பழகியவர்கள் எனப் பிழை செய்பவர்களுக்கு உதவப் போய் நீங்களும் சேர்ந்து பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் 
கொள்ளுங்கள்
பெரும்பான்மை ஆசிரியர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள முடிவெடுத்தால் குற்றமிழைக்கும் ஆசிரியர்களை எளிதில் திருத்தி விடலாம். உங்கள் பெரும்பான்மையினரின் அழுத்தம் தவறு செய்பவரைக் கட்டுப்படுத்திவிடும். ஆனால் அதற்கென்ன என்று பெரும்பான்மையோர் சிந்திக்கத் தொடங்கினால் ஆசிரிய சமூகத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்படும்
கணணி மூலமாக எங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டுவோம். ஆசிரியர்களுடன் நேரடித் தொடர்பின்றி கல்வி புகட்டுவோம் என்று பெற்றோர்கள் கூறத் தலைப்படுவார்கள்.
ஆகவே ஆசிரியர் சமூகம் மீண்டும் ஒரு உன்னதமான சமூகமாக மாற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என இச் சந்தரப்பத்தில் கூறி வைக்கின்றேன்.
ஒவ்வொரு பாடசாலையும் ஏனைய பாடசாலைகளுக்கும் மக்களுக்கும் முன்மாதிரியாக விளங்க இனிப் பாடுபடவேண்டும். அவை பாடசாலைகளாக இல்லாது கோவில்களாக மாற நாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கோவில்களாகத் தினமும் பூஜிக்கத்தக்க வகையில் பாடசாலைகள் மாற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
அதற்கு நாம் அனைவரும் சிந்தித்து நடவடிக்கைகளை எடுப்போம். எமது பாடசாலைகள் ஆத்மார்த்த கோவில்களாக மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை என மேலும் தெரிவித்தார்.…
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக