பாகிஸ்தானில் வரும் 11ம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு ஜனநாயக அரசு அமைவதை கடுமையாக எதிர்த்து வரும் தீவிரவாதிகள், தேர்தலை சீர்குலைக்க தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று மிக கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். பாகிஸ்தானின் மத்திய குர்ரம் பழங்குடி பகுதியில் உள்ள மதரசாவில், வலதுசாரி ஜாமியத் உலமா-இ-இஸ்லாம்-பாசில் கட்சியின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் தலைவர்கள், உள்ளூர் தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்திற்குள் திடீரென குண்டுவெடித்தது.
இதனால் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். சுமார் 70 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடித்தபோது பழங்குடியின பகுதி முன்னாள் எம்.பி. முனிர் கான் ஒரக்சாய், அங்கு இருந்தார். முனிரின் சசோதரர் காதீர் ஓரக்சாய் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
கட்சியின் வேட்பாளர் ஐனுதீன் ஷாகிரும் இந்த சம்பவத்தில் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து மதரசா அமைந்துள்ள பகுதி பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக