18

siruppiddy

நவம்பர் 24, 2014

ஊசலாடிய 5 தமிழக மீனவ சகோதரர்களின் உயிர் எப்படியோ

காப்பாற்றப்பட்டது என்பது ஆறுதல் அளிக்கக் கூடியதுதான்! ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையில் உண்மையான விடியல் எப்போதோ! என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,,,, இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் இராஜபக்சே அரசு, தனது சொந்த நாட்டின் குடிமக்கள், சிங்கள இனம் உருவாகுமுன்பே இலங்கையை ஆண்ட வரலாற்றுப் பெருமைக்குரிய மக்கள் தமிழர்கள் என்பதையெல்லாம் “வசதியாக” மறந்தும் மறைத்தும், எம் இனத்தை அழித்து ஒழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. தீவிரவாத ஒழிப்பு என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, அங்குள்ள தமிழர்களை குண்டு வீசியும் மற்றும் பல்வேறு ஜனநாயக விரோதச் செயல்களினாலும் அழித்தொழித்து, நிரந்தர அவலத்திற்குரிய நிலைக்குத் தள்ளப்படும் நிலை தொடர் கதையாக ஆகி வருகிறது.
2009இல் தீவிரவாதத்தை அறவே ஒழித்து, விடுதலைப்புலிகளையே அழித்து விட்டோம் என்று கூறி, அங்குள்ள நம் தாய்மார்களில் 90 ஆயிரம் விதவைகள், பல்லாயிரவர் வீடற்றவர், பல ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளி வாய்க்கால் படுகொலையில் அழிக்கப்பட்டவர்கள், எஞ்சியவர்கள் சிங்கள இராணுவத்தின் கொடுங்கோன்மை ஆளுமையின் கீழ் உள்ள முள் வேலிக்குள் அடைக்கப்பட்டவர்கள் என்ற நிலைதான் இருந்தது!
இந்த 5 ஆண்டுகளில் எம் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களுக்கு பெரிதாக விடியல் ஏதும் ஏற்படவில்லை. ரூ.1300 கோடி நிதியை இந்திய அரசிடமிருந்து மறுவாழ்வுக்கான பணி - வீடு கட்டித் தருவது - போன்ற சாக்குகளில் பெற்றும்கூட, அதனால் தமிழர்களுக்குப் பயன் கிட்டாது, சிங்களவருக்கே நன்மை ஏற்படும் நிலைதான் உள்ளது என்பது உலக நோக்கர்கள் கருத்து.
சிங்களப் பெயர் மாற்றத்திலிருந்து - தமிழர் வாழும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சிங்களக் குடியேற்றம் வரை நீடிக்கும் என்ற நிலைதான்! 13ஆவது அரசியல் சட்டத் திருத்தப்படியும் ஏதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை அதிபர் இராஜபக்சே அளித்த வாக்குறுதிப்படி ஏற்படவே அரசியல் தீர்வு ஏதும் இல்லை. 13ஆவது அரசியல் சட்டத் திருத்தப்படியும் ஏதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
முந்தைய அரசும் தற்போதைய மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும் அதனை இலங்கைக்கு வற்புறுத்த வேண்டிய கடமையைச் செய்யாது, “பாம்புக்கும் நோகாமல், பாம்படித்த கோலுக்கும் நோகாமல்” என்பது போன்ற ஒரு அணுகுமுறையையே கடைப்பிடித்து வருவது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகும்! அண்மையில் சென்னைக்கு வந்து பேட்டி அளித்த வடகிழக்கு மாகாண தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் திரு. விக்னேஷ்வரன் அவர்கள், எவ்வித அதிகாரமும் தரப்படாத “பொம்மை முதல்வனாகவே” தான் இருப்பதாக வேதனையோடு கூறியிருக்கிறார்.
கலைஞர் தலைமையில் ‘டெசோ’ அமைப்பும் தமிழ் உணர்வுள்ள கட்சிகள் வலியுறுத்தியும்கூட தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையில் இயங்கும் ‘டெசோ’ அமைப்பு தொடங்கி, பல்வேறு தமிழ் உணர்வுள்ள கட்சிகளும், இயக்கங்களும், அமைப்புகளும் இதனைத் தொடர்ந்து வலியுறுத்தியும்கூட மத்திய அரசு ‘கேளாக் காதுடன்’ தான் நடந்து கொள்கிறது.
நமது மத்திய அரசினையே மிரட்டுவது போல, சீனா, பாகிஸ்தானுடன் இலங்கை தனக்குள்ள உறவுகள், உதவிகளைக் காட்டி, ‘நீங்கள் இல்லாவிட்டால் எங்களுக்கு அவர்கள் இருக்கிறார்கள்‘ என்ற போக்கை இலங்கை காட்டி வருகிறது! நமது நாட்டின் இறையாண்மைக்கே சவால் விடுவதுபோல, சில நாட்களுக்குமுன்பு வரை, சீனாவின் சப்மெரினை இலங்கைக் கடற்கரையில் நிறுத்தி வைக்க அனுமதியளித்துள்ளது.
இதுபற்றி தமிழர் தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான திரு. சம்பந்தம் அவர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர்தம் வெளிஉறவுக் கொள்கையின் இரட்டைப் போக்கினை நன்கு படம் பிடித்துக் காட்டிப் பேசியுள்ளார்.
இன்றைய ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் இது தலைப்புடன் வெளியாகியுள்ளது.
என்பதில் “நமக்கு உதவும் அண்டை நாடான இந்தியாவின் உணர்வுகளைப் புறந்தள்ளி, திட்டமிட்டு வேண்டுமென்றே முடிவு செய்து இந்தியாவைத் தனிமைப்படுத்தும் ஒரு நிலையை இலங்கை அரசு கடைப்பிடிக்கத் துணிந்துள்ளது. சீன அரசின் உதவிகள் 98 விழுக்காடு கடன்களாகத்தான் தரப்படுகின்றன.
ஆனால், இந்திய அரசு 1300 கோடி ரூபாய் நமக்கு மான்யமாக உதவியுள்ளது. நாம் அதற்குக் காட்டும் கைம்மாறா?” என்பது போன்று கேட்டுள்ளார்!
இந்திய அரசுக்கும் இது வெளிச்சம் ஆகட்டும்!
மற்றொரு பகுதி தமிழக மீனவர்களை அன்றாடம் கைது செய்து, சித்ரவதை செய்வது, படகுகளைப் பறிப்பது, பறித்த படகுகளை - விடுதலை செய்த பிறகும் திருப்பித் தராதது. உச்ச கட்டமாக 5 மீனவர்கள்மீது பொய் வழக்கு - போதைப் பொருள் கடத்தல் குற்றம் சுமத்தி - தூக்குத் தண்டனை தந்து, மற்றவர்களை மிரட்ட இதனையே ஓர் ஆயுதமாக்கி - பிறகு பொது மன்னிப்பு என்று தந்து “நாடகத்தை” முடித்து, இங்குள்ளவர்களின் பாராட்டையும் சேர்த்துப் பெறுவது போன்ற தந்திர உபாயங்களை நடத்தி வருகின்றது.
ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையில் உண்மையான விடியல் எப்போதோ!
ஊசலாடிய 5 மீனவச் சகோதரர்களின் உயிர் எப்படியோ காப்பாற்றப்பட்டது என்பது ஆறுதல் அளிக்கக் கூடியதுதான், அதற்காக அந்த அளவு பிரதமர் மோடி எடுத்த முயற்சிகள் நமது நன்றிக்கும், பாராட்டிற்கும் உரியது என்ற போதிலும், உண்மை என்றாவது ஒரு நாள் வெளிச்சத்திற்கு வராமலா போகும்?
எனவே, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையில் உண்மையான விடியல் எப்போதோ!.. புரியாத புதிர் - கிடைக்காத விடை! என் செய்வது தமிழர்களின் இன உணர்வு சிதறிய தேங்காய்களாகி உள்ள நிலையினால் ஏற்பட்ட விரும்பத் தகாத விளைவு இது அந்தோ! இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக