18

siruppiddy

ஆகஸ்ட் 17, 2015

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இலங்கையில் பரபரப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறும் புத்தகம் ஒன்று, இலங்கையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபாகரன் இலங்கையில் தனி ஈழம் கேட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போராடி வந்தனர்.
கடந்த 2009–ம் ஆண்டு, சிங்கள ராணுவத்துடனான விடுதலைப்புலிகளின் போர் உச்சக்கட்டம் அடைந்தது. அப்போது (2009–ம் ஆண்டு, மே மாதம் 18–ந் தேதி) விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்று விட்டதாக அறிவித்தது. இது தொடர்பாக புகைப்படங்களும் வெளியாகின.
அத்துடன் இலங்கை உள்நாட்டு போரும் முடிவுக்கு வந்து விட்டது.
ஏற்காத தமிழ் ஆர்வலர்கள்
ஆனால் பிரபாகரன் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டார் என்ற இலங்கை அரசின் அறிவிப்பை இன்னும் பல தமிழ் அமைப்புகளும், தமிழ் ஆர்வலர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
‘‘பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், மீண்டும் வருவார், தனி ஈழ விடுதலைப்போரை மீண்டும் முன்னெடுத்துச்செல்வார், தமிழ் ஈழம் மலரும்’’ என்று பலரும் கூறி வருகிறார்கள். பிரபாகரன் கொல்லப்பட்டதாக படங்கள் வெளியிடப்பட்டபோது, அவரைப் போன்ற தோற்றம் கொண்டவரைத்தான் சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்று விட்டது என்றும் தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது.
உயிருடன் பிரபாகரன்?
இந்த நிலையில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், சிங்கள ராணுவத்துக்கு லஞ்சம் வழங்கி அவர் தப்பிச்சென்று விட்டதாகவும், இந்தியாவுக்கு வந்த அவர் டெல்லியில் திரிலோக்புரி என்ற இடத்தில் உள்ள ஓட்டலில் ஒன்றரை வருடம் தங்கி இருந்ததாகவும்
 அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த புத்தகத்தின் பெயரையோ, அதை எழுதியது யார் என்றோ எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
பரபரப்பு
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என புத்தகம் வெளியாகி இருப்பது குறித்து வெளியான தகவலால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசும், அந்த நாட்டின் அரசியல்வாதிகளும் கலக்கம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும், இலங்கை ராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர், பிரபாகரன் தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என மறுத்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக