18

siruppiddy

அக்டோபர் 27, 2014

கைதுசெய்யப்பட்ட நபரின் விடயத்தில் ஐ.நா தலையிட வேண்டும்

ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிப்பதற்கான படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள 57 வயதுடைய சின்னத்தம்பி கிருஷ்ணராஜாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தலையீடு செய்து சாட்சிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கிளிநொச்சி, சிவபுரம், இராஞ்சி பகுதியைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி கிருஷ்ணராஜா ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவிற்கு சாட்சியமளிக்கும் படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்றைய தினம் கிளிநொச்சியில் வைத்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிசாரினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
குறித்த கைது தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், “கிளிநொச்சி, சிவபுரம், இராஞ்சி பகுதியைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி கிருஷ்ணராஜா யுத்தத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட ஒரு நபராவார். இவருடைய பிள்ளைகளில் பெண் பிள்ளை ஒருவர் இறுதி யுத்தத்தின்போது ஷெல் வீச்சுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.
அவ்வாறான நிலையில் அவர் விசாரணைக்குழுவிற்கு முன்னால் சாட்சியமளிக்கும் தகமையைக் கொண்டிருக்கின்றார்.
அத்தகையை ஒருவரை சாட்சியமளிக்கும் படிவங்களை வைத்திருந்தமைக்காக எவ்வாறு கைதுசெய்யமுடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை இதற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட காணாமல்போனோர் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது அந்தக்குழு விரிவுபடுத்தப்பட்டு போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது.
எனவே இவ்வாறான குழுக்களை அமைத்து அதற்காக சாட்சியங்களைப் பெற்றுவரும் அரசு சர்வதேச விசாரணைக்குழுவின் முன் சாட்சியமளிப்பதை தடுப்பது ஏன்? ஏன்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்த விடயத்தில் தலையீடு செய்து கைதுசெய்யப்பட்ட பொதுமகனை உடன் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த நபரின் கைது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடமும் தாங்கள் தகவல் வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், இதன் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் இவ்விடயத்தில் விரைந்து செயற்பட்டு கைதுசெய்யப்பட்ட நபரை விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்துவதுடன், சாட்சியங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக