18

siruppiddy

டிசம்பர் 05, 2013

முள்ளிவாய்க்காலில் ஐ.நா விசேட பிரதிநிதி சலோகா பெயானி!

கேப்பாபிலவுக்கும் அதிரடி விஜயம்.  இலங்கை வந்துள்ள உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவிசேட பிரதிநிதி சலோகா பெயானி, முள்ளிவாய்க்கால் மற்றும் கேப்பாபுலவுக்கு திடீரெனச் சென்று அதிர்ச்சி அளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்ற பெயானி மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகனைச் சந்தித்தார். மாவட்டத்தின் யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றம், மேம்பாடுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக அவருக்கு விளக்கம் அளித்தாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
   
பெயானியின் பயணத்தில் முள்ளிவாய்க்கால் மற்றும் கேப்பாபுலவு விஜயம் என்பன இடம்பெற்றிருக்கவில்லை. எனினும் அதிரடியாக அந்தப் பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார். இறுதியுத்தம் நடந்தமுள்ளிவாய்க்கால் பகுதியை பார்வையிட்ட பெயானி அங்கு மீள்குடியேறியுள்ள மக்களை சந்தித்து அவர்களின் நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தார். அத்துடன் மெனிக்பாம் முகாமிலிருந்து கொண்டு செல்லப்பட்டு குடியேற்றப்பட்ட கேப்பாபுலவு மக்களையும் அவர் சந்தித்தார்.

தமது சொந்த இடங்கள் அபகரிக்கப்பட்டு தாம் முகாம்களில் வசிப்பதாக கேப்பாபுலவு மக்கள் பெயானியிடம் தெரிவித்தனர். தமது மீள்குடியேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் இந்த தருணத்தில் கோரிக்கை வைத்தனர். இதேவேளை முல்லைத்தீவு இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எல்.பி.ஆர்.மார்க் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதியும், விசேட அறிக்கையாளருமான சலோகா பெயானியை சந்தித்துள்ளார்.

இதன்போது தாம் நடத்திய மனிதாபிமான யுத்தம் தொடர்பிலும் மக்களை மீட்ட நடவடிக்கை தொடர்பாகவும் யுத்தத்திற்குப் பின்னர் மக்களை மீள்குடியேற்றம் செய்வது உள்ளிட்ட இராணுவத்தின் நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் சலோகா பெயானிக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக