யாழ்.மாவட்டத்தினில் முன்னர் இருந்த நிர்வாகத்தில் இடம்பெற்ற ஊழல்களையும் புதிய அரச அதிபர் சரி செய்ய வேண்டும். இதனூடாக யாழ்ப்பாணத்தில் சிறந்த நிர்வாகம் ஒன்றினையே நாம் அரச அதிபர் ஊடாக எதிர்பார்க்கின்றோம். நாங்கள் கொழும்பிலும், வடக்கிலும் எவ்வாறானதொரு காத்திரமான நல்லாட்சியை எதிர்பார்க்கின்றோமோ அதேபோல யாழில் சிறந்த நிர்வாகம் அமைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ்பிறேமச்சந்திரன்.
பொருளாதார அமைச்சின் கீழ்
வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி யாழ். கோப்பாய் பிரதேச செயலகர் பிரிவில் இன்று திறந்து வைக்கப்பட்டது.அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய இந்த நிகழ்விற்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள்
கிராம மக்கள் கலந்து கொள்ளக் கூடாது என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா மற்றும் அவருடன் இயங்கியவர்கள் பத்திரிகை செய்தியை கொடுத்துள்ளனர்
ஆனால் நீங்கள் அரச உத்தியோகத்தர்களே. எனவே மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்கள் , அரசுக்கு கடமைப்பட்டவர்கள், அரசு கூறும் வேலைகளை நீங்கள் செய்ய வேண்டும்.
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கட்சிக்கு வேலை செய்பவர்கள் அல்லர். ஆனாலும் இங்கு கட்சிக்கு வேலை செய்வதனையே நாங்கள் பார்க்கின்றோம். கட்சிக்கு வேலை செய்யாது மக்களுக்கு சேவை செய்யுங்கள் . மக்களாகிய எங்களது வரிப்பணத்தில் தான் நீங்கள் சம்பளம் பெறுகின்றீர்கள் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் . நீங்கள் அந்த வரிப்பணத்திற்கு துரோகம் செய்வது என்பது தமிழ்
மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
எதிர்வரும்காலத்திலாவது உத்தியோகத்தர்கள் போல நடந்து கொள்ளுங்கள். மேலும் தற்போது ஆட்சி மாறியுள்ளது. கொழும்பில் பல்வேறு பட்ட ஊழல் செயற்பாடுகள் இடம்பெற்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் வடக்கு மாகாணத்தில்
என்ன நடக்கின்றது? இங்குள்ள ஊழல்கள் குறித்து யார் பேசுகின்றனர்? இ.போ.ச வின் வடக்கு மாகாணத்திற்கு என பொறுப்பான ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மேல் அதிகரித்த ஊழல் குற்றச்சாட்டுக்கள். இலங்கையில் உள்ள 12 போக்குவரத்து பிராந்தியங்கள் இருக்கின்றன. அதில் 11 பிராந்திய தலைவர்களையும் மாற்றிவிட்டனர்.
ஆனால் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் மாற்றவில்லை. அதற்கு அமைச்சர் ரிசாட் பதியுதினே காரணம். எனினும் அவரது ஊழல் என்பது பல இலட்சங்கள். இருப்பினும் குறிப்பிட்டவரை மாற்றுவதற்கு அமைச்சருக்கும் முடியவில்லை. போக்குவரத்து சபையின் தலைவருக்கும் முடியாதுள்ளது. இருப்பினும் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அண்மையில் குறித்த உத்தியோகத்தர் மாற்றப்பட்டார்.
ஆனாலும் அவருக்கு முக்கிய பதவி ஒன்று வழங்க வேண்டும் என்பதற்காக வடக்கு மாகாண போக்குவரத்து சாலை இரண்டாக பிரிக்கப்பட்டது. தமிழ் மக்கள் மாத்திரம் ஊழல் எல்லாத்தையும் ஏற்றுக் கொள்ள முடியுமா? தமிழ் மக்களுக்கு என்ன தலைவிதியா? தமிழ் மக்களுக்கு சரியான நிர்வாகம் கிடைக்க வேண்டாமா? இங்கு வருபவர்கள்
கொள்ளையடித்துச் செல்ல முடியுமா? இவை எதுவும் எதிர்வரும் காலத்தில் நடைபெறக்கூடாது .
இதேவேளை கடந்த காலத்தில் பல ஊழல் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. எனவே புதிய அரச அதிபரின் நிர்வாகத்தில் இவை நடைபெறக் கூடாதெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக