கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தடுத்து வைக்கப்பட்ட கிரித்தலை முகாமில், இரகசிய சித்திரவதைக் கூடங்கள் இயங்கி வந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டி மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கொன்றினூடாகவும், எக்னெலிகொட
தொடர்பில் கைதாகியுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 7 பேரிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட விசாரணைகள் ஊடாகவும் இந்த சித்திரவதை கூடம் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஊடகவியலாளர் எக்னெலிகொட தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசாரணைகள் மேலும் விரிவுபடுத்தப்படலாம் எனவும் எதிர்வரும் நாட்களில் குறித்த கிரித்தலை முகாமுக்கு விஷேட புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று சென்று நேரடியாக விசாரணைகளை முன்னெடுக்கலாம் என பொலிஸ் தலைமையக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் தற்போது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வரும் 7 சந்தேக நபர்கள் வெளியிடும் தகவல்களுக்கு அமைய நீதிமன்றம் ஊடாக விசேட அனுமதியொன்று பெறப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் எனவும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கருத்து வெளியிடுகையில், எக்னெலிகொட விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் கிரித்தலை முகாமை சோதனைக்கு உட்படுத்துவதோ அல்லது அங்கு சென்று விசாரணை செய்வது குறித்தோ தற்போதைக்கு எந்த முடிவும் இல்லை எனவும் இது தொடர்பில் விசாரணைகளின் நிறைவில் முழுமையான
தகவல்களை தன்னால் வெளியிட முடியுமாக இருக்கும் என தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இதுவரை குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்துள்ள விசாரணைகளில், பிரகீத் எக்னெலிகொட ராஜகிரியவிலிருந்து
கடத்தப்பட்டு கிரித்தலை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதும் அங்கு அவர் சித்திரவதை செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும்
தெரியவந்துள்ளது. கடத்தப்பட்டு நான்கு நாட்களில் அப்போது கிரித்தலை முகாமுக்கு பொறுப்பாக இருந்த தற்போது புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள அதிகாரிகளினால் அவர் அந்த முகாமில் இருந்து அழைத்துச் சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந் நிலையிலேயே எக்னெலிகொட கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் புலனாய்வுப் பிரிவு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 7 பேரையும் தொடர்ந்தும் விசாரணைக்கு
உட்படுத்தியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக