18

siruppiddy

ஜனவரி 31, 2014

ஈழத் தமிழர்களுக்கு தீராப்பழியை இந்தியா செய்துவிடக் கூடாது

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் விவாதிக்கப்படவுள்ளது.இந்நிலையில் தீர்மானத்தைத் தோற்கடிக்கும் முயற்சியில் இலங்கை அரசு கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கை அரச பிரதிநிதிகள் உலக நாடுகளுக்குச் சென்று தமக்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் விநயமாக வேண்டி நிற்கின்றனர். அதேநேரம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் இலங்கையில் நடந்த இன அழிப்புத் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என வலியுறுத்தி வருகின்றன.
நிலைமை இதுவாக இருக்க, இலங்கைக்கு எதிராக-மூன்றாவது தடவையாக ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? என்பது கடுமையான அவதானத்துக்கு உட்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்தமுறை இலங்கைக்கு எதிராக ஐ.நா வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்த போதிலும் அந்த ஆதரவிற்காக, தமிழகம் முழுவதும் படாப்பாடுபட்டமை மறப்பதற்குரியதல்ல. ஐ.நாவில் வைத்து இலங்கையைக் காப்பாற்ற வேண்டும் என்பதே இந்தியாவின் முடிவாக இருந்தது.

எனினும் தமிழக மக்களின் கொந்தளிப்பு, தமிழக காங்கிரஸ் கட்சியின் விடாப்பிடி, பொதுத் தேர்தலில் நெருங்குநிலை என்பன காரணமாக இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்திருந்தது.
இந்தியாவின் இந்த ஆதரிப்பு இலங்கை அரசுக்கு கடுப்பினை ஏற்படுத்தவில்லை என்ப தற்குள், இந்திய மத்திய அரசின் ஆறுதல் வார்த்தைகள் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.ஐ.நா சபையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து விட்டு, அதன் பின்னர் இலங்கையை ஆசுவாசப்படுத்துவதென்பது சாதாரண விடயம் அல்ல.

இருந்தும் ஆசுவாசப்படுத்தல் நடந்துள்ளதெனில், இந்தியா ஐ.நாவில் அளித்த வாக்கை விட, ஒருபடி உயர்வான உதவியை செய்வதாக இலங்கை அரசுக்கு உறுதியளித்திருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. ஆக, இப்போது வெளியுறவு அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் இந்தியாவுக்குச் சென்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நிச்சயம் கேட்டிருப்பார்.

இதற்கு சர்மான் குர்ஷித் சிரித்தபடி, இலங்கையை இந்தியா எப்போதாவது கைவிட்டது உண்டா? என்று மறுத்தான் போட்டிருப்பார்.
நிலைமை இதுவாயினும் ஈழத் தமிழர்களின் இன்றைய அவலநிலைக்கு இந்திய மத்திய அரசும் மூலகாரணம் என்பதால், தமிழ் மக்களின் அவலநிலைக்கு ஒரு நிரந்தரமான தீர்மானம் கிடைக்க இந்தியா உதவுவது அதன் தார்மீகக் கடமை என்பதை ஒரு போதும் மறந்து விடலாகாது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக