18

siruppiddy

டிசம்பர் 08, 2013

சந்திரிக்கா அதிகாரத்திற்காக அரசியல்வாதிகள் மக்களை அழிக்க தயாராக!!


இலங்கையின் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது, அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக சில அரசியல்வாதிகள் மற்ற இனத்தைச் சேர்ந்த மக்களைக் கொல்லவும், தாக்கவும் எரிக்கவும் தயாராக இருக்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு உலகெங்கிலுமிருந்து அரச தலைவர்கள், முன்னாள் அரச தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரமுகர்களும் தங்களின் புகழஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர். அவரிடமிருந்து அரச தலைவர்கள் என்ன வகையான பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்று சந்திரிகா தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.
   
சொந்த நலன்களை பற்றி மட்டும் சிந்திக்காத ஒரு அரசியல்வாதியாக மன்னித்தல், மீள் நல்லிணக்கம் ஒரு தேசமாக எல்லோரிடமும் அன்புடனும் அமைதியுடனும் சேர்ந்து வாழுதல் போன்ற அளவுகடந்த பல பண்புகளை நெல்சன் மண்டேலாவிடமிருந்து கற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நெல்சன் மண்டேலாவிடமிருந்து தனது அரசும் பல பாடங்களை கற்றுக் கொண்டதாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

1983ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து நாங்களும் உண்மை அறியும் ஆணைக்குழுவை உருவாக்கினோம். சில சிங்கள கடும்போக்கு வாதிகளினால் தமிழ் மக்களுக்கு நடந்த துயரங்களுக்காக நாட்டின் தலைவர் என்ற ரீதியில் நான் மன்னிப்புக் கோரியிருந்தேன். மண்டேலாவிடமிருந்தும் அவரது செயற்பாடுகளிலிருந்தும் தான் இவற்றை கற்றுக் கொண்டதாக சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இலங்கையின் இன்றைய நிலை கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தாங்கள் சிங்கள பெளத்த தேசத்துக்கு மட்டுமே பிரதிநிதிகள் என்று காட்டுவதற்காகவே மற்ற சமயங்களை, இனங்களை, சமூகங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் சில அரசியல்வாதிகள் முனைகிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக