18

siruppiddy

மே 18, 2014

பாலச்சந்திரனை கொல்லாமல் விட்டிருக்கலாம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை படுகொலை செய்யாமல் விட்டிருக்கலாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப் போரின் பின்னர் உயிருடன் பிடிபட்ட மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை இராணுவத்தினர் கொடூரமான முறையில் கொன்றொழித்தனர்.

இதே போன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனும் மனம் பதைபதைக்கும் வண்ணம் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருந்தான்.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் போர் முனையுடன் நேரடித் தொடர்பில் இருந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவே இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்.

அது மாத்திரமன்றி உயிருடன் பிடிபட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் தொடர்பில் பிடிபட்டது முதல் கொல்லப்பட்டது வரை ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தனக்கு அனுப்பும்படியாகவும் அவர் ராணுவத்தினருக்கு கட்டளையிட்டிருந்தார்.

எந்தவொரு விடுதலைப் புலி உறுப்பினர் மீதும் இராணுவத்தினர் பரிதாபம் கொண்டு அவர்களை உயிருடன் விட்டு வைத்து விடக் கூடாது என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இப்படியான நிலையில் முக்கியமான விடுதலைப் புலி உறுப்பினர்களின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. தங்களது எதிரிகள் அழிந்த மகிழ்ச்சியில் அவரும் அதனை ஆர்வத்துடன் செவிமடுத்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் யுத்த வெற்றியை அடுத்து புத்தரின் ஆசீர்வாதம் தேடி அவர் பெல்லன்வில ரஜமஹா விகாரைக்குச் சென்றிருந்த சமயத்தில் பாலச்சந்திரன் படுகொலை குறித்து அவருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவல் கல்நெஞ்சம் கொண்ட அவரையும் சிறிது கலங்க வைத்தது.

“பாவம், சின்னப் பையன்..உயிருடன் விட்டிருக்கலாம்” அவர் தன் பக்கத்தில் நின்றிருந்த ஜனாதிபதி செயலக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரிடம் முணுமுணுத்தார்.

இந்தத் தகவல் கிடைத்தவுடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்தி சேகரிப்பிற்காக அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்களை ஜனாதிபதியை விட்டு தூரப்படுத்தியிருந்த காரணத்தால் ஜனாதிபதியின் முணுமுணுப்பு அவர்களின் காதில் விழவில்லை.

எனினும் பச்சிளம் பாலகன் படுகொலை விடயத்தில் கொடூர அரக்க குணத்துடன் செயற்பட்ட தனது தம்பியை (பாதுகாப்புச் செயலாளரை) அவர் கண்டிக்கவில்லை. அதற்கான துணிவு இன்றளவும் அவருக்கு இல்லை. பாதுகாப்பு செயலாளர் முன்னின்று பெற்றுக் கொடுத்த யுத்த வெற்றிதான் மஹிந்த ராஜபக்ஷவை இரண்டாம் முறையாகவும் ஜனாதிபதி அதிகாரத்தில் அமர்த்தியுள்ளதே அதற்கான காரணம்.

இவ்வாறான வெளிவராத எத்தனையோ ரகசியங்கள் காரணமாகவே யுத்த களத்தில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு ஜனாதிபதி தயக்கம் காட்டுகின்றார். அந்த விசாரணைகள் தனது தம்பியின் கழுத்தில் கயிற்றை இறுக்கி விடும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

ஆனாலும் காலம் என்றைக்கும் ஒரே மாதிரியாக இருக்காதல்லவா?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக