18

siruppiddy

மார்ச் 25, 2015

ரூ. 2000 கோடி நட்டஈடு கோரி அமைச்சர் ரவி கடிதம்

 
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவிடமும் லங்கா பத்திரிகை நிறுவனத்திடமும் தலா 2 ஆயிரம் மில்லியன் ரூபா நட்டஈடு கோரி சட்டத்தரணியூடாக கடிதங்களை நேற்று அனுப்பி வைத்தார்.
தனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் போலியான தகவல்களை எவ்வித ஆதாரமுமின்றி இருவேறு சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் வெளிப்படுத்திய குற்றச்சாட்டிற்காகவே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தலா 2 ஆயிரம் மில்லியன் ரூபா கோரி சட்டத்தரணியூடாக கடிதங்களை நேற்று அனுப்பியுள்ளார்.
அரசியலில் பழிவாங்கும் நோக்கில் தனிநபர் பெயரை களங்கப்படுத்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் லங்கா பத்திரிகை நிறுவனமும் மேற்கொண்ட முயற்சிகள் தவறானவை என்பதனாலேயே தான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அமைச்சர் கூறினார்.
பெப்ரவரி 12ம் திகதி வெளிவந்த டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வழங்கியுள்ள செவ்வியில், அமைச்சர் ரவி கருணாநாயக்க அரசியலுக்கு வந்ததன் பின்னரே வீடு வாங்கியதாக குறிப்பிட்டிருந்தார்.
அதனை மறுத்து தனது சொத்துக்களை பிரகடனப்படுத்திய அமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் கோத்தபாயவும் தனது சொத்துக்களை பிரகடனப்படுத்த வேண்டுமென ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.
கோத்தபாய அதனை நிறைவேற்ற தவறியமையினாலேயே தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக 2 ஆயிரம் மில்லியன் ரூபா கோரி சட்டத்தரணியூடாக கடிதத்தினை அனுப்பியிருப்பதாகவும் அமைச்சர் நேற்று தெரிவித்தார்.
இதேவேளை துறைமுகப் பணிகளுக்காக அமைச்சர் ரவியினால் 200 வாகனங்கள் சேவையிலீடுபடுத்தப்படப் போவதாக போலியான தகவல்களை லங்கா பத்திரிகை வெளியிட்டிருந்ததாகவும் அமைச்சர் கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக