அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வருகைக்காக 800ற்கும் மேற்பட்ட சிகை அலங்கரிப்பாளர்கள் சுமார் 3மணி நேரம் தமது தொழில்களையும் கைவிட்டு வந்து காத்திருந்தனர். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் காத்திருந்த அவர்கள் அமைச்சர் வராமையால் சினமடைந்து அங்கிருந்து வெளியேறினர்.
இது குறித்து தெரியவருவதாவது:
யாழ்.மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கங்களின் ஒன்றிய அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுக்கு 7 கிளைச் சங்கங்களையும் சேர்ந்த 800ற்கும் மேற்பட்ட சிகை அலங்கரிப்பாளர்கள் காலை 9 மணிக்கு நிகழ்வுக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
ஒன்றியத்தை அங்குரார்ப்பணம் செய்வதற்குப் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏனைய விருந்தினர்களாக அழைக்கப்பட்ட யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, ஆணையாளர் பிரணவநாதன் உள்ளிட்டோர் நண்பகல் 12 மணிக்குப் பின்னரே நிகழ்வுக்கு வருகை தந்தனர்.
சிகை ஒப்பனையாளர்கள் அனைவருக்கும் நேற்றைய தினம் விடுமுறையாகக் கருதி கட்டாயம் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் 800ற்கும் மேற்பட்டோர் தமது சிகை ஒப்பனை நிலையங்களை மூடிவிட்டு நிகழ்வுக்காக வருகை தந்திருந்தனர்.
காலை 8 மணிக்கே நிகழ்வுக்கு வருகை தந்த சிகை ஒப்பனையாளர்கள் பலர் சுமார் 3 மணித்தியாலங்கள் காத்திருந்தும் அமைச்சர் வருகை தராததால் பொறுமை இழந்தவர்களாக சுமார் 11.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக