பாதிக்கப்பட்ட எங்களுக்கு அமெரிக்க மக்களால் பல விதமான நன்மைகளைத் தரும் பொழுது அதற்கு எந்தவிதமான அரசியல் நிறங்களையும் பூசி கொச்சைப்படுத்தாது இருக்க வேண்டும் என வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று காக்கைதீவில் அமெரிக்க உதவியுடன் ஏலவிற்பனை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் அங்கு உரையாற்றும் போது:
அமெரிக்க அரசு எமக்கு பல வழிகளிலும் பல வருடங்களாக உதவிகளைச் செய்து வருகின்றனர். நான் அரசியலுக்கு வர முன்னரே அவர்களோடு சேர்ந்து பல செயற்றிட்டங்களில் பங்குபற்றியிருந்தேன்.சட்டத்தரணிகள், நீதிபதிகள் மற்றும் வேறு பலருக்கு சட்டம் சம்பந்தமான பயிற்சிகளும் வழங்க அவர்களுக்கு உதவி செய்து கொண்டு இருந்தேன்.
ஆனால் அவர்கள் இங்கு வாழ்வாதார மேம்பாடுகள் தொடர்பிலான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது மிகவும் மகிழ்ச்சியான விடயம்.
நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள். எமக்கு பல விதமான தேவைகள் உள்ளன. அவற்றை நல்குவதற்கு வெளிநாடுகளில் இருந்து பலர் முன் வந்துள்ளனர். இவ்வாறு வழங்குகின்ற போது வடக்கிற்கு மட்டும் வழங்குகின்றார்கள் ஏன் தென்பகுதிக்கு வழங்குகின்றார்கள் இல்லை என விமர்சனங்கள் ஏற்படுவது மனதிற்கு வேதனையளிக்கின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் நன்மை தேவை மற்றவர்களுக்கு அல்ல. ஆகவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு அமெரிக்க மக்களால் பல விதமான நன்மைகளைத் தரும் பொழுது அதற்கு எந்தவிதமான அரசியல் நிறங்களையும் பூசி கொச்சைப்படுத்தாது இருக்க வேண்டும் என்று அரசுடன் சம்பந்தப்பட்ட சிலருக்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக