18

siruppiddy

மார்ச் 23, 2014

புலி இல்லை என்று கூறும் நீங்கள் ஏன் சோதனை செய்கிறீர்கள்

யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் காக்கைதீவுச் சந்திப்பகுதியில் இன்று பகல் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனால் மக்கள் பல அசௌகரியங்களை சந்தித்திருந்தனர்.
எனினும் அந்தப் பகுதியால் விஜயம் மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் இராணுவத்தினரும் சோதனைகளை நிறுத்தி அவ்விடத்தையும் விட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் உதயன் இணையத்தள செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்ட போது,

குறித்த வீதிச்சோதனை நடவடிக்கைகள்  இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது காக்கைதீவுச் சந்திப் பகுதியால் நான் வந்து கொண்டிருந்தேன். 
அப்போது குறித்த பகுதியில் 15 மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் 20 மோட்டார் சைக்கிள்கள் வீதியில் நிறுத்தப்பட்டிருந்ததுடன் இராணுவமும் பொலிஸாரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததைக் கண்டேன்.

உடனடியாக இறங்கி அவ்விடத்திற்கு சென்று சம்பவம் தொடர்பில் கேட்டு அறிந்து  கொண்டதுடன் இராணுவத்தினருடன் தற்கத்திலும் ஈடுபட்டேன்.
அத்துடன் தற்போது சமாதான சூழல் புலியை அழித்து விட்டோம் என்று கூறிவரும் நீங்கள்  இவ்வாறான நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்கிறீர்கள்? இதனால் மக்கள் சுதந்திரமாக தமது வேலைகளைச் செய்யமுடியாது அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என்றும் அவர்களுக்கு நான் தெரிவித்தேன்.

இருப்பினும் தாம் பொலிஸாருக்கு உதவுவதாகவும் வாகன அனுமதிப்பத்திரம், வானக காப்புறுதி என்பனவே சோதனையிடப்படுகின்றது என்றனர்.
எனினும் அவற்றைப் பார்ப்பதற்கு பொலிஸார் உள்ளனர் இதற்கு இராணுவம் சம்பந்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என அவர்களுக்கு தெரிவித்தேன்.

அத்துடன் இவ்வாறான செயற்பாட்டினால் மருத்துவ மனைக்கு வந்தவர்கள் கூட ஒரு சுற்றி வளைப்பில் மாட்டிக் கொண்டது போல காத்து நிற்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியிருந்தேன்.
அதனையடுத்து அவர்கள்  குறித்த இடத்தை விட்டு அகன்று சென்றனர். மேலும்  இராணுவத்தின் இவ்வாறான செயற்பாடானது யாழ். மாவட்ட மக்கள் மத்தியில் ஒரு பதட்ட நிலையினை ஏற்படுத்துவதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக