18

siruppiddy

ஜூன் 21, 2014

இலங்கைக்கு ஐ.நா விசேட பிரதிநிதிகளைஉடன் அனுப்பி வையுங்கள்!

ina0
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஒஸ்கார் பெர்ணன்டஸ் டெரன்கோ, இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப்பிரதிநிதி சபினய் நந்தி மற்றும் தூதுக்குழுவினர் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நேற்று மாலை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார். ஏறத்தாழ ஒன்றேகால் மணிநேரமாக நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுது அமைச்சர் ஹக்கீம் கூறியவை வருமாறு:
அண்மையில் அளுத்கமை, தர்கா நகர், பேருவளை, சீனன்கோட்டை மற்றும் அண்டியுள்ள பிரதேசங்களில் நடைபெற்ற இனவாத வன்செயல்களின் பின்னணியில் அமைந்த பல விடயங்களைத் தெரிவித்திருக்கிறேன். மக்களை ஆத்திரமூட்டி, வன்செயல்களை தூண்டிய இனவாத அமைப்புகளின் செயல்பாடுகளை பொறுத்தவரை அவற்றை மேற்கொண்டோருக்கெதிராக குறிப்பாக பொலிஸாரும்,அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியமையை பற்றி சுட்டிக்காட்டி, இவ்வாறான வன்செயல் புரிவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் பின்புலம் பற்றி விளக்கம் அளித்தேன்.
மற்ற சமூகங்களை இழிவுபடுத்தி மோசமான வார்த்தை பிரயோகங்களை கையாண்டு, வெறுக்கத்தக்க பேச்சுகளை பேசுவோரை தண்டனைக்குரிய குற்றத்தின்கீழ் கைது செய்வது தொடர்பில் ஏற்கனவே தண்டனைச் சட்டக் கோவையில் திருத்தங்களை கொண்டு வருவதற்காக நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் சட்டமாக்கப்படவில்லை என்ற குறைபாடு நிவர்த்திக்கப்பட வேண்டும் என்பதை கூறியதோடுமட்டுமல்லாமல், பயங்கரவாத தடைச்சட்டத்திலும் இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே இருக்கின்ற பின்னணியில், அரசு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் இன்று குறைந்து வருகின்ற அரசாங்கத்தின் மீதான நம்பகத் தன்மையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான சட்ட மூலத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தயாராகி வருகின்றமை பற்றியும் கூறப்பட்டது. அளுத்கமை, பேருவளை சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதில் பொலிஸார் தொடர்ந்தும் அசமந்தப் போக்கையே கடைபிடிப்பார்கள் என்ற தோற்றபாடு இருக்குமானால், நாங்கள் தனிப்பட்ட விதத்தில் அதற்கான முறைப்பாடுகளை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு செல்வதற்கான ஆயத்தங்களையும் செய்து வருகின்றோம் என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறோம். தொடர்ந்தும் நடந்து வருகின்ற சம்பவங்கள் இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கு சம்பந்தமான விடயத்தில் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற விடயத்தில் காணப்படும் தாமதங்கள் அவதானத்தை மீண்டும் திருப்பியுள்ளன.
மாவனல்லை நீதவான் நீதிமன்றம் இவ்வாறான இனவாத அமைப்புகளுக்கு கூட்டம் நடத்த தடை உத்தரவு விடுத்திருந்த பின்னணியில், அந்நீதிமன்றத்தில் காவல் புரிந்த பொலிஸார் மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பது மிகவும் பாரதூரமானது. மிகக் குரூரமான முறையில் அவர்களது அங்க லட்சணம் சிதைக்கப்பட்டிருக்கிறது. இது சட்டதுறைக்கு ஒரு சவாலாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சட்டத்தின் ஆட்சியை கேள்விகுறியாக்கியிருக்கிறது. இவற்றுக்கு தூண்டுகோளாக அமைந்தவர்கள் கைது செய்யப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட வேண்டும். யாருக்கும் தெரியாமல் இரவு வேளைகளில் இவ்வாறான படுமோசமான பாதகச் செயல்களை செய்பவர்களின் பின்னணியில் இந்த விடயத்தில் மோசமான வார்த்தைகளை பேசியவர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மை வெளிவர வேண்டும்.
எனவே இவ்வாறான செயல்கள் இந்த அரசாங்கம் எந்தத் தரப்பினருக்கும் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று ஜனாதிபதி அறிவித்திருக்கும் பின்னணியில், அது வெறும் வார்த்தைகளோடு மட்டும் நின்றுவிடாமல், நடைமுறையில் காட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம்கள் மத்தியில் இருக்கிறது. இது குறித்த நடவடிக்கைகள் தாமதமடையுமானால், நீதியமைச்சர் என்ற முறையில் என்மீதுள்ள நம்பிக்கையும் பாதிப்படையும் என்பதையும் சொல்லியிருக்கிறேன்.
வட்டரக்க விஜித தேரர் என்பவர் பொதுபல சேனா அமைப்புக்கெதிராகவும், அதன் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகவும் பகிரங்கமாக பேசி வந்த நிலையில், ஏற்கனவே அந்தத் தேரரால் அச்சுறுத்தப்பட்டு பின்னர் இப்பொழுது படுகாயங்களுடன் பாதையோரத்தில் புதருக்குள் வீசியெறியப்பட்டிருந்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதன் பின்புலமும் தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என கூறியிருக்கிறேன்.
அளுத்கமை சம்பவங்கள் தொடர்பில் அடையாளம் காணப்பட்ட சூத்திரதாரிகள் குறித்து மக்கள் மிகவும் அவதானமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கூறியிருக்கிறேன். என்னிடத்தில் ஐ.நா. உயரதிகாரிகளினால் பல்வேறு கோணங்களில் கேள்விகள் தொடுக்கப்பட்ட பொழுது, விடயங்களை மிக தெளிவாக அவர்களது கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறேன். ஏற்கனவே நாங்கள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு இவ்வாறான முன்னைய சம்பவங்கள் தொடர்பான அறிக்கையொன்றை சமர்பித்தமை விமர்சனத்துக்கு உரியதாக இருந்தது. ஆனால், அவ்வறிக்கையில் நாம் குறிப்பிட்டிருந்த விடயங்கள் தற்பொழுது மிக மோசமான வன்முறைகளுக்கு உரிய அம்சங்களாக மாறியிருக்கின்றன என்பதையும் அவர்களது கவனத்துக்குக் கொண்டு வந்தேன். குற்றவாளிகளை நீதிமன்றங்களின் முன் கொண்டுவந்து உரிய தண்டனை வழங்கும் விடயத்தில் அரசாங்கம் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் என்னைச் சந்தித்த உயர் அதிகாரியிடம் வலியுறுத்தியிருக்கிறேன்.
அத்துடன் ஐ.நா. சபையின் சமய நல்லிணக்கம் சம்பந்தமான மற்றும் சிறுபான்மையினர் சம்பந்தமான விசேட பிரதிநிதிகள் இருவர் இங்கு வருவதற்கு அவசரமான ஏற்பாடுகளை செய்யுமாறும் கேட்டிருக்கிறேன் இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹஸன் அலி எம்.பி., கட்சியின் பிரதித்தலைவரும், கிழக்கு மாகாண அமைச்சருமான நஸீர் அஹமட், கல்முனை மாநகரசபை மேயர் நிஸாம் காரியப்பர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், அமைச்சரின் சட்ட ஆலோசகர். எம்.எச்.எம். சல்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.






மற்றைய செய்திகள்
ina ina0
மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக