18

siruppiddy

அக்டோபர் 11, 2013

மாலதியின் 26 ம் ஆண்டு நினைவு நாள்


2ம் லெப்டினண்ட் தாய் மண்ணுக்காக சமராடி வீரப் பெண்ணாக வீர காவியம் அடைந்த தமிழீழத்தின் முதல் வீராங்கனையான 2ம் லெப். மாலதியின் 26ம் ஆண்டு நினைவு நாள் யேர்மனி பேர்லின் நகரில் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.

ஈகைச் சுடரேற்றப்பட்டு தொடர்ந்து சுடர்வணக்கவேளையில் மக்களால் அக வணக்கம், சுடர்வணக்கம் செலுத்தப்பட்டது.
மாலதியின் வீரத்தையும் தியாகத்தையும் தமிழீழப் பெண்களின் தலை நிமிர்வையும் நெஞ்சில் தாங்கியபடி  மக்கள் மற்றும் மேஜர் பாரதி கலைக் கல்விக்கூட மாணவர்கள்  தமது அஞ்சலியை செலுத்தினர்.

எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை - 2ஆம் லெப். மாலதி 26 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள்.
பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள்.
நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள்.
அன்று(10.10.1987 ) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த, வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள்.

1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்தத் தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதித் தாக்குதல்.
புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அது தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகவும் அமைந்தது.

நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள்.

உலகின் சரி பாதி மக்கள் தொகையைக் கொண்ட பெண்கள் ஏன் வீட்டுக்குள் இருக்க வேண்டும்,விடுதலைப் போராட்டங்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என்ற கருத்தை பெண்களிடம் விதைத்து, விடுதலைப் போரில் பங்கு கொள்ள வைத்தவர் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள். விடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும், தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம் என்ற தேசியத் தலைவரின் எண்ணம், பெண் புலிகள் என்ற தோற்றமாயிற்று.

ஆணும், பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது, கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள், என பெண் போராளிகள் பற்றி தேசியத் தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் பலதடவை குறிப்பிட்டது அனைவரும் அறிந்ததே.

தமிழ் ஈழம் மன்னாரை சேர்ந்த,சகாயதேவி பேதிருப்பிள்ளை,(1967 சனவரி 01 – வீரச்சாவு 1987 ஒக்ரோபர் 10 ) என்ற இரண்டாம் லெப்டினண்ட் மாலதி,ஈழ விடுதலைப் போரில் முதல் பெண் வீராங்கனையாக சிறப்பிக்கப்பட்டு,மாலதி படையணியும் உருவாக்கப்பட்டது. எத்தனையோ மாவீரர்களும் வீராங்கனைகளும் விடுதலைப் போரில் உயிர் துறந்தாலும்,அவர்களின் உயிருக்கு பரிசாக தமிழ் ஈழம் விரைவில் உருவாகும் என்ற

நம்பிக்கையுடன்,ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, அனைத்து உலக தமிழர்களும் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு காத்திருக்கிறார்கள்.

மாவிரர்களின் நினைவிடங்கள்,கல்லறைகள் அனைத்தையும் சிங்களம் நிர்மூலமாக்கினாலும் கூட, அவற்றிற்கு உயிர் கொடுத்து நினைவில் நிற்க வைக்க வேண்டியது, நாடு வேறுபாடுகள் இல்லாமல்,அனைத்து தமிழர்களின் கடமையுமாகும்.

மாவீரர்களை நினைவு கூர்ந்து  எமது லெட்சியம்  நிறைவேற பலம் சேர்ப்போம் .


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக