இலங்கை கடல் எல்லையில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. எமக்கு ஒரு வருடகாலம் அவகாசம் தாருங்கள் முழுமையாக நிறுத்திக்காட்டுகின்றோம் என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா சவால் விடுத்துள்ளார்.இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து விரைவில் புதிய கப்பல்கள் கொள்வனவு செய்யவுள்ளதாகவும்
அவர் குறிப்பிட்டார்.
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நேற்று கண்டி தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்ததுடன் அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றிருந்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர்களிடம் தொடர்ந்து கருத்து வெளியிட்ட தளபதி;
இலங்கையின் கடல் பாதுகாப்பில் இலங்கை கடற்படை அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது. நாம் எமது கடல் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தி புதிய கப்பல்களை கொள்வனவு
செய்யவுள்ளோம்.
அடுத்த மாதம் ஒரு கப்பலை நாம் கொள்வனவு செய்யவுள்ளோம். அத்துடன் இந்தியாவிடம் இருந்து அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நவீன கப்பலை கொள்வனவு செய்யவுள்ளோம். மேலும் மூன்று புதிய கப்பல்கள் அடுத்த ஆண்டில் எமக்கு கிடைக்கவுள்ளன. இவை எமது கடல் எல்லை பாதுகாப்பை பலப்படுத்த நாம் எடுக்கும் முயற்சிகளாகும்.
எமக்கு கடல் எல்லை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. போதைப்பொருள் கடத்தல் விடயங்களில் நாம் அதிக அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றோம். அதற்காகவே நாம் இந்த கப்பல்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகளை தடுக்க வேண்டிய முயற்சிகள் எம்மிடம் உள்ளன. எமக்கு ஒரு வருட காலம் தாருங்கள் நாம் முழுமையாக இந்த செயற்பாடுகளை நிறுத்திக்
காட்டுகின்றோம்.
இலங்கை கடற்படை மீது பல்வேறு குற்றங்கள் கடந்த காலங்களில் சுமத்தப்பட்டன. எனினும் இவை தொடர்பில் நாம் அக்கறை செலுத்தி வருகின்றோம். ஒழுக்கம் என்பது முக்கிய அம்சமாகும். இந்த ஒழுக்கத்தை வைத்துக்கொண்டு எதிர்வரும் காலங்களில் நாம் எமது கடமைகளை
முன்னெடுப்போம்.
நடந்த விடயங்கள் தொடர்பில் நாம் நடவடிக்கைகளை எடுப்போம். இதில் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையெனத்
தெரிவித்த அவர்
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை எல்லை குறித்த தெளிவில்லாமல் அத்துமீறி பிரவேசிக்கின்றனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் இலங்கை இந்திய கடல் எல்லையை அடையாளப்படுத்தி அதனை அவர்கள் மீறும் போது எச்சரிக்கை சமிக்ஞையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த செயற்பாடுகளுக்காக புதிய இயந்திர படகுகளை இலங்கைக் கடற்படையுடன் இணைக்கவுள்ளதாகவும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக