18

siruppiddy

செப்டம்பர் 28, 2014

மோடி கூட்டமைப்புடன் பேசிய விடயங்கள் மகிந்த ராஜபக்சவுக்கு கூறியுள்ளார்

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசிய விடயங்களை சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி அறியப்படுத்தியதாக சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 
நரேந்திரமோடிக்கும், மகிந்தராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இரவு நியுயோர்க்கில் வைத்து நடைபெற்றிருந்தது. 
இதன் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு தம்மை சந்தித்து முன்வைத்த விடயங்களை ஜனாதிபதியிடம் நரேந்திர மோடி கூறியுள்ளார். 
அத்துடன், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் ஊடாக அரசியல் தீர்வினை காண்பதற்கு தாம் நடவடிக்கை எடுத்துவருதாகவும், இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் சிறிலங்காவின் ஜனாதிபதி, நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளார்.
நரேந்திரமோடியும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டிருப்பதாக சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எனினும் இது தொடர்பில் இந்திய அரசாங்கத்தினால் இன்னும் ஊடக அறிக்கைகள் எவையும் வெளியிடப்படவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செப்டம்பர் 26, 2014

பெண்ணொருவர் நீதிவேண்டி , ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கை!  தனது தொழில் நியமனத்தில் காட்டப்படும் பாரபட்சம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு, தனக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு கோரி – பெண்ணொருவர் ஜனதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழுள்ள பாலமுனை நூலகத்தில் கடமையாற்றும் எஸ்.நபீஸதுல் மிஸ்றியா எனும் பெண்ணொருவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளார்.

தனக்கு வழங்க வேண்டிய நியமனத்தினை, தன்னை விடவும் குறைந்த தகைமையுடைய ஒருவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, குறித்த பெண் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழுள்ள பாலமுனை நூலகத்தில் மேற்படி பெண் 14 வருடங்களுக்கும் மேலாக சமயாசமய அடிப்படையில் நூலக உதவியாளராக கடடிமையாற்றி வருகின்றார். இந்நிலையில், தன்னை விட அனுபவமும் தொழில் தகைமையும் குறைந்த நபரொருவருக்கு – தான் வகித்து வரும் பதவியை நிரந்தரமாக வழங்குவதற்கான நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படுவதாகவும் தனது கடிதத்தில் விபரித்துள்ளார்.

எனவே, மேற்படி பாரபட்சமான நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தி – குறித்த பதவியை தனக்கு நிரந்தரமாக வழங்குமாறு – ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் – சம்பந்தப்பட்ட பெண் வேண்டியுள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிருவாகத்தின் கீழுள்ள பாலமுனை நூலகத்தில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக குறித்த பெண் – சமயாசமய அடிப்படையில் நூலக உதவியாளருக்கான கடமைகளை மேற்கொண்டு வருகின்றார்.

நூலக உதவியாளருக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும்போது, இந்தப் பெண்ணுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென பிரதேச சபையினரால் பல்வேறு தடவைகளில் உறுதி மொழிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இந்த நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அட்டவணைப்படுத்தப்படாத பதவிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, தகைமையுடையவர்களிடமிருந்து கடந்த ஜூன் மாதம் விண்ணங்கள் கோரப்பட்டிருந்தன.
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நிலவும் மின் தொழிலாளி, நூலக பரிசாரகர் (உதவியாளர்), களத் தொழிலாளி மற்றும் சுகாதாரத் தொழிலாளிகளுக்கான பதவிகளுக்கு நிரந்தமாக ஆட்களை நியமிக்கும் வகையில் மேற்படி விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நூலக பரிசாரகர்களுக்கான (உதவியாளர்) 02 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதற்கிணங்க, பாலமுனை நூலகத்தில் சமயாசமய அடிப்படையில் 14 வருடங்களுக்கும் மேலாக நூலக உதவியாளராய் கடமையாற்றிவரும் மேற்படி எஸ்.நபீஸதுல் மிஸ்றியா என்பவரும் நூலக பரிசாரகர் (உதவியாளர்) பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 17ஆம் திகதியன்று அட்டாளைச்சேனை பிரதேசசபைக் காரியாலயத்தில் நூலக பரிசாரகர் (உதவியாளர்) பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகப் பரீட்டை நடைபெற்றது.
தற்போது – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நிலவும் நூலக பரிசாரகர் (உதவியாளர்) பதவிக்கான இரண்டு வெற்றிடங்களுக்கும் நிரந்தரமாக ஆட்களை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
ஆயினும், நூலக உதவியாளர் பதவி வழங்கப்படவுள்ளோருக்கான பட்டியலில் தனது பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மிஸ்றியா தெரிவிக்கின்றார். இந்த நிலையில், மிஸ்றியாவை விட – தகைமையிலும், தொழில் அனுபவத்திலும் குறைந்த நபரொருவருக்கு நூலக உதவியாளர் பதவியினை வழங்குவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மிஸ்றியா குற்றம்சாட்டுகின்றார்.
இவ்வாறானதொரு நிலையிலேயே, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மேற்படி பெண் தொழிலாழியான மிஸ்றியா – தனக்கு நீதி கோரி, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆறு பிள்ளைகளின் தாயாரான மேற்படி பெண், தற்போது சமயாசமய அடிப்படையில் நூலக உதவியாளராகக் கடமையாற்றும் வருமானத்தின் மூலமே, அவருடைய குடும்பத்தினைக் கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிழக்கு மாகாணசபையில் முக்கிய பதவியொன்றிலுள்ள நபரொருவரின் உறவு முறையானவரை – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நூலக பரிசாரகர் (உதவியாளர்) பதவிக்கு நியமிப்பதற்காகவே – மேற்படி மிஸ்றியா எனும் பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நிலவும் நூலக பரிசாரகர் (உதவியாளர்) பதவிக்கு நிரந்தரமாக ஆட்களை நியமிக்கும் நடவடிக்கையில், கிழக்கு மாகாணசபையின் மேற்படி முக்கிய பதவியிலுள்ள நபர் – தனது விருப்பு வெறுப்புக்கேற்ப ஆதிக்கம் செலுத்துவதால், இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கும் – ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் பிரதிகளை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் அனுப்பி வைத்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செப்டம்பர் 25, 2014

கிணறு ஒன்றில் எறிகணை குண்டுகள் மீட்பு

பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து 120 மில்லிமீற்றர் ரக எறிகணைகள் 23, புதன்கிழமை (24) மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர்.
பாழடைந்த கிணற்றை துப்பரவு செய்யும் போது குண்டுகள் இருப்பதை அவதானித்த காணி உரிமையாளர்கள், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
அதற்கிணங்க இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று எறிகணைகளை மீட்டதாக பொலிஸார் கூறினர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செப்டம்பர் 23, 2014

வெள்ளவத்தையில்! சனல்- 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர்

 ,பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சனல்- 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் நேற்று காலை சிறீலங்கா  வந்தடைந்துள்ளதாக சிங்கள அரச புலனாய்வுத்துறை  தெரிவித்துவருகிறது.
மேற்குறித்த சனல்- 4  பணிப்பாளரான ஜோன் ஸ்டெவார்ட் பிரான்ஸிஸ், கொழும்பு, வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் வீடு வாங்கியுள்ளதாகவும் விடுமுறையைக் கழிப்பதற்கு, அவரது மனைவியுடன் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவரது மனைவி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2013ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த இவர் பாதுகாப்பு காரணங்களுக்காக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

                                        

செப்டம்பர் 22, 2014

உயிர் தப்பியுள்ளா ஊடகவியலாளர் மீது கொலை முயற்சி!!

வன்னியின் சுதந்திர ஊடகவியலாளரான சின்னராசா சிவேந்திரன் நேற்றிரவு கொலை முயற்சி தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளார். இலங்கை பாதுகாப்பு தரப்பினைச் சேர்ந்தவர்களென நம்பப்படும் தாக்குதலாளிகள் அவரை ஏ-9 வீதியினால் பயணித்த வாகனமொன்றுள் தள்ளி வீழ்த்தி கொலை செய்ய முற்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் சின்னராசா சிவேந்திரன் (வயது 33) வழமை போலவே கிளிநொச்சியில் கரடிப்போக்கு சந்தியிலுள்ள தான் பணியாற்றும் ஊடக நிறுவனங்களுள் ஒன்றினது பிரதேச அலுவலகத்திற்கு செய்திகளை வழங்கிய பின்னர் வழமை போலவே பரந்தனிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அவ்வேளை அவரது துவிச்சக்கர வண்டியினை வழிமறித்து இரு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர்.
தம்மை முதலில் சி.ஜ.டி என அறிமுகப்படுத்திக்கொண்ட இந்நபர்கள் தமது முகத்தை அடையாளம் தெரியாத வகையில் இருட்டினுள் மறைத்துக்கொண்டுள்ளனர். அவர் மீது சகட்டு மேனிக்கு தாக்குதல்களை நடத்திய நபர்கள் அவர் மயக்கமுற்றிருந்த நிலையில் அவரை தூக்கி வீதியில் பயணித்த வாகனமொன்றின் சில்லினுள் வீசியுள்ளனர்.எனினும் சுதாகரித்துக்கொண்டு வாகனத்தை திருப்பி மோதாது சென்றுள்ளனர்.
இந்நிலையில் சுதாகரித்துக்கொண்ட சிவேந்திரன் அவர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு தப்பித்து அருகாகவுள்ள உணவகமொன்றை நோக்கி தப்பி சென்றுள்ளார். எனினும் தாக்குதலாளிகள் அவரை துரத்தி சென்றுள்ளனர். எனினும் அவர்களை பதிலுக்கு தாக்கிவிட்டு சிவேந்திரன் செல்ல பொதுமக்கள் திரண்டதையடுத்து தாக்குதலாளிகள் தப்பி சென்றுள்ளனர்.
சின்னராசா சிவேந்திரன் வன்னியில் நீண்டகாலமாக ஊடகவியலாளராக செயற்பட்டுவருவதுடன் ஒரு ஆசிரியராகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செப்டம்பர் 21, 2014

உங்களை நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்”

 வன்னிக்குள் வீதி புனரைமப்புக்காகத் தறிப்பதற்குக் காத்திருக்கும் பாலை மரத்துடனான நேர்காணல்.
வணக்கம் பாலையே,
வணக்கம் என் வாழ்வில் முதல் தடவையாக மனித வணக்கத்தை கேட்கின்றேன். எனக்கு உங்களைப் போல வணக்கம் சொல்ல முடியாது. என் கிளைகள் அனைத்தும் உங்களுக்கு வணக்கம் தெரிவிக்கின்றன. (மரத்தின் கிளைகள் சம நேரத்தில் ஆறுதலாக அசைகின்றன).
உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தர முடியுமா?
நான் பாலை. இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன் நிலவிய சங்க காலம் எனும் பண்பாட்டு ஆக்க காலத்தில் எனக்குப் பெயர் கிடைத்ததாகக் என் பாட்டனார் சொல்லித் தந்திருக்கின்றார். அதாவது, அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தாம் வாழ்ந்த ஐவகை நிலத்திற்கும் அது கொண்டிருக்கும் சூழல் மற்றும் அவர்களின் தொழில் அடிப்படையில் மருதம், முல்லை, குறிஞ்சி, நெய்தல், பாலை எனப் பெயரிட்டனர். அதில் முல்லைக்கும் குறிஞ்சிக்கும் இடையில் என் பாலை நிலம் இருந்திருக்கின்றது. அது வரண்ட நிலமாக இருக்கும். அங்கே தான் எங்கள் பரம்பரை ஆரம்பமானது. எனவே, அந்த நிலத்தின் பெயர் என் பெயரும் ஆனது. உங்களைப் போல நாம் தனி அடையாளங்களை விரும்புவதில்லை. அதனால் தான் என் பாட்டனாரின் பெயரும் பாலை. எனது பெயரும் பாலை.
ஆம், நீங்கள் நன்றாக வளர்ந்திருக்கின்றீர்கள். பிரமிப்பாயிருக்கின்றது. உங்களிடம் இருக்கின்ற சிறப்பென்று எதனைக் குறிப்பிடுவீர்கள்?
நல்ல வினா. கட்டாயம் தேடலுல்லோர் நலனுக்காக பதிலளித்தே ஆக வேண்டும். எங்கள் இனத்தவர் அனைவரும் கிட்டத்தட்ட 40-80 அடி உயரம் வரை வளர்வோம். எமது கால்பகுதியின் (அடி மரத்தை தொட்டுக் காட்டுகின்றார்) சுற்றுவட்டம் 1-4 மீற்றர்கள் வரை கொழுக்கும்.
ஆனால், நீங்கள் குறிப்பிடுவதை விட சிறு பாலைகளையும் நான் பார்த்திருக்கின்றேனே?
ஹா…ஹா… (சிரிக்கின்றனார்). உண்மைதான். நீங்கள் பார்த்திருப்பது உவர் நிலப்பரப்பில் வாழும் பாலைகளை. அங்கு கிடைக்கும் நீர்த்தன்மைக்கு ஏற்ப அந்த நிலத்தில் வதியும் அனைத்துமே பறட்டை என்கிற அழகு சுந்தரமாகத்தான் வளரும். ஏன் நீங்கள் ‘தக்கனப் பிழைத்தல்’ பற்றி படித்தில்லயா நண்பரே? ஆகவே, நாங்களும் அங்கு கட்டையாக இருப்போம்.
உங்களில் எத்தனை வகையான பிரிவுகள் உண்டு எனச் சொல்வீர்களா?
நாம் பிரதானமாக 5 வகையினராகப் பிரிந்துள்ளோம்.
1.உலக்கைப் பாலை.
2.குடசப்பாலை
3.வெட்பாலை
4.முசுக்கைப் பாலை
5.ஏழிலைப் பாலை
இவை ஒவ்வொன்றும் வளரும் சூழல், அதன் தன்மை மற்றும் தனித்துவங்களால் தம்மை தனிவகை என அடையாளப்படுத்திக் கொண்டன.
உங்களைச் சந்தித்த நபர்களைப் பற்றி குறிப்பிட முடியுமா?
ஆம். என் தந்தையர் காலத்தில் சில விஞ்ஞானிகள் அவரைச் சந்தித்ததாகச் சொல்வர். அவர்கள் எங்கள் இனத்திற்கு Manilkara hexandra என்ற புதுப் பெயரை (இரசாயனப் பெயரைக் குறிப்பிடுகின்றார்) சூட்டினராம். ஆனால், அது எம் மத்தியிலோ, உங்கள் மத்தியிலோ எடுபடவில்லை என்றே குறிப்பிட வேண்டும். கடைசி வரைக்கும் அது ஆய்வு கூடங்களுக்கு மட்டும் பயன்படும் பெயராயிற்று. அதற்குப் பிறகு பலர் என்னைத் தொட்டுத் தடவியிருக்கின்றனர். தறிப்பதற்காக வலம் பார்த்திருக்கின்றனர். பலர் மழைக்கும் வெயிலுக்கும் போருக்கும் தங்கிப் போயிருக்கின்றனர். பல ஆயிரக்கணக்கானோர் என் மீது ஏறி அட்டகாசம் புரிந்து என்னை துன்பப்படுத்தி என் பிள்ளைகளைப் பறித்துச் சாப்பிட்டு இன்பம் அடைந்திருக்கின்றனர். நான் லட்சக்கணக்கான என் பிள்ளைகளை உங்களுக்கு சாப்பிட தந்துவிட்டு உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
உங்கள் பிள்ளைகளைப் பற்றி சொல்லுங்களேன்?
எங்களிலும் ஆண்-பெண் பேதமிருக்கின்றது. நான் பெண். ஆண்கள் காய்ப்பதில்லை. நாங்கள் தான் காய்களைப் பிரசவிப்போம். கிட்டத்தட்ட 2-4 சென்றி மீற்றர்களில் எம் காய்களின் அளவிருக்கும். மார்ச் – ஏப்ரல் மாதங்களில் பூப்பூத்து, மே – யூன் மாதங்களில் கனிகளைத் தருவோம். அது எமது பரம்பரை விருத்தியைப் பேணுவதற்கானதாக இருக்கும். அந்தக் கனிக்குள் ஒரே ஒரு விதையிருக்கும். அது விதையாகி விழும் நிலத்தில் முளைக்க வாய்ப்பிருந்தால் முளைத்து எம் வம்சம் பெருக்கும். எனவே தான் அதனை என் பிள்ளை என்கின்றேன். என் பிள்ளைகள் சாப்பிடப்படும்போது நல்ல இனிப்பாக இருப்பார்களாம். சாப்பிடுபவர்கள் எமக்குக் கீழ் இருந்து கதைக்கும் போது சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். பிள்ளைகளின் இள இரத்தம் பால் நிறமானவை. ஒட்டும் தன்மை கொண்டது. சாப்பிடும்போது உதடுகள் ஒட்டிக்கொள்ளும். என்ன செய்ய? எம்மை அழிப்பவர்க்கு எம்மால் காட்டக் கூடிய ஒரே ஒரு எதிர்ப்பு அது மட்டும்தான்.
நீங்கள் உலகத்தில் எங்கெல்லாம் பரந்து வாழ்கின்றீர்கள்?
இப்பொழுது நீங்கள் பார்ப்பது போல இந்த நாட்டின் (இலங்கையை குறிப்பிடுகின்றார்) வடக்கு – கிழக்கு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் அதிகமாக எம் இனத்தவர்கள் வாழ்கின்றனர். இதைவிட இந்தியா குறிப்பாகத் தமிழகம், வங்காளதேசம், தாய்லாந்து, மியன்மார், கம்போடியா, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றோம். இப்படிப் பல நாடுகளில் வாழ்ந்தாலும் நாம் வெள்ளைக்காரர் வருகைக்குப் பின்னர் நாம் ஒருநாளும் சந்தோசமாக இருந்ததில்லை.
ஏன் அப்படிச் சொல்கின்றீர்கள்?
பிரித்தானியர்கள் எனப்பட்ட வெள்ளைக் காரர்கள் இலங்கைக்கு வர முதல் இங்கு வாழ்ந்த மக்கள் எமக்கு நன்மையே புரிந்தனர். எம்மை வெட்டவில்லை. நாம் அவர்களுக்குப் பாதுகாப்பாகவும் உதவியாகவும் இருந்தோம். திடீரென இந்த நாட்டுக்குள் நுழைந்த வெள்ளையர்கள் எமது பலத்தைக் கண்டுபிடித்து எம்மை பாலம் கட்டப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அந்தக் காலத்தில் அவர்களால் அமைக்கப்பட்ட தொங்குப் பாலங்களுக்கு வைரமான எமது தேகம் தேவைப்பட்டது. எம்மோடு எம் சகோதர இனமான முதிரைகளையும் பயன்படுத்தினர். என் பாட்டனார்கள் பல லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். எம் சிறப்பைப் பார்த்து வெள்ளைக்கார அதிகாரிகள் எம்மை  செல்லப் பெயரிட்டு அழைத்தனர். அவர்களால் தொடக்கி வைத்த அழிவுப் பயணம் இன்றும் எம் உயிருக்கு அச்சுறுத்தலாகவே இருக்கின்றது.
இப்போது எந்த வகையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றீர்கள்?
நம் இருப்பு மனிதர்களுக்கு மிக அவசியம் எனப் பல்வேறு விஞ்ஞான விளக்கங்களுடன் மனித மாணவர்களுக்குப் பாடசாலைகளில் கற்பிக்கப் படுகின்றது. ஆனால், அவர்கள் நம்மை அழிப்பதை மட்டும் நிறுத்துவதாகத் தெரியவில்லை. பெருகிக்கொண்டே போகும் தேவைகளுக்காக எம்மை துரத்தி துரத்தி வெட்டுகின்றனர். இப்போது பாருங்கள், இந்த வீதியில் நின்றிருந்த எத்தனை ஆயிரம் எம்மவர்கள் தறிக்கபட்டு தெற்குப் பக்கமாக இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். நானும் இன்னும் சில நாட்களில் தறிக்கப்பட்டுவிடுவேன். இந்த வீதியின் கரையில் நான் நிற்பதால் என்னை அடியோடு கிளப்புவதற்கான திட்டம் போட்டாயிற்று. சில வேளைகளில் நான் முதலும் கடைசியுமாய் உங்களுக்கு வழங்கிய நேர்காணல் வெளிவர முன்பே நான் படுகொலை செய்யப்பட்டு விடுவேன். எனக்காக மரணம் முறிகண்டிப் பிள்ளையாரைக் கடந்து மிக அருகில் வந்து விட்டது. எல்லா மனிதர்களையும் காக்கும் முறிகண்டியானால் கூட என்னை காப்பாற்ற முடியாது என்பதுதான் விந்தை.
கடைசியாக ஒரு கேள்வி, வழமையானது தான். உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் ஒன்றைக் குறிப்பிடுங்களேன்?
இரண்டு சம்பங்களை என் மரணத்தின் பின்பும் மறக்க முடியாது. கடுமையான எரிப்பந்தங்கள் வானிலிருந்து விழுந்து கொண்டிருந்த நாளில் மனிதன் ஒருவன் என் பாதுகாப்பில் பதுங்கிக் கிடந்தான். அவனை நோக்கி வரும் எரிப்பந்தங்களை நான் தாங்கி அவனைக் காப்பாற்றினேன். ஆயினும், அவனின் அவசரம் அவனைக் எரிப்பந்தின் தாக்குதலுக்கு உட்படுத்தியது. மோசமாக் காயப்பட்டான். என் மடியில் கிடந்து அழுது அரற்றினான். என்னால் என்ன செய்ய முடியும். அவன் துடிதுடித்து மரணித்தான்.
பின்னொரு நாள், என்னில் என் பிள்ளைகளை ஆசையாய் சாப்பிட்ட பாடசாலை சிறுவன் ஒருவன் தவறி கீழே விழுந்தான். வலிதாங்காது துடித்தான்; கதறினான். பல மனிதர்கள் வந்து வேடிக்கைப் பார்த்தனர். காப்பாற்றினால் சட்டச் சிக்கல் வருமாம். அம்புலன்ஸ் வரும் வரைக்கும் அனைவரும் காத்திருந்தனர். அம்புலன்ஸ் வர அவனின் உயிரும் என் மடியிலேயே பிரிந்தது. இரண்டு சந்தர்ப்பங்களிலும் நான் மனிதர்களுக்காக கண்ணீர் வடித்திருக்கின்றேன். அதனை எப்போதும் மறக்க முடியாது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செப்டம்பர் 19, 2014

அழுத்தங்களைச் சமாளிக்க சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை

தமிழ் நாட்டின் அழுத்தங்களை சமாளிப்பதற்காக, இறுதி நேரத்தில் தமிழ் நாட்டு மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர்கள் தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்றை சிறிலங்கா அரசாங்கத்துடன் பாரதீயே ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருக்கிறது.
கொழும்பில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாரதீயே ஜனதா கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் சிறிலங்கா வந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் தமிழ் நாட்டுக்கு பொறுப்பாக இருக்கும் முரளிதர் ராவோ  ஒருவர்.
இதற்கு எதிராக தமிழ் நாட்டில் தற்போது எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
இதனை சமாளிப்பதற்காக இறுதி நேரத்தில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சருக்கும், முரளிதரராவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி அதனை இந்தியாவில் பிரபல்யப்படுத்தி வருகிறது.
இது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>