இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மத்திய அரசு அவ்வப்போது நீடித்து வருகிறது. இந்த தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பாயத்தின் இறுதிகட்ட விசாரணை நேற்று டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையில் நடைபெற்றது.
மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்ஜீவ் ஜெயின் தன்னுடைய வாதத்தில் விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் இந்தியாவில் இன்னும் தொடர்ந்து வருகின்றன என்று உளவுத்துறையின் தகவல்கள் கிடைத்து வருகின்றன. இது இந்திய இறையாண்மைக்கும் அமைதிக்கும் ஊறு விளைவிப்பதாக அமையும். விடுதலைப்புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து அந்த அமைப்பின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கூடாது என்றார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் யோகேஷ் கன்னா தன்னுடைய வாதத்தில்
”விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக இந்தியாவில் சில குழுக்கள் செயல்பட்டன. இதனால் அவற்றின் உறுப்பினர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2012 மே 14 முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலர் மீது வெடிமருந்து சட்டங்களின்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
விடுதலைப்புலிகளுக்கு சாதகமாகவும் அவர்களின் தனி ஈழம் குறித்த கோரிக்கையை ஆதரித்தும் இணையதளம் மூலம் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் சிலர் பிரசாரம் செய்துவருகின்றனர். அவர்கள் இலங்கையில் விடுதலைப்புலிகளை வீழ்த்த இந்திய அரசே காரணம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
இத்தகைய பிரச்சாரங்களால் இந்தியாவில் உள்ள மிக முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே பிரிவினையைத் தூண்டும் இதுபோன்ற குழுக்களை ஊக்குவிக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தொடர்ந்து சட்டவிரோத அமைப்பாக கருதி தடையை நீட்டிக்க வேண்டும்” என்று அவர் வாதிட்டார்.
இறுதிகட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி ஜி.பி.மிட்டல் திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக