இலங்கை! தனது தொழில் நியமனத்தில் காட்டப்படும் பாரபட்சம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு, தனக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு கோரி – பெண்ணொருவர் ஜனதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழுள்ள பாலமுனை நூலகத்தில் கடமையாற்றும் எஸ்.நபீஸதுல் மிஸ்றியா எனும் பெண்ணொருவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளார்.
தனக்கு வழங்க வேண்டிய நியமனத்தினை, தன்னை விடவும் குறைந்த தகைமையுடைய ஒருவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, குறித்த பெண் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழுள்ள பாலமுனை நூலகத்தில் மேற்படி பெண் 14 வருடங்களுக்கும் மேலாக சமயாசமய அடிப்படையில் நூலக உதவியாளராக கடடிமையாற்றி வருகின்றார். இந்நிலையில், தன்னை விட அனுபவமும் தொழில் தகைமையும் குறைந்த நபரொருவருக்கு – தான் வகித்து வரும் பதவியை நிரந்தரமாக வழங்குவதற்கான நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படுவதாகவும் தனது கடிதத்தில் விபரித்துள்ளார்.
எனவே, மேற்படி பாரபட்சமான நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தி – குறித்த பதவியை தனக்கு நிரந்தரமாக வழங்குமாறு – ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் – சம்பந்தப்பட்ட பெண் வேண்டியுள்ளார்.
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிருவாகத்தின் கீழுள்ள பாலமுனை நூலகத்தில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக குறித்த பெண் – சமயாசமய அடிப்படையில் நூலக உதவியாளருக்கான கடமைகளை மேற்கொண்டு வருகின்றார்.
நூலக உதவியாளருக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும்போது, இந்தப் பெண்ணுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென பிரதேச சபையினரால் பல்வேறு தடவைகளில் உறுதி மொழிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இந்த நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அட்டவணைப்படுத்தப்படாத பதவிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, தகைமையுடையவர்களிடமிருந்து கடந்த ஜூன் மாதம் விண்ணங்கள் கோரப்பட்டிருந்தன.
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நிலவும் மின் தொழிலாளி, நூலக பரிசாரகர் (உதவியாளர்), களத் தொழிலாளி மற்றும் சுகாதாரத் தொழிலாளிகளுக்கான பதவிகளுக்கு நிரந்தமாக ஆட்களை நியமிக்கும் வகையில் மேற்படி விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நூலக பரிசாரகர்களுக்கான (உதவியாளர்) 02 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதற்கிணங்க, பாலமுனை நூலகத்தில் சமயாசமய அடிப்படையில் 14 வருடங்களுக்கும் மேலாக நூலக உதவியாளராய் கடமையாற்றிவரும் மேற்படி எஸ்.நபீஸதுல் மிஸ்றியா என்பவரும் நூலக பரிசாரகர் (உதவியாளர்) பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 17ஆம் திகதியன்று அட்டாளைச்சேனை பிரதேசசபைக் காரியாலயத்தில் நூலக பரிசாரகர் (உதவியாளர்) பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகப் பரீட்டை நடைபெற்றது.
தற்போது – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நிலவும் நூலக பரிசாரகர் (உதவியாளர்) பதவிக்கான இரண்டு வெற்றிடங்களுக்கும் நிரந்தரமாக ஆட்களை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
ஆயினும், நூலக உதவியாளர் பதவி வழங்கப்படவுள்ளோருக்கான பட்டியலில் தனது பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மிஸ்றியா தெரிவிக்கின்றார். இந்த நிலையில், மிஸ்றியாவை விட – தகைமையிலும், தொழில் அனுபவத்திலும் குறைந்த நபரொருவருக்கு நூலக உதவியாளர் பதவியினை வழங்குவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மிஸ்றியா குற்றம்சாட்டுகின்றார்.
இவ்வாறானதொரு நிலையிலேயே, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மேற்படி பெண் தொழிலாழியான மிஸ்றியா – தனக்கு நீதி கோரி, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆறு பிள்ளைகளின் தாயாரான மேற்படி பெண், தற்போது சமயாசமய அடிப்படையில் நூலக உதவியாளராகக் கடமையாற்றும் வருமானத்தின் மூலமே, அவருடைய குடும்பத்தினைக் கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கிழக்கு மாகாணசபையில் முக்கிய பதவியொன்றிலுள்ள நபரொருவரின் உறவு முறையானவரை – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நூலக பரிசாரகர் (உதவியாளர்) பதவிக்கு நியமிப்பதற்காகவே – மேற்படி மிஸ்றியா எனும் பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நிலவும் நூலக பரிசாரகர் (உதவியாளர்) பதவிக்கு நிரந்தரமாக ஆட்களை நியமிக்கும் நடவடிக்கையில், கிழக்கு மாகாணசபையின் மேற்படி முக்கிய பதவியிலுள்ள நபர் – தனது விருப்பு வெறுப்புக்கேற்ப ஆதிக்கம் செலுத்துவதால், இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கும் – ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் பிரதிகளை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் அனுப்பி வைத்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக