18

siruppiddy

ஜனவரி 07, 2014

கடவுள்களால் துரத்தப்படும் சாத்தான்கள்

 ஈழத் தமிழினத்தின்மீதான இன அழிப்புக் குற்றவாளிகள் ஓட, ஓட விரட்டப்படுகின்றார்கள். ஈழப் போரின் இறுதிக் கணம்வரை கொல்லப்பட்டவர்களால், இந்த இன அழிப்புக்குக் காரணமானவர்கள் நிம்மதி இழந்து தவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

முதலாவது நேரடிக் குற்றவாளிகளான ராஜபக்சே சகோதரர்கள் இன அழிப்புப் போர்க் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கால்படாத நாடுகளுக்கெல்லாம் காவடி எடுத்துக்கொண்டு செல்கின்றார்கள். தாங்கள் தப்பிக் கொள்வதற்காக, என்ன விலை கொடுக்கவும், எதை இழக்கவும் தயாரான இவர்கள், இந்த நிலையிலும் தங்களது பௌத்த – சிங்கள இனவாத மேலாதிக்கத்தை இலங்கைத் தீவில் இழந்துவிடத் தயாராக இல்லை.

தமிழின அழிப்பின் கூட்டுக் குற்றவாளிகளான இந்திய மத்திய காங்கிரஸ் ஆட்சியினர் என்றுமில்லாத வகையில் மிக மோசமான அரசியல் சரிவுக்குட்பட்டவர்களாகத் தவித்து நிற்கிறார்கள். இவர்களை, இவர்கள் செய்த ஊழல் மட்டுமல்ல, ஈழத் தமிழர்கள்மீதான இன அழிப்புக்குத் துணை நின்ற குற்றச்சாட்டும் சேர்ந்தே துரத்துகின்றது. தமிழகத்தில் வேண்டப்படாத கட்சியாக காங்கிரஸ் கட்சி தீண்டுவாரில்லாமல் தனிமைப்பட்டுப் பொயுள்ளது.

ஈழத் தமிழர்கள்மீது சிகழ்த்தப்பட்ட இன அழிப்பை தடுத்து நிறுத்தும் வல்லமை இருந்தும், தனது குடும்ப வரவுகளுக்காக நடைபெற்ற இன அழிப்புக் கொடூரத்தைத் தமிழகமே அறிந்து கொள்ளவிடாமல் ஊடக இருட்டடிப்பு மூலம் காங்கிரஸ் பங்காளிகளைக் காப்பாற்றியி கொடுமைக்காக தமிழக மக்களால் தண்டிக்கப்பட்ட பிரமுகராகிவிட்டார் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி. தமிழர்களைக் காப்பாற்ற கட்டுமரமாக மிதப்பேன் என்றவர், ஒதிய மரமாக வீழ்ந்து கிடக்கின்றார்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் ஈழத் தமிழர்களுக்கு முகவரி இல்லை. முன்நின்று வழிகாட்ட ஒரு சாரதியும் கிடையாது. ஆனாலும், ஈழத்தை நோக்கியே உலகத்தின் கண்கள் பார்வையைத் திருப்புகின்றன. புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அத்தனை குழப்பங்கள் உருவாக்கப்பட்டாலும், தமிழ்த் தேசியத்திற்கான அவர்களது பணி தொடர்ந்து செல்வதன் அற்புதங்களை வியந்து பார்க்காதவர்கள் இல்லை. திக்குகள் பார்த்துத் திரும்பி நிற்கும் நவக்கிரகங்களும், கார்த்திகை 27 அன்று கனத்த மனங்களுடன் விளக்கேற்ற மறுப்பதில்லை.

தேசத்தின்மீது இடி விழுந்தபோதும், தேசமே எரிந்து சாம்பலானபோதும் தேசியத் தலைவர் அவர்களது வார்த்தைகளுடன் உலகத் தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்காகப் போர் தொடுக்கின்றாhகள். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபாகரன் நாமம் நிறைந்து போயுள்ளது. கண்கள் காணத் தவித்தாலும், பிரபாகரன் என்ற அந்த உத்தமத் தமிழனே எல்லாத் தமிழர்களுக்கும் மூலவராகத் திகழும் அதிசயம், அமிசயமாகவே பார்க்கப்படுகின்றது.

சிங்கள ஆட்சியாளர்கள் நடாத்திய சாட்சியமற்ற போரின் அத்தனை கொடூரங்களும் எப்படிச் சாட்சியங்களாகியது. இறுதி யுத்தத்தில் வீழ்ந்த தமிழர்களது அத்தனை எச்சங்களும் சிங்களப் படைகளால் தேடி அழிக்கப்பட்ட பின்னரும், மனிதப் புதைகுழிகள் தாங்களாகவே சாட்சியமாகியது எப்படி? கல்லறைகளுமற்ற சவக் கிடங்குகள் எப்படித் தாமாகத் திறந்து கொண்டன?

கடவுள்கள் சாத்தான்களைத் துரத்த ஆரம்பித்துவிட்டார்கள். சாத்தான்கள் தங்களை அவர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்!

இப்போது மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன், ‘விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் என்றொரு காலம் தமிழர்களுக்கு இல்லை’ தேசியத் தலைவர் சொன்னது எவ்வளவு புனிதமான உண்மை என்பதை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக