18

siruppiddy

பிப்ரவரி 23, 2014

உக்ரைன் ஜனாதிபதி தலைநகரை விட்டு தப்பி ஓட்டம்

உக்ரைனில் போராட்டக்காரர்களின் ஆதிக்கம் அதிகமாகி வருவதால், ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் தலைநகரை விட்டு தப்பிஓடி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனில் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச்சுக்கு எதிரான மக்களின் போராட்டம் வன்முறை சம்பவங்களாக மாறி வருகிறது.

சிலநாட்களுக்கு முன் தலைநகர் கீவில் உள்ள சதுக்கத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
அப்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதில் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 75 பேர் பலியாகியுள்ளனர், நகரின் பல கட்டிடங்கள் தீக்கரையாக்கப்பட்டன.

போராட்டக்காரர்களை ஒடுக்க உக்ரைன் அரசு கையாளும் முறை குறித்து உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்தன.
பொருளாதார தடைகள் விதிக்க போவதாக ஐரோப்பிய யூனியனும், உக்ரைனுடனான நல்லுறவை துண்டித்துக் கொள்ள போவதாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து போராட்டக்காரர்களுடன் சமாதானமாக போக விரும்புவதாக கூறிய ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைத்தார்.
அந்த குழுவின் ஆலோசனையின்படி, நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த விக்டர், ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதாக நாடாளுமன்றம் அறிவித்தது.
வரும் மே மாதம் 25ம் திகதி புதிய ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி வசிக்கும் மாளிகை உட்பட தலைநகர் கீவ் தங்களின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாகவும், ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் கீவ் நகரை விட்டு வெளியேறிவிட்டதாகவும் போராட்டக்காரர்கள் நேற்று அறிவித்துள்ளனர்.
மேலும் சிறை வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான யூலியா டைமோஷென்கோ நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக