இலங்கையில் 2012-ம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களின் போது கொல்லப்பட்ட மரியதாஸ் தில்ருக்ஷன் எனும் கைதியின் மரணம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மரியதாஸ் தில்ருக்ஷனின் பெற்றோர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை விசாரிப்பதற்கு, பிரியசாத் டெப் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு அனுமதி அளித்தது.
மனு அழைக்கப்பட்ட போது ஆட்சேபனைகளை முன்வைத்த அரசதரப்பு வழக்குரைஞர், சிறைச்சாலை கலவரத்தை முறியடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதே குறித்த கைதி உயிரிழந்ததாக கூறினார்.
இந்த நடவடிக்கையின் போது எந்தவொரு கைதியும் இலக்கு வைத்துத் தாக்கப்படவில்லை என்றும் பாதுகாப்புப் படையினர் சட்டத்திற்கு அப்பால் சென்று தமது அதிகாரத்தைப் பிரயோகிக்கவில்லை என்றும் அரசதரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.
எனவே, இந்த மரணம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூற முடியாது என்றும் அதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அரசதரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், இந்த வாதத்தை மறுத்துரைத்த மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர், அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் சட்டத்துக்கு அப்பால் சென்று தங்களின் அதிகாரத்தைப் பிரயோகித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த, அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் தலைவர் வழக்குரைஞர் நாமல் ராஜபக்ஷ, இந்த சிறை மோதலின்போது பொலிஸ் அதிரடிப் படையினர் பயன்படுத்தப்பட்டதாகவும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
கலவரம் ஒன்றை முறியடிக்க முன்னர் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் எதுவும் இதன்போது பின்பற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
குறித்த கைதி, சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் முடிவுக்கு வந்த பின்னர் கொல்லப்பட்டதாகவே தமக்கு தகவல் கிடைத்துள்ளதென்றும் வழக்குரைஞர் நாமல் ராஜபக்ஷ கூறினார்.
மனுதாரர்கள் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை தொடர்ந்து விசாரிப்பதற்கு அனுமதி அளித்தனர்.
இதன்படி, வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 5-ம் திகதி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அன்றைய தினம், இந்த மனு தொடர்பான விளக்கங்களை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நிமலரூபன் வழக்கு தள்ளுபடி
இதேவேளை, இந்த சம்பவத்தின் போது கொல்லப்பட்ட கணேசன் நிமலருபன் என்ற கைதியின் மரணம் தொடர்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுவொன்றை விசாரணையின்றி தள்ளுபடி செய்வதற்கு உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்மானித்தது.
இந்தத் தீர்ப்பை வழங்கிய தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ், கலவரமொன்றை அடக்கும்போது இவ்வாறான உயிரிழப்புக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதன்போது மனித உரிமைகள் மீறப்பட மாட்டாது என்றும் தலைமை நீதியரசர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக