18

siruppiddy

ஆகஸ்ட் 02, 2015

தேர்தல் குறித்த புலனாய்வுப்பிரிவின் கருத்துக் கணிப்பு!

தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பான கருத்துக் கணிப்பு அறிக்கை ஒன்றை அரச புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர். அவ்வறிக்கையின் பிரகாரம் மகிந்த ராஜபக்ச அணியினரை விடவும் ரணில் விக்ரமசிங்க அணியினர் பலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு, மற்றும் மாத்தளை, கேககாலை ஆகிய மாவட்டங்களின் முடிவுகள் நிச்சயமற்றிருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சி 90 ஆசனங்களைக் கைப்பற்றும் எனவும், 12 முதல் 14 தேசியப் பட்டியல் 
ஆசனங்களைப் பெறும் வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 81 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை, 10 முதல் 12 தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெறும் நிலை இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜே.வி.பி 12 ஆசனங்களைப் பெறும் அதேவேளை, 2 முதல் 3 தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெறும் நிலை இருக்கிறது.
வடகிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களைக் கைப்பற்றுவதுடன் 2 - 3 தேசியப் பட்டியல் ஆசனங்களைப் 
பெறும் என்றும், ஐக்கிய தேசியக் கட்சி 9 மாவட்டங்களிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 9 மாவட்டங்களிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு மாவட்டங்களிலும் வெற்றிபெறும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், வெளிநாட்டு தூதரகப் பிரிவினரால் தயாரிக்கப்பட்டுள்ள கணிப்பீட்டு ஆய்வறிக்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11 மாவட்டங்களிலும், ஐக்கிய தேசியக் கட்சி 8 மாவட்டங்களிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று மாவட்டங்களிலும் வெற்றிபெறும் நிலை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிக்கு நெருக்கமான தரப்பினர் மேற்கொண்ட கணிப்பீட்டு அறிக்கையும் தூதரகப் பிரிவின் அறிக்கைக்கு ஒத்ததாகவே இருக்கிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட கணிப்பீட்டு அறிக்கையின்படி 14 மாவட்டங்களிலும் அந்தக் கட்சி வெற்றிபெறும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
யார் என்ன சொன்னாலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 18 மாவட்டங்களில் வெற்றிபெறும் என அண்மையில் மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளியான கணிப்பீடுகளின் நோக்கின் எந்தவொரு கட்சியும் 113 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அதிகாரத்தைப் பெறாது என்பது தெளிவாகியுள்ளது.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகிய கட்சிகளுடனான உடன்படிக்கையின் மூலம் தேவையான 30 ஆசனங்கள் பகிரப்படும் அதேவேளை, பிரதான கட்சிகளிடையே 195 ஆசனங்கள் 
அல்லது அதற்கு கிட்டிய ஆசனங்கள் பகிரப்படும் நிலை உருவாகலாம்.
எதுவாயினும் எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மையை பெறப்போவதில்லை என்பது இப்பொழுதே தெளிவாகியுள்ளமையினால் அடுத்த நாடாளுமன்றம் தேசிய அரசாங்கமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக