18

siruppiddy

மே 10, 2015

இன்னும் வடக்கிலும் கிழக்கிலும் 74 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடி


இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு உதவி வழங்கும் நாடுகளின் நிதியுதவி குறைக்கப்பட்டிருப்பதனால், அந்தப் பணிகளில் தாமதமும் சிக்கல்களும் ஏற்பட்டிருப்பதாக கண்ணிவெடி மற்றும் வெடிப்பொருட்கள் ஆய்வு மையத்தைச் சேர்ந்த வித்யா அபேகுணவர்தன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையை கண்ணிவெடிகள் அற்ற நாடாக மாற்றுவதற்கு 2020 ஆம் ஆண்டு வரையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.
எனினும் சர்வதேசத்தின் நிதியுதவிகள் குறைக்கப்பட்டுள்ள இப்போதைய நிலையில் குறித்த காலத்துக்குள் அந்த இலக்கை அடைவது கடினம் என்று வித்யா அபேகுணவர்தன கூறினார்.
கடந்த 2009, 2010 ஆம் ஆண்டுகளில் முகாம்களில் தஞ்சம் அடைந்திருந்த பெரும் எண்ணிக்கையிலான மக்களை மீள்குடியேற்ற வேண்டிய அவசர தேவை இருந்ததனால், உதவி வழங்கும் நாடுகள் பலவும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு அதிக அளவில் உதவிகளை வழங்கி வந்தன.
எனினும் இப்போது நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு, யுத்தத்தின் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் எற்பட்டிருப்பதனால், உதவி வழங்கும் நாடுகள் இலங்கைக்கான உதவிகளை குறைத்திருக்கின்றன என்று அபேகுணவர்தன தெரிவித்தார்.
நிதிப்பற்றாக்குறை காரணமாக இப்போது ஒருசில நிறுவனங்களே கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன. அத்துடன் இலங்கை இராணுவத்தினரும் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
கடந்த 2011 ஆம் ஆண்டில் 53 சதுர கிலோமீட்டர் பரப்பிலும், 2012 ஆம் ஆண்டு 22 சதுர கிலோ மீட்டர் பரப்பிலும், 2013 ஆம் ஆண்டு 8 சதுர கிலோ மீட்டர் பரப்பிலும், 2014 ஆம் ஆண்டு 5 சதுர கிலோ மீட்டர் பரப்பிலும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நடந்துள்ளன.
இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் 74 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகுதிகளில் இன்னும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நடைபெற வேண்டியுள்ளது.
இந்தப் பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகள் குறைவாகவும், வயல்கள் போன்ற நிலங்கள் அதிகமாகவும் காணப்படுகின்றன.
மீள்குடியேற்றம் செய்யப்படும் பகுதிகளில் கண்ணி வெடிகளும், வெடிக்காத குண்டுகளும் தொடர்ந்து கிடைத்துவருவது மக்களுக்கு அச்சத்தை அளிப்பதாக உள்ளது என, வித்யா அபேகுணவர்தன தெரிவித்தார்.   
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக