18

siruppiddy

ஆகஸ்ட் 14, 2015

புலிகளை பணத்தைக் கொடுத்தேனும் அழித்தோம்???


பிரபாகரனுக்கு பணம் கொடுத்தேனும் இந்த நாட்டில் முழுமையாக புலிகளை அழித்து விட்டோம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியினர் புலிகளுக்கு பணத்தையும் கொடுத்துவிட்டு நாட்டையும் கொடுக்கவே முயற்சித்தனர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம்ஜெயந்த தெரிவித்தார்.
தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசாங்கம் அமையுமானால் சம்பந்தனின் கோரிக்கை நிறைவேற்றப்படும். தனிநாடு உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான தருணத்தில் நாம் இருக்கின்றோம். நல்லாட்சி என்ற பெயரில் கடந்த எட்டு மாதகாலம் மிகவும் மோசமான சூழலுக்குள் நாடு தள்ளப்பட்டுள்ளது.
ஜனநாயகம் முழுமையாக வீழ்த்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில் இதுவரை காலம் இடம்பெறாத வகையில் மிகப்பெரிய நிதி மோசடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
மத்திய வங்கி விடயத்தில் அரசாங்கத்தினால் தன்னை நியாயப்படுத்த முடியாமல் போயுள்ளது. இலங்கையின் பிரஜை இல்லாத ஒருவரை எவ்வாறு மத்தியவங்கி ஆளுநராக நியமிப்பது என்ற கேள்வியை நாம் ஆரம்பத்தில் இருந்தே கேள்வி எழுப்பியிருந்தோம்.
அதேபோல் மத்தியவங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நியமனம் பெற்று இந்தப் பொறுப்பினை ஏற்கவில்லை. ஆகவே இவர்களின் சூழ்ச்சி திட்டம் தொடர்பில் நாம் முன்வைத்த சந்தேகக் கேள்விகள் அனைத்தும் இன்று உண்மை என்று நிரூபனமாகி வருகின்றன.
அதேபோல் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் சிங்கப்பூர் பிரஜையாவர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கட்சி மாறிய உறுப்பினர்கள் அனைவரும் தாம் வெளியேறி இரண்டு தினங்களில் சிங்கப்பூர் சென்று திரும்பி வந்தார்கள்.
இன்று இவர்கள் செலவழிக்கும் பணம் இவர்களது பூர்வீக சொத்தும் அல்ல. அப்படியாயின் இவர்களுக்கு எவ்வாறு இந்தத் தொகை பணம் கிடைத்தது. இவை அனைத்தும் ஒரு கூட்டு வேலையாக இடம்பெற்றுள்ளது.
அதாவது இந்த சம்பவத்தின் பின்னணியில் பண பரிமாற்றல் மோசடிகள் நடைபெற்றுள்ளன. கறுப்புப்பண வியாபாரம் பாரிய அளவில் நடைபெற்றுள்ளது.
ஆரம்பத்தில் இந்த நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்தும் வகையில் பிரபாகரன் அன்று மத்திய வங்கி மீது தாக்குதல் நடத்தினார். அந்த தாக்குதல் சம்பவம் இந்த நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் இப்போது ஐக்கிய தேசியக் கட்சி அர்ஜுன் மஹேந்திரனை பயன்படுத்தி இந்த நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக வீழ்த்த பாரிய திட்டத்தை வகுத்து வருகின்றது.
எமது மக்களின் பணத்தை இன்னொரு நாட்டின் பிரஜையும் அவரது குடும்பமும் அனுபவிக்க பிரதமர் ரணிலும் ஐக்கிய தேசியக் கட்சியும் உதவி செய்து வருகின்றனர்.
ஆனால் பிரபாகரனுக்கு நாம் பணம் கொடுத்ததாகவும் பயங்கரவாதத்தை நாம் வளர்த்ததாகவும் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். இவர்கள் கூறுவதைப்போல் வைத்துக்கொண்டால் நாம் புலிகளுக்கு பணம் கொடுத்தேனும் இந்த நாட்டில் முழுமையாக புலிகளை அழித்துவிட்டோம்.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியினர் புலிகளுக்கு பணத்தை கொடுத்துவிட்டு நாட்டையும் கொடுக்கவே முயற்சித்தனர். இன்றும் அந்த முயற்சி கைவிடப்படவில்லை.
நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவுடன் வடக்கின் பிரிவினைவாதிகளின் நாட்டை பிரிக்கும் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். எமது ஆட்சியில் வாய்மூடி செயற்பட்ட கூட்டமைப்பு பிரிவினைவாதிகள் இப்போது மீண்டும் தமது கொள்கையினை முன்னெடுக்க ஆரம்பித்து விட்டனர்.
மீண்டும் தனி நாடு என்ற கொள்கையில் இயங்க ஆரம்பித்து விட்டனர். இந்தத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசாங்கம் அமையுமானால் இந்த நாட்டில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
அதேபோல் ரிஷாட், ஹக்கீம் ஆகியோர் கேட்கும் கரையோர மாவட்டக் கொள்கையும் நிறைவேற்றப்படும். இவர்களது இரகசிய ஒப்பந்தங்கள் அனைத்தும் மீண்டும் இயங்க ஆரம்பித்துவிடும்.
ஆகவே இவை அனைத்தையும் தடுக்கும் நோக்கத்தில் நாட்டை காப்பாற்றவே நாம் மக்களின் ஆதரவை கேட்கின்றோம்.
மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரிவினைவாத ஆட்சியை தோற்கடித்து ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த தலைமையில் பலமான ஆட்சியை அமைக்க அனைத்து மக்களும் இன மத பேதமின்றி ஒன்றிணைய அழைக்கின்றோம் என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக