ஆயுதப் போராட்டங்களை முன்னெடுக்கும் தேசிய விடுதலை இயக்கங்கள் மீது அரசுகள் பயங்கரவாத முத்திரை குத்துவதும், தமது எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை பயங்கரவாதத்தை ஒழிக்கும் உன்னத செயற்பாடுகளாகச் சித்தரிப்பதும் இன்றைய உலகில் புதிய விடயம் அல்லவே.
மேலைத்தேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கீழைத்தேய நாடுகளில் எழுச்சி கொண்ட தேசிய விடுதலைக் கிளர்ச்சிகளை மையப்படுத்தி தொடங்கி வைக்கப்பட்ட இப் பயங்கரவாத முத்திரை குத்தும் படலம், பின்னர் அயர்லாந்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளுக்கும், கிழக்கு ஐரோப்பாவில் மார்க்சிய பொதுவுடமைத்துவப் புரட்சியில் ஈடுபட்ட புரட்சியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
ஆனாலும் பயங்கரவாதம் என்ற சொற்பதம் ஆயுத எதிர்ப்பியக்கங்களை மையப்படுத்தித் தோற்றம் பெற்ற ஒன்றன்று. அடிப்படையில் அதன் ஆணிவேர் அரசுகளுக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றது. பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் கத்தோலிக்கர்களுக்கும், புரட்டஸ்தாந்த் மதப்பிரிவினருக்கும் இடையில் நடைபெற்ற அதிகாரப் போட்டியின் உச்ச கட்டமாக வெளிவந்த அரசியல் கருத்துருவாக்கங்களில் இச்சொற்பதம் கையாளப்பட்டது.
அதிலும் அக்காலப் பகுதியில் புரட்டஸ்தாந்த் மதப்பிரிவினரின் அரசியல் சித்தாந்தவாதியும், நவீன தாராண்மை சனநாயகத்தின் பிதாமகனாகக் கருதப்படுபவருமான ஜோன் லொக் அவர்களின் தத்துவார்த்த ஆக்கங்களில் அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் கருத்துக்கள் பொதிந்து கிடப்பதை நாம் காணலாம். தமது இறையாண்மைக்கு உட்பட்ட நிலப்பரப்பில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக பயங்கரவாதத்தை அரசு கையாள்வதில் எவ்வித தவறும் இல்லை என்கின்றார் ஜோன் லொக்.
இதனையத்த கருத்தை பதினெட்டாம் நூற்றாண்டில் முதற்கூறில் பிரெஞ்சு தேசத்தின் பிரசித்தி பெற்ற அரசியல் தத்துவாசிரியராக விளங்கியவரும், தாராண்மை சனநாயகத்தின் மற்றுமொரு மூத்த சித்தாந்தவாதியாகக் கருதப்படுபவருமான மொன்ரெஸ்கியூ அவர்களும் தனது தத்துவார்த்த ஆக்கங்களில் பதிவு செய்திருப்பதைக் காணலாம்.
இவ்வாறு அரசுகளுக்கு உரித்தானதொரு யுக்தியாகப் பழம்பெரும் தாராண்மை சனநாயக சித்தாந்தவாதிகளால் முன்நிலைப்படுத்தப்பட்ட இக்கருத்தியல் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிரெஞ்சு தேசத்தில் நடந்தேறிய புரட்சியைத் தொடர்ந்து செயல்வடிவம் பெற்றது. பதினாறாவது லூயி மன்னனை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டு அரசபீடம் ஏறிய ‘புரட்சியாளர்கள்’ முற்றுமுழுதாக அரச இயந்திரத்தைக் கையாண்டு தமது எதிராளிகள் மீதும், மன்னனின் விசுவாசிகள் என்று கருதப்பட்டோர் மீதும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டார்கள். இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்கள் பலிகொள்ளப்பட்டன.
‘பயங்கரவாத ஆட்சி’ என்று பிற்காலத்தில் வரலாற்றாசிரியர்களாலும், அரசறிவியலாளர்களாலும் விளிக்கப்பட்ட இப்படுகொலைகளே நிறுவனமயப்படுத்தப்பட்ட பயங்கரவாதத்தின் தொடக்கமாக அமைந்தது. இந்த நிறுவனமயப்படுத்தப்பட்ட பயங்கரவாதத்தை பிரெஞ்சு தேசத்தின் அப்போதைய ‘புரட்சிகர’ ஆட்சியாளர்கள் மட்டும் மேற்கொள்ளவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேலைத்தேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக
கீழைத்தேயங்களில் வெடித்த கலகங்கள் - கிளர்ச்சிகள் போன்றவற்றை நசுக்குவதற்கு அப்போதைய ஏகாதிபத்திய ஆட்சியாளர்களால் கையாளப்பட்ட சக்தி மிக்க ஆயுதமாக நிறுவனமயப்படுத்தப்பட்ட பயங்கரவாதம் விளங்கியது.
1848ஆம் ஆண்டு ஈழத்தீவில் பிரித்தானியரின் ஆட்சிக்குட்பட்டிருந்த கண்டி
இராச்சியத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கெதிராக சிங்களவர்களால் தொடங்கப்பட்ட கலகத்தையும், அதன் தொடர்ச்சியாக வெடித்த ஆயுதக் கிளர்ச்சியையும் நசுக்குவதற்கான ஆயுதமாக நிறுவனமயப்படுத்தப்பட்ட பயங்கரவாதத்தை பிரித்தானியாவின் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் கையாண்டார்கள். இதுபற்றி அக்காலப் பகுதியில் பிரித்தானிய
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும் பொழுது கருத்துக்கூறிய இந்தியாவின் வங்காள மாநிலத்திற்கான பிரித்தானியாவின் சட்டவாளர் நாயகம் சார்ஜன்ற் ஸ்பாங்கி, ‘ஒரு அரசு தன்னைப் பாதுகாப்பதற்காக பயங்கரவாத ஆட்சியில் ஈடுபடுவதில் எவ்வித தவறும் இல்லை’ என்று தெரிவித்தார்.
இதேபோன்ற கருத்தை 1865ஆம் ஆண்டு ஜமெய்க்காவில் நடைபெற்ற கறுப்பின மக்களின் கிளர்ச்சியை நசுக்குவதற்கு கையாளப்பட்ட பயங்கரவாத யுக்திகளை நியாயப்படுத்தி பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் ஜமெய்க்காவிற்கான அப்போதைய பிரித்தானிய ஆளுநர் எட்வேர்ட் ஜோன் இயர் அவர்கள் வெளியிட்டார்.
தொடர்ந்து 1919ஆம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஆயிரத்திற்கு அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அமிரிட்சார் படுகொலைகளை நியாயப்படுத்தி இதுபற்றிய விசாரணைக் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பித்த பிரித்தானிய படைத்தளபதி பிரிகேடியர்-ஜெனரல் டயர், பஞ்சாபில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டோர் மீது ‘பயங்கரவாதத் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே’
இப்படுகொலைகளுக்கு தான் கட்டளையிட்டதாக நியாயம் கற்பித்தார்.
இவ்வாறு அரசுகளில் ஆழமாகப் பதிந்து கிடக்கும் நிறுவனமயப்படுத்தப்பட்ட பயங்கரவாதத்தையே கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழீழ மக்கள் மீது சிங்களம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஈழத்தீவில் தமிழினத்தை வேரோடு பிடுங்கியெறியும் இன அழிப்பை இலக்காகக் கொண்ட இவ் அரச பயங்கரவாத நடவடிக்கையின் உச்ச கட்டமாகவே முள்ளிவாய்க்காலில்
ஒன்றரை இலட்சம் தமிழ் உயிர்களை சிங்களம் நரபலி வேட்டையாடியது. நிராயுதபாணிகளாக சிறைப்பட்ட இசைப்பிரியா போன்ற பெண் போராளிகளையும், போராளிகள் அல்லாத இளம் பெண்களையும் மானபங்கப்படுத்தியும், கொடூர பாலியல் வெறியாட்டத்திற்கு உட்படுத்தியும் கோரமாகக் கொன்று குவித்தது.
ஆனாலும் அத்தோடு தனது தமிழ் மாமிச வேட்டையை சிங்களம் நிறுத்திக் கொள்ளவதில்லை. துட்டகாமினியை வயிற்றில் சுமந்த பொழுது தமிழனின் தலையை வெள்ளித்தட்டில் அறுத்து வைத்து, அதிலிருந்து வடிந்த தமிழ்க் குருதியைக் குடித்து மகிழ்வுற்ற விகாரமாதேவியின் கொள்ளுப் பேரன்களுக்குத் தமிழ்க் குருதி குடிக்கும் தாகம் தணியவில்லை. தணியாத இந்தத் தமிழ்க் குருதி குடிக்கும் தாகத்தின் ஓர் அங்கமாகவே கடந்த ஆண்டு தனது கொலைக் கரங்களைப் பிரெஞ்சு தேசத்திற்கு நீட்டிய சிங்களம், மாவீரன் பரிதியின் உயிரைக் காவுகொண்டது. நிராயுதபாணியாகத் தனது
அலுவலகத்திலிருந்து வெளியில் வந்த பரிதியை ஆயுதபாணி ஒருவரை ஏவிவிட்டு கோழைத்தனமான முறையில் சிங்களம் பலிகொண்டது.
ஆனாலும் இது விடயத்தில் கொலையாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காது மந்த கதியில் தமது விசாரணைகளை பிரெஞ்சுக் காவல்துறையினர் மேற்கொள்வது புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை வேதனைக்கு
ஆளாக்கியிருக்கின்றது. சிங்கள அரச பயங்கரவாதத்தின் கொலைக் கரங்களில் இருந்து சொந்த மண்ணில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் தமக்குப் பாதுகாப்பு இல்லை என்ற உண்மையை உணர்த்தும் வகையிலேயே பிரெஞ்சுக் காவல்துறையினரின் அசமந்தப் போக்கான விசாரணைகள்
அமைந்திருப்பதாகவே ஒவ்வொரு தமிழரும் எண்ணத் தலைப்படுகின்றனர்.
இது புலம்பெயர் தேசங்களில் ‘அதுவும் பிரெஞ்சு தேசத்தில்’ சிங்களம் நிறைவேற்றிய முதலாவது அரசியற் படுகொலை அன்று. 1996ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26ஆம் நாளன்று இதே பிரெஞ்சு தேசத்தில் தமிழீழ
விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன், ஈழமுரசு பத்திரிகையின் நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோரை கோழைத்தனமாக சிங்களம் படுகொலை செய்தது. இன்று மாவீரன் பரிதியின் படுகொலை விடயத்தில் எவ்வாறு பிரெஞ்சுக் காவல்துறை நடந்து கொள்கின்றதோ, அதே அசமந்தப் போக்குடனேயே அப்பொழுது லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் படுகொலை விடயத்திலும் பிரெஞ்சுக் காவல்துறை நடந்து கொண்டது.
அன்று லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய இரு அரசியல் போராளிகளை சிங்களம் படுகொலை செய்த பொழுது தமிழீழ மண்ணில் பலமான நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்த வெற்றிகளுக்கு முதுகெலும்பாக விளங்கிய புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் நிதி வழங்கலை முடக்கும் நோக்கத்துடன் லெப்.கேணல் நாதன் அவர்களை சிங்களம் படுகொலை செய்தது. அதேபோன்று ஊடகப் பரப்பில் தமிழ்த் தேசிய ஊடகங்கள் மேற்கொண்ட கருத்துப் போரை முறியடிக்கும் நோக்கத்துடன் கப்டன் கஜன் அவர்களின் உயிரைச் சிங்களம் பலியெடுத்தது.
ஆனாலும் சிங்களத்தின் நிறுவனமயப்படுத்தப்பட்ட பயங்கரவாதத்திற்கு அஞ்சிப் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் அடிபணிந்து போகவில்லை. தவிர அப்பொழுது தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கம் தமிழீழ மண்ணில் இருந்ததால் புலம்பெயர் தேசங்களில் சிங்களம் மேற்கொண்ட அரச பயங்கரவாதம் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.
ஆனால் இன்று நிலைமை வேறு. தாயக மண்ணில் தமிழீழ ஆயுத
எதிர்ப்பியக்கம் இடைநிறுத்தம் பெற்றிருக்கும் இன்றைய புறநிலையில் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை புலம்பெயர் தேசங்களிலும், தாய்த் தமிழகத்திலும் மட்டுமே காண முடிகின்றது. தமிழீழத் தாயக மண்ணில் தேசிய விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சி கொள்வதற்கு இவ் அசைவியக்கம் காரணமாக அமையும் என்ற வலுவான அச்சம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு உண்டு.
இருந்த பொழுதும் தாய்த் தமிழகத்தோடு மோதுவது இந்தியாவோடு மோதுவதற்கு ஒப்பானது என்பது சிங்களத்திற்கு தெரியும். இதன் காரணமாகவே தனது கொலைக் கரங்களை தமிழக மண்ணிற்கு விரிவுபடுத்தாது கடற்பரப்போடு மட்டும் சிங்களம் மட்டுப்படுத்தியுள்ளது. ஆனால் புலம்பெயர் தேசங்களில் நிலைமை வேறு. கே.பியின் ஒத்துழைப்புடன் 2009ஆம், 2010ஆம் ஆண்டு காலப்பகுதிகளில்
மலேசியாவிலிருந்தும், தாய்லாந்திலிருந்தும் போராளிகள் சிலரையும், செயற்பாட்டாளர்களையும் கொழும்பிற்கு கடத்திச் சென்ற சிங்களம், இதன் தொடர்ச்சியாகவே கடந்த ஆண்டு மாவீரன் பரிதியை படுகொலை செய்தது.
பரிதியின் படுகொலை என்பது வெறுமனவே பிரான்சில் இயங்கும் தமிழீழத் தேசியக் கட்டமைப்புக்களைப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன்
மேற்கொள்ளப்பட்ட ஒன்று அன்று. பிரெஞ்சுச் சிறையிலிருந்து வெளியில் வந்ததும் பிரான்சில் மட்டுமன்றி ஏனைய புலம்பெயர் தேசங்களில் உள்ள செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தமிழீழ தேசிய விடுதலைச் சுடரை அணையாது பாதுகாத்தவர் பரிதி. கொண்ட கொள்கையில் உறுதியோடும், தனது சக செயற்பாட்டாளர்கள் - பொறுப்பாளர்களுடன் நேர்மையோடும் நடந்து கொண்டவர் பரிதி.
புலம்பெயர் தேசங்களில் இயங்கும் தமிழீழத் தேசியக் கட்டமைப்புக்களைத் தலைமையேற்று வழிநடத்தும் நேர்மையும், ஆளுமையும் அவருக்கு இருந்தது. மே 18இற்குப் பின்னர் புலம்பெயர் தேசங்களில் வெடித்த உட்பூசல்களுக்கு முடிவுகட்டி, அனைத்து நாடுகளிலும் உள்ள
செயற்பாட்டாளர்களை ஒன்றிணைக்கும் பணியை மாவீரன் பரிதி முன்னெடுத்த பொழுதே தனது கைக்கூலிகளை ஏவிவிட்டு அவரை சிங்களம் படுகொலை செய்தது. தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்துப் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை வழி நடத்தும் தலைமைத்துவ ஆளுமையை பரிதி வெளிப்படுத்தியதை சிங்களத்தால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
புலம்பெயர் கட்டமைப்புக்களில் குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்த சிங்களத்தின் கைக்கூலிகளாலும் இதனை சீரணித்துக் கொள்ள இயலவில்லை. இதுவே மாவீரன் பரிதியின் படுகொலைக்கு காரணமாக அமைந்தது. தமிழீழத் தாயகக் களத்தில் ஒரு சிறந்த போராளியாகவும், தளபதியாகவும், பின்னர் பிரெஞ்சு மண்ணில் தமிழீழத் தேசம் கண்ட தலைசிறந்த பொறுப்பாளனாகவும் திகழ்ந்து, இருண்டு கிடந்த புலம்பெயர்
வானில் ஒளியூட்ட எழுந்த நட்சத்திரமாக மிளிரத் தொடங்கிய மாவீரன் பரிதியின் உயிரைப் பறித்ததன் மூலம் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழீழத் தேசியக் கட்டமைப்புக்களை உடைக்கும் தனது முயற்சிக்குத் தடையாக இருந்த அரண் ஒன்றை வெற்றிகரமாக சிங்களம் இடித்து வீழ்த்தியது. இதுவே மடையுடைத்து ஓடும் நீர் போன்று ‘மெத்தப்படித்த கனவான்களாக’ வேடமிட்டுப் புலம்பெயர் கட்டமைப்புக்களுக்குள் சிங்களக் கைக்கூலிகள் ஊடுருவி நிலையெடுப்பதற்கான புறநிலைகளை தோற்றுவித்துள்ளது.
நிறுவனமயப்படுத்தப்பட்ட அரச பயங்கரவாதத்தின் ஓர் அங்கமாக சிங்களம் முன்னெடுக்கும் ‘சைக்-ஒப்ஸ்’ என ஆங்கிலக் குறியீட்டைக் கொண்ட இந்த உளவியல் யுத்தத்தின் பரிமாணங்களை நுட்பமாகப் புரிந்து கொண்டு எமது அரசியல் மூலோபாயங்களை நாம் வகுக்கத் தவறினால் புலம்பெயர் தேசங்களில் உயிர்ப்புடன் உள்ள தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கம் செயலிழப்பதை தவிர்க்க முடியாது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக