18

siruppiddy

ஜூலை 26, 2015

கைத்துப்பாக்கி உடன் மீண்டும் வெள்ளை வான்

மிரிஹான பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் வேகமாகச் சென்ற WP-JP-9244 இலக்கம் கொண்ட வெள்ளை நிற வான் ஒன்றைப் பொலிஸார் சோதனையிட எடுத்த முடிவு, பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
அந்த வாகனத்தைச் சோதனையிட்ட போது, சிவில் உடையில் இருந்த மூவரில் ஒருவரிடம் இருந்து 13 ரவைகள் நிரப்பப்பட்ட, 9 மி.மீ கைத்துப்பாக்கி இருந்தமை பொலிஸாருக்கு அதிர்ச்சியளித்தது.
அந்த வாகனத்தில் இன்னொரு இலக்கத் தகடு உள்ளே கழற்றி வைக்கப்பட்டிருந்தமை மற்றொரு அதிர்ச்சியை அவர்களுக்கு அளித்தது. அது இராணுவத்துக்குச் சொந்தமானது. SLA- 59466 என்பது தான் அந்த வெள்ளை நிற வாகனத்தின் உண்மையான இலக்கத் தகடு.
ஆனால், பொலிஸாரிடம் பிடிபட்ட போது, அதில் சிவிலியன்களால் பயன்படுத்தப்படும் வாகனத்தின் இலக்கத் தகடு பொருத்தப்பட்டிருந்தது.
அந்த இலக்கத் தகடு, அல்விஸ் பிளேஸ், கொழும்பை முகவரியாகக் கொண்ட ஒரு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டது.
போலி இலக்கத் தகடு, சிவில் உடையில் இருந்தவர்களிடம் கைத்துப்பாக்கி, வெள்ளை நிற வான், இந்த மூன்றுமே பொலிஸார் சந்தேகம் கொண்டு, அவற்றைக் கைப்பற்றுவதற்குப் போதுமான அடிப்படையான விடயங்களாக இருந்தன.
அவற்றுக்கு மேலாக, அந்த வெள்ளை நிற வான் மடக்கிப் பிடிக்கப்பட்ட இடம், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷவின் வீட்டுக்குச் செல்லும் பாதைக்கு அருகில் இருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கூட மிரிஹான பகுதியில் தான் தங்கியிருக்கிறார். அந்த இடத்தின் முக்கியத்துவம் மற்றும் குறிப்பிட்ட வானின் சந்தேகப்படும்படியான விடயங்கள் அனைத்தும், தான் கடந்த வாரத்தில் வெள்ளை வான் குறித்த பரபரப்பு ஏற்படுவதற்குக் காரணம்.
இது தேர்தல் நேரம் என்பதாலும், இந்தத் தேர்தலில் கொள்கையை முன்னிறுத்துவதை விட உணர்ச்சியைக் கிளப்பும் உத்திகளிலேயே எதிர்க்கட்சியினர் அதிகம் நம்பிக்கை கொண்டுள்ளதாலும், இந்த விடயத்தை கவ்விப்பிடித்துக் கொண்டனர்.
தமது அரசாங்கத்தின் மீது வெள்ளை வான் கடத்தல்கள் குறித்து குற்றஞ்சாட்டியவர்களின் ஆட்சியில், இப்போது எங்கிருந்து வந்தது வெள்ளை வான் என்று பிரச்சார மேடைகள் அதிர்ந்தன.
மஹிந்த ராஜபக்ஷவுக்கும், கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சிலர் கூற, விமல் வீரவன்ஸவோ, அவர்களைப் படுகொலை செய்யும் திட்டத்துடனேயே இந்த வெள்ளை வான் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதனால், வெள்ளை வான் விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்தது.
என்றாலும், இந்த வெள்ளை வான் இராணுவத்துக்குச் சொந்தமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இது புலிகளிடம் இருந்து முள்ளிவாய்க்காலில் கைப்பற்றப்பட்ட வாகனங்களில் ஒன்றாகும்.
இந்த வாகனத்தை, மேஜர் ஜெனரல் பிரசன்ன டி 
சில்வா தனது பாதுகாப்பு பிரிவினரின் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
அதில் பயணம் செய்த போது கைது செய்யப்பட்ட மூன்று படையினரில் ஒருவர் கொமாண்டோப் படைப்பிரிவையும், இருவர் காலாட்படைப் பிரிவுகளையும் சேர்ந்தவர்கள். இந்த மூவரும், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்பு அதிகாரிகள் என்பது உறுதி 
செய்யப்பட்டுள்ளது.
அதுபோலவே, அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 9 மி.மீ கைத்துப்பாக்கியும், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்டது என்றும், அதனை அவர் 15 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இந்தத் துப்பாக்கியை, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பயன்படுத்தியிருந்தாலோ, அல்லது அவருடன் செல்லும் போது அவரது பாதுகாப்பு அதிகாரிகள் வைத்திருந்தாலோ இந்தளவுக்கு விவகாரமாக மாறியிருக்காது.
மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா இல்லாமல், தனியாக அதுவும் சிவில் உடையில் இவர்கள் துப்பாக்கியுடன் சென்றது தான் முதல் சர்ச்சை.
அதுபோலவே, இராணுவ இலக்கத் தகடு கொண்ட வாகனத்தில் போலியான இலக்கத்தகடு பொருத்தப்பட்டது அடுத்த சர்ச்சை.
இராணுவத்தினருக்கு கடமை நேரம் என எதுவும் இல்லை என்றும், தேவைப்படும் போது பாதுகாப்புக்காக துப்பாக்கியை எடுத்துச் செல்ல முடியும் என்றும் சில வாதங்கள் பாதுகாப்புத் தரப்பினால் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், இது எத்தகைய விபரீதங்களுக்கு காரணமாகலாம் என்பதற்கு, கடந்த காலத்தில் நிகழ்ந்த பல கசப்பான சம்பவங்கள் சாட்சியாக உள்ளன. இந்தச் சர்ச்சையில் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா சிக்கியிருப்பது தான் ஆச்சரியமானது.
அதுவும் தீவிர தேசியவாதிகளாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் விமல் வீரவன்ஸ போன்றவர்களினாலேயே, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா இவ்வாறு கீழ்த்தரமாக விமர்சிக்கப்படும் நிலைக்குள்ளாகியிருப்பது வேடிக்கை.
ஏனென்றால், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா போரில் முக்கிய பங்காற்றிய ஒரு அதிகாரி என்பதை அவர்கள் அறியாமல் இருக்க முடியாது.
இறுதிக்கட்டப் போரில், முகமாலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி – கரையோரமாக முன்னேறிய 55ஆவது டிவிசனுக்குத் தளபதியாக இருந்தவர் அவர்.
போர் முடிந்த பின்னர், இரண்டு ஆண்டுகள் அவர் லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றியிருந்தார். இப்போது, கொமாண்டோப் படைப்பிரிவுக்குத் தளபதியான அவர், பாதுகாப்பு அமைச்சில் இணைப்பதிகாரியாகப் பணியாற்றுகிறார்.
பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்கவுடன் நேரடியாக இணைந்து பணியாற்றுகிறார் அவர். வெள்ளை வான் மஹிந்த ராஜபக்ஷவையும், கோத்தாபய ராஜபக்ஷவையும் படுகொலை செய்யவே வந்ததாக விமல் வீரவன்ஸ கூறியது, இவரையும் நேரடியாகவே தாக்கியதற்குச் சமம்.
அதனால் தான் முன்னாள் படை அதிகாரிகளான ரியர் அட்மிரல் சமரதுங்க, கேர்ணல் ஜெயவி பெர்னாண்டோ, கேர்ணல் ரணவக்க போன்றவர்கள், விமல் வீரவன்ஸவை கடுமையாக விமர்சித்திருக்கின்றனர்.
என்றாலும், இந்த விவகாரத்தில் பல சந்தேகங்களும், கேள்விகளும் இருப்பது உண்மை.
போலி இலக்கத்தகடு பொருத்திக் கொண்டு, சிவில் உடையில், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் துப்பாக்கியுடன், அவரது மெய்க்காவலர்கள் எதற்காக வெளியில் நடமாடினர் என்ற கேள்விக்கான விடை இன்னும் வெளிவரவில்லை.
இது தொடர்பாக மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவை பொலிஸார் 4 மணிநேரம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அப்போது, நுகேகொடையில் உள்ள தனது வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கொழும்பு வருமாறு தனது பாதுகாவலர்களுக்குத் தானே கூறியதாகவும், அங்கிருந்து அவர்களுடன் கண்டிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
பாதுகாப்பு அமைச்சில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தனது கைத்துப்பாக்கியை பாதுகாப்பு அமைச்சுக்குள் கொண்டு செல்ல முடியாது.
அத்தகைய வேளைகளில் தனது மெய்ப்பாதுகாவலர்களிடம் அதனை ஒப்படைத்து விட்டுச் செல்வது வழக்கம். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தான் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
பொலிஸார் கைது செய்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் மெய்க்காவலர்கள் மூவரையும் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரித்திருக்கலாம். ஆனால், மறுநாளே நீதிமன்றத்தில் நிறுத்தினர். அவர்களைப் பிணையில் விடுவிப்பதற்கும்
 எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
எனினும், ஒருபக்கத்தில் பொலிஸ் தரப்பும், இன்னொரு பக்கத்தில் இராணுவப் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மூன்று படையினரும் இராணுவப் பொலிஸாரின் தடுப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்றும், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா மற்றும் ஏனைய மூன்று படையினர் தவறிழைத்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது இராணுவச் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர கூறியிருக்கிறார்.
இந்த வெள்ளை வான் விவகாரம், கடந்த ஆட்சியில் நடமாடிய வெள்ளை வான்ளைப் போன்ற ஆபத்தான ஒன்றா? அல்லது ஒன்றுமேயில்லாத விடயமா? என்பது விசாரணைகளில் தான் தெரியவரும்.
எவ்வாறாயினும், கடந்த காலங்களில் புலிகளிடம் கைப்பற்றிய பலநூறு வாகனங்கள் இராணுவத்தினரால் பயன்படுத்தப்படுவதும், அவை முற்றிலும் சட்டரீதியான பயன்பாட்டில் இல்லை என்பதும் உறுதியாகியிருக்கிறது.
அண்மையில், முல்லைத்தீவு - பரந்தன் வீதியில் இலக்கத் தகடு இல்லாத வெள்ளை வான் ஒன்று மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகிக் கவிழ்ந்து கிடந்தது.

அதற்கு யாரும் உரிமை கோரியிருக்கவில்லை. அதில் பயணம் செய்தவர்கள் காயமடைந்ததாகவும் ஒருவர் இறந்ததாகவும் கூடத் தகவல்கள் வெளியாகின.

எனினும், அதுபற்றிய விடயங்கள் எதுவும் பின்னர் வெளியிடப்படவில்லை. இதுபோன்ற பல வெள்ளை வானகள் இரகசியப் பயணங்களையோ, திட்டங்களை நிறைவேற்றவோ பயன்படுத்தப்படலாம். அதனையே இந்த வெள்ளை வான் சம்பவமும் உணர்த்தியிருக்கிறது.
எவ்வாறாயினும், தற்போது முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகள், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவைக் காப்பாற்றத் தவறாது. ஏனென்றால், அவர் போரின் இறுதிக்கட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஒரு படை அதிகாரி.
ஏற்கனவே, வெலிவேரியவில் சுத்தமான குடிநீருக்காகப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த உத்தர விட்டமை தொடர்பாக, பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட முக்கிய இராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அந்த விசாரணைகளில் குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்ட போதும் அவர்கள் காப்பாற்றப்பட்டனர். காரணம் போரில் அவர்கள் முக்கிய பங்காற்றியிருந்தனர்.
அதுபோலவே, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவையும், இந்த வெள்ளை வே சர்ச்சை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்க முடியாது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக